Home / கட்டுரைகள் / உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனற்றது

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனற்றது

சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனற்றது.

adeolu-eletu-38649-unsplash

தமிழ்நாட்டை அந்நிய நேரடி முதலீடுகளுக்கான சாதகமான புகலிடமாக காட்சிப்படுத்தும் பொருட்டு ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கூட்டுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மாநாட்டின் போது 2.40 லட்சம் கோடி ரூபாய் (ஏறத்தாழ 3600,கோடி டாலர்கள்) மதிப்பிலான முதலீட்டை கவர்ந்ததாக பெருமிதம் கொள்கிறது அரசு. இது மக்களின் நன்மைக்கானது என்பது போல தமிழக அரசால் காட்டப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களையும் ஏழை மக்களின் துயரங்களை மனதில் கொள்வதற்கு பதிலாக இலாபத்தை பெருக்குவது என்ற ஒரே நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது.

மாறாக தொழிலாளர்களின் சூழலோ நாளுக்கு நாள் மோசமாகிவருகின்றது. வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் மட்டும் 1.60 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி இருப்பதாக தமிழக கல்வியமைச்சர் செங்கோட்டையன் அவர்களே கடந்த ஜூலை மாதம் ஒரு கூட்டத்தில் தெரிவித்தார். மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் 2017 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழகத்தில் வேலையின்மையின் விகிதம் 3.8 விழுக்காடாக இருந்தது. இது இந்தியாவின் சராசரி விழுக்காடான 3.7 ஐ விட அதிகமாகும். தற்போது இது 4.5 விழுக்காட்டை தாண்டிவிட்டது. 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்ததாக கூறிக்கொள்ளும் இரண்டரை லட்சம் கோடி முதலீடானது வேலையின்மை பிரச்சனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இது காட்டுகிறது. இன்னொரு புறம் மக்களின் வாங்கும் சக்தி தேய்ந்து வருவதால் இந்தியாவிற்கு  வரும் முதலீட்டின் நிலையும் மோசமாக உள்ளது. மோடி தலைமையிலான அரசின் கடந்த 41\2 ஆண்டுகளில் முதலீட்டின் அளவானது மிக மோசமான அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் வெளியேறிய முதலீட்டின் அளவானது 1100 கோடி டாலர்களாகும். இந்தியாவினுள் வந்த முதலீடானது கடந்த ஆண்டை விட 400 கோடி டாலர்கள் வீழிச்சியடைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்களின் சொத்துக்கள் பெருமளவுக்கு குவிந்துள்ளதை கண்ட இந்திய பெருமுதலாளிகளோ பணத்தை இந்தியாவிலிருந்து வெளியே கொண்டுசென்று அதிக இலாபம் கிடைக்கும் வேறெங்காவது முதலீடு செய்கின்றனர். மக்களின் ஏழ்மை நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே நிலையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் 131 ஆக அதிகரித்துள்ளது. உண்மையில் இந்திய முதலாளிகளுக்கோ அல்லது வெளிநாட்டு முதலாளிகளுக்கோ இந்தியாவில் இலாபத்தை பெருக்குவதற்கு எந்த வழியும் இல்லாததால் முதலீடு செய்யும் அளவுக்கு நம்பிக்கை இல்லை. பொருளாதார சுணக்கமும் ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சியும் இந்தியாவின் பொருளாதார எதிர்பார்ப்புகள் இருண்டு போயிருப்பதை காட்டுகின்றன. தமிழகமோ அல்லது இந்தியாவின் வேறெந்த மாநிலமோ இதற்கு விதிவிலக்கல்ல.

samson-creative-91091-unsplash

ஆகவே இந்த முதலீட்டாளர்கள் மாநாடுகளின் உண்மையான நோக்கமானது சுரண்டலை அதிகப்படுத்துவதும், அதற்கு உதவுவதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள அரசை நிர்பந்திப்பதுமே ஆகும். தாங்கள் முதலீடு செய்ய விரும்பும் துறைகளில் மானியங்களை கொட்டிக்கொடுக்குமாறும், இலாபமீட்ட விரும்பும் துறைகளில் தனியார்மயத்தை தூரிதப்படுத்துமாறும் அரசை நிர்பந்திப்பதே முதலாளிகளின் முக்கிய நோக்கம். பெருமுதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்காக மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் நடவடிக்கையே இது. இதற்கு உதவும் பொருட்டு, தொழிலாளர் சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் திருத்துமாறு முதலாளிகள் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகள் பெரிதும் நம்பியுள்ள கல்வி உட்பட அனைத்து மக்கள் நலத்திட்டங்களுக்குமான செலவுகளையும் குறைக்கும்படி அரசுக்கு அழுத்தம் தருகின்றனர். 
எந்த பூர்ஷுவா கட்சி மத்திய மற்றும் மாநில அரசின் தலைமையில் இருந்தாலும் அவர்களால் சமூகத்தில் நிலவும் அடிப்படையான வர்க்க முரண்பாடுகளுக்கு ஒருபோதும் தீர்வு காண இயலாது. அந்நிய நேரடி முதலீடானது வேலைவாய்ப்பை அளிக்கும் என்பது போல என்ன தான் ஆசைவார்த்தை கூறப்பட்டாலும் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் ஏழை மக்களுக்கும் அதனால் எந்த உபயோகமும் இல்லை என்பதே உண்மை.

இந்திய வளங்களைக் கொள்ளையடிக்கும் பொருட்டு சர்வதேச நிதி மூலதனத்தை ஈர்ப்பது தற்போதைய நெருக்கடிக்கு தீர்வல்ல. உண்மையில் இது நெருக்கடியை தீவிரமடைய செய்து தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மேலும் நலிவடையவே செய்யும். இவ்வகை முதலீடுகளால் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. மாறாக இயற்கைக்கும் உயிராதாரங்களுக்கும் இவை சேதம் விளைவிப்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே இத்தகைய முதலீட்டு திட்டங்கள் தமிழ்நாடு முழுக்க அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கின்றன.

இந்த முதலாளிகளையும் அவர்களின் பாசாங்கு கொள்கைகளையும் நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். தொழிலாளிகளும் அவர்களது அமைப்புகளும் இந்த வல்லூறுகளை விரட்டியடிக்க ஒன்றுபட வேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களில் நடக்கும் எதிர்ப்பு போராட்டங்களுடன் நமது போராட்டங்களையும் இணைக்க நாம் முயற்சித்ததாக வேண்டும். சமீபத்திய 48 மணி நேர பொது வேலை நிறுத்தத்தில் 220 மில்லியன் தொழிளாலர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இது போன்ற அளப்பரிய போராட்ட உத்திகள் தொடர்வது எமது நலன்களை முன்னெடுத்துச் செல்ல அவசியமானது. அதே சமயம் வெறும் பொது வேலை நிறுத்தத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைள் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவைதான் போராட்டத்துக்கு முன் வரும் தொழிலாளர்களின் போராட்டத்தை வெற்றி நோக்கி முன்னகர்த்தும். தொழிலாளர்களின் உழைப்பை கொள்ளையடித்து தங்களது இலாபத்தை பெருக்கும் அனைத்து அந்நிய முதலீட்டாளர்களும் தங்களது சொந்த நாட்டின் தொழிலாளர்களால் வெறுக்கப்படுகின்றனர். அவர்களின் போராட்டங்களுடன் நமது போராட்டங்களையும் இணைப்பது உலகம் முழுக்க தனது சுரண்டலை விரிவுபடுத்த முனையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். சமீபத்திய கூகுள் தொழிலாளர்களின் சர்வதேச வேலை நிறுத்தமானது இத்தகைய சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான நமது நடவடிக்கைகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். இத்தகைய அனைத்து எதிர்ப்பு போராட்டங்களும் மிகச்சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தொலைநோக்கு பார்வையை கொண்டதும், தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நிற்கக்கூடியதுமான ஒரு சர்வதேச அமைப்பில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பானது இத்திசையை நோக்கி திரள்வதற்கான அடிப்படையாகும். ஏனெனில் நமது போராட்டமானது வெறும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி முதலாளித்துவ அமைப்பிற்கெதிராக உலகின் அனைத்து பகுதிகளிலும் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களுடனும் தொடர்புடையது. முதலாளித்துவ அமைப்பு உயிரோடிருக்கும் வரை வர்க்க சுரண்டலை நம்மால் ஒழிக்க முடியாது. ஆகவே நமது ஒவ்வொரு தனித்தனியான போராட்டமும் இந்த அழுகிப்போன அமைப்பிற்கு எதிராக சர்வதேச தொழிலாளர்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்களுடன் தொடர்புடையது. பூமிப் பந்து முழுதும் ஜனநாயக சோசலிசத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தை நிறுவ தவறினோமானால் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருந்துக்கொண்டிருக்கும் இந்த அசுரத்தனமான அமைப்பிடமிருந்து நம்மால் தப்பிக்க இயலாது.

இந்த நோக்கத்திற்காகவே தொழிலாளர் அகிலத்திற்கான கமிட்டியின் (CWI) வேலைகளில் தீவிரமாக பங்காற்றி வருகின்றது. சர்வதேச முதலாளிகள் தமிழகத்திற்கு எதிராக தீட்டும் இந்த சதியை முறியடிக்க வேண்டுமென்றால் நாம் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். உலக தொழிலாளர்களுடனான இணைப்பால் மட்டுமே நமது போராட்டம் சக்திவாய்ந்ததாக உருவெடுக்கும். நீங்கள் இக்கருத்தில் உடன்பாடு கொண்டவராக இருந்தால் எங்களுடன் கைக்கோர்க்க வேண்டுகின்றோம். எங்களை தொடர்பு கொண்டு விவாதியுங்கள்.

தோழமையுடன்: புதிய பொதுவுடமை இயக்கம்
New Socialist Alternative (CWI-INDIA)

About புதிய சோசியலிச இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top