செயற்குழு அறிக்கை
-புரட்சிகர இடதுசாரிகள் (CWIன் வெனிசுவேலா பிரிவு)
மொழிபெயர்ப்பு – நவீன் அங்கமுத்து
வெனிசுவேலா வெகுஜன தொழிலாளர்களின் அணிதிரட்டளுக்காக;
அதிகாரத்துவ ஊழலுக்கு முடிவு கட்டி உண்மையான சோசலிசம் கட்டியமைக்க;
வெனிசுவேலாவின் அரசியல் சூழ்நிலை கடந்த வாரத்தில் ஒரு அபாயகரமான புள்ளியை எட்டியுள்ளது. வெனிசுவேலாவின் தீவிர வலதுசாரித் தலைவரான ஜுவான் கைடோ ( சமீபத்தில் புரட்சிக்கு எதிரான தேசிய கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்) தன்னை தானே ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டுள்ளார். நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்தினை வீழ்த்தும் வகையில் தெருக்களை நிரப்புங்கள் என்று தமது ஆதரவாளர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்த்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க, லத்தீன் அமெரிக்க கனடா மற்றும் உலகின் மிக பிற்போக்குத்தனமான வலதுசாரி அரசாங்கங்களை சேர்ந்த, ஜெய்ர் போல்சனரோ (பிரேசில்) போன்றோர், டொனால்ட் டிரம்ப் தலைமையில் வெனிசுலாவின் ஒரே சட்டபூர்வ ஜனாதிபதி என்று ஜுவான் கைடோ வை ஆதரித்துள்ளனர்.
ஆட்சிக்கவிழ்ப்பு, ஏகாதிபத்திய உள்நாட்டு மற்றும் சர்வதேச வலதுசாரிகளால் திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டம்;
அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் பயன்படுத்தி அமெரிக்க வெளியுறவு செயலாளர் (சிஐஏ முன்னாள் இயக்குனர்) மைக் போம்பே, மதுரோ அரசாங்கம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். “நாங்கள் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தயாராக உள்ளோம்” என்கிறார் டிரம்ப். வெனிசுவெலா அதிதீவிர வலதுசாரி தலைவர் தொலைக்காட்சியில் தோன்றி நாம் பல ஆண்டுகளாக போராடியதை அடைவதற்கு நெருக்கமான தருணத்தில் இருக்கிறோம் என்றும் மதுரோ “தனது உயிரைக் காப்பாற்ற விரும்பினால் ராஜினாமா செய்ய வேண்டும்” எனவும் கூறுகிறார். பிற்போக்குத்தனமான சமூக கொள்கைகளுக்கு பெயர்பெற்ற லத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள், வாஷிங்டனில் எடுக்கப்பட்ட முடிவை “ஜனநாயகத்திற்காக” ஆதரிப்பது அவர்களது கடமை என்று கண்மூடித்தனமாக கூறிக்கொண்டு இந்த சதித் திட்டத்தினை ஆதரிக்கின்றனர். இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி தலைமைகளின் பெயர்களை அறிந்து கொண்டாலே இவர்களது நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும், கொலம்பியா ஜனாதிபதி டூக் (உறிப் நார்க்கோ பராமிலிட்டரி’யுடன் தொடர்பு படுத்தப் பட்டவர்) எக்குவடோர் ஜனாதிபதி மொரேனோ (எக்குவடோர் இடதுசாரிகளின் விரோதி). ஜனாதிபதி மக்ரி (அர்ஜென்டினா மக்களுக்கான சேவைகளை வெட்டி கடும் வாழ்வாதார நெருக்கடிகளை உண்டாக்கியவர். அதனால் பெரும் திரளாக மக்கள் கிளர்ந்தெழ வேண்டி இருந்தது.) ஹோண்டுரன் ஜனாதிபதி ஜூவன் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ். (கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையின் ஆதரவு கொண்டு ஒரு தேர்தல் மோசடியை நிறைவேற்றியவர்- மற்றும் பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அடக்குமுறை மூலம் கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பானவர்). அட்லாண்டிக்கின் மறுபுறத்தில் இருந்து இவர்களுக்கு ஊக்கமளித்து வரும் ஸ்பெயினின் பாப்லோ கேஸடோ, (பிபி) அல்பேர் ரிவேறோ (சியடனோஸ்) போன்ற ஐரோப்பிய வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரிகளும் வோக்ஸ் போன்ற பாசிச உறுப்புகளும் முன்வரிசையில் உள்ளனர். வலது சாரிய ஐரோப்பிய பாராளுமன்றமும் ஆதரவு வழங்க முன் வந்துள்ளது.
சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் வெனிசுலா மக்களின் பரிதவிப்பை ஜுவான் கைடோ மற்றும் வெனிசுலா வலதுசாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாழ்க்கை தரம் 50% வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 1000% வரையான விலைவாசி அதிகரிப்பு நிலைமையை மோசமாக்கிவிட்டது.
இந்தக் காரணங்களால் தான் ஒடுக்கப்படுவோரும் பலர் ஜுவான் கைடோவுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். நாம் இந்த வரிகளை எழுதுகையில் கூட வெனிசுலாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜுவான் கைடோ வின் அழைப்பை ஏற்றுள்ளனர். மதுரோ ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை இராணுவம் வெளியேற்றும் வரை வீதிகளை நிரப்புங்கள் என ஜுவான் கைடோ கோரிக்கை விட்டுள்ளார். 2002ஆம் ஆண்டு தோல்வியுற்ற தீவிர வலதுசாரிய ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையின்போது நிகழ்ந்தவைகள் அப்படியே பின்பற்றப்படுவது தெரிகிறது. மறுபுறம் கராகஸ் நகரில் இருக்கும் மதுரோ ஆதரவாளர்கள் ஓ’லியர் சதுக்கம் மற்றும் பிற முக்கிய நகரங்களிள் கூடியுள்ளனர் . அதே சமயம் அரசும் 2002ல் நடந்தது போல தம்மைக் காத்துக் கொள்ளும்படி மக்களிடம் கோர் உள்ளது. வெனிசுலா சோசியலிஸ்ட் கட்சியின்(பிஸ்யுவி), தலைவரான டிஸடோ காபெல்லோ, மிரா பிளோரஸ் அரண்மனைக்குச் சென்று எதிரி தாக்குதல்களை முறியடிக்கவும் மதுரோ’வை காப்பாற்றுவதற்கும் ஆயத்தமாக இருங்கள்” என கோரியுள்ளார்.
முதலாளித்துவத்துடன் அரசாங்கம் செய்து கொள்ளும் உடன்படிக்கைகள் சந்தர்ப்பவாத சக்திகளுக்கு இடம் தந்து விடுகின்றன.
2002’ல் சாவேஸ்’ற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கும் இந்த முறை நடைபெறும் ஆட்சிக்கவிழ்ப்புக்கும் முக்கிய வேறுபாடுகள் உண்டு. ஒட்டுண்ணி தனமான, ஊழல் நிறைந்த, பிற்போக்குத்தனமான, வெனிசுவேலா வலதுசாரிகள், இம்முறை இளம் பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்துறையினர் சிறு உடமையாளர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர உழைக்கும் வகுப்பினரையும் தமக்கு ஆதரவாக திரட்டியுள்ளனர். 2017’ஆம் ஆண்டு நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்களை ஏற்படுத்திய ‘கௌரிம்பா’ போராட்டங்களில் நடந்ததைப் போன்ற நிலை இது. இந்தச் சந்தர்ப்பத்தில் இளைஞர்கள், வேலை இழந்தவர்கள், தொழிலாளர்கள் கூட பொருளாதார நிலைமை மற்றும் அதிகப்படியான விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக அவநம்பிக்கையுடன் வலது மற்றும் தீவிர வலதுசாரிகளின் அறைகூவலை ஏற்று வீதிக்கு வந்துள்ளனர். ஆகஸ்ட் 2018’ல் மதுரோ அரசாங்கம், பொருளாதார மறு சீரமைப்பு திட்டம் என்ற போர்வையில் ‘சவரின் பொலிவார்’ என்ற ஒரு புதிய நாணயத்தை நிறுவியதன் மூலம் (60 BS – 1 டாலருக்கு சமம்) ஏற்கனவே அதிகமாக இருந்த பணவீக்கம் பேரழிவு நிலைகளை எட்டியது. இந்த நெருக்கடியின் தொடக்கத்திற்கு முன்னர் 1 டாலர் 3000 சவரின் பொலிவார்கள் பரிமாறப்பட்டது! இந்த ஆண்டு ஆறு அல்லது ஏழு இலக்க பணவீக்கம் ஏற்படும் என சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நடுத்தர அடுக்குகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது பல தொழிலாளர்கள் கூடப் பொது சுகாதார சேவையின் சரிவு காரணமாக தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் 2000BS வரை இருந்த சாதாரண பரிசோதனைகள் கூட 15000 BS’ஆக ஒரு சில நாட்களில் விலை அதிகரித்துள்ளது. பொதுத்துறை அலைபேசி நிறுவனமான ‘மோவில்நெட்’ கூட, 169 BS ஆக இருந்த தன் கட்டணத்தை 1300 BS’களாக உயர்த்தியுள்ளது. இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் அரசு தரப்பில் இருந்து வந்த ஒரே பதில் 400% சம்பள அதிகரிப்பு (4500 BS’ஆக இருந்தது 18000’ BS’ஆக) இந்த சம்பள உயர்வு ஆறு டாலர் மதிப்பிற்கு மட்டுமே ஈடானது.
வாக்குறுதி அளிக்கப்பட்ட ஊதியங்களை கைக்கு வரும் முன்னரே பணவீக்கம் முழுங்கிவிடுகிறது. அத்துடன் சமீபத்திய தற்காப்பு வேலை நிறுத்தங்களை நடத்திய தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட அரச அடக்குமுறையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இதே சமயம் பிஸ்யுவி அதிகாரத்துவத்தின் பெரும்பாலானோர் முதலாளித்துவ வர்க்கத்தை போல அனைத்து வகையான சலுகைகளையும் பெற்றுப் பொருளாதார வசதிகளோடும் வாழ்கின்றனர் என்ற உண்மை மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இது போன்ற காரணங்களின் அடிப்படையில் மக்கள் கோபமுற்று இருப்பதால், வலதுசாரிகள் மீண்டும் ஊக்கம் பெற்று, மதுரோ அரசின் மீது இந்த புதிய தாக்குதலை தொடுத்துள்ளனர்.
ஆனால் வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் வெற்றி, உழைக்கும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்காது. ஜுவான் கைடோ’வை இயக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமே, மூத்த ராணுவ அதிகாரிகளின் தலையீடுகள் மூலம் மதுரோ’வை தூக்கி எறிந்து வலதுசாரிகளுக்கு அதிகாரத்தை வழங்குவதாகும். பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மதுரோ, ராணுவ உயர் அமைப்புகளுக்கு மேலும் அதிக சலுகைகள், மற்றும் பொருளாதார அதிகாரப் பகிர்வு அளிப்பதன் மூலம் ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறார். இது தொழிலாளர்கள் மற்றும் மக்களிடையே அதிருப்தியை தூண்டி உள்ளது. இதுபோன்ற ஆட்சி வலுவிழக்கச் செய்யும் சமரசங்களை செய்து கொண்டிருப்பினும் பொலிவிய தேசிய ஆயுதப்படையின் (எப்ஏன்பி) விசுவாசம் மதுரோவிற்கு உறுதியாக கிடைக்கும் எனக் கூற இயலாது. 2017’ ல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு நடந்த தாக்குதலின் போது வெனிசுலாவின் வலதுசாரிகள், அட்டர்னி ஜெனரல் லுயிசா ஒர்டேக்கா’ன் ஆதரவுடன் சில மூத்த ராணுவ அதிகாரிகளை ராஜினாமா செய்ய வைத்து ஒரு விரிசலை ஏற்படுத்தினார். ஆனால் அப்போதைய இராணுவத் தலைமைகளால் வலதுசாரியக் கொள்கைகளைக் கொண்டு அவர்கள் எதிர்பார்த்த வெகுஜன மக்கள் எழுச்சியை உண்டு செய்ய முடியாததும், அதை உழைக்கும் ஏழைகளுக்கு பரப்ப முடியாததாலும் அவர்கள் முயற்சி தோல்வியுற்றது. மேலும் அப்போதைய வலதுசாரிகளின் தீவிரவாத செயல்களால் வெறுப்புற்ற உழைக்கும் வர்க்கம் அரசின் கொள்கைகளால் சிரமங்களை அனுபவித்து போதிலும் பிஸ்யுவி’ன் ஏனசி’விற்கு கடைசி வாய்ப்பளிக்க தயாராக இருந்தனர். ஆனால் இப்போது சூழ்நிலை வேறாக உள்ளது.
பிஸ்யுவி’ன் அதிகாரத்துவம் சோசலிசத்தை பாதுகாப்பது இல்லை
சர்வதேச பிற்போக்கு சக்திகளின் ஊடகம் வெனிசுலாவின் நிகழ்வுகளை சோசலிசத்தின் தோல்வி என முன்வைக்கின்றன. வெனிசுலா பிஸ்யுவி’ன் அதிகாரத்துவ தலைவர்கள் கூட இந்தப் பேரழிவு கொள்கைகளை(முதலாளித்துவ வர்த்தக உடன்படிக்கைகளை) “ சோசியலிச மாற்றத்திற்கான பாதை” என்று வகைப்படுத்தியுள்ளனர். இந்த பொருளாதாரச் சரிவு சூழ்நிலையை வலதுசாரிகள் மக்களிடையே குழப்பத்தை உண்டாக்குவதற்கு பயன்படுத்துகின்றனர். சோசலிசம், தொழிலாளர் கட்டுப்பாடு மற்றும் புரட்சியின் இடதுசாரி கொள்கைகளையும், இவை பற்றி மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் மன உறுதியையும் இழிவுபடுத்த பயன்படுத்துகின்றனர்.
உண்மையில் மதுரோ மற்றும் பிஸ்யுவி தலைவர்களால் செயல்படுத்தப்படும் திட்டம் சோசலிசத்தில் இருந்து மாறுபட்டது. 2013’ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள், மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகள் வாக்களித்த சமூக நலத்திட்டங்களில் இருந்துகூட முற்றிலும் வேறுபட்டுள்ளது தற்போதைய கொள்கைகள்.
அன்றிலிருந்து, சீன அரசாங்கம் மற்றும் ஸ்டாலினிச கொள்கை’யினரால் ஈர்க்கப்பட்ட மதுரோ’வும் அவரது கூட்டாளிகளும் வெனிசுலா முதலாளித்துவ வரலாற்றின் மிக மோசமான நெருக்கடியை தங்களால் நிர்வகிக்க முடியும் என்று வெனிசுலா மற்றும் சர்வதேச ஆளும் வர்க்கத்தை நம்ப வைக்க முயற்சித்து வருகின்றனர். சமீபத்திய மாதங்களில் அவர்கள் நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களை மக்கள் மேலான மிகவும் மூர்க்கமான தாக்குதல்கள் மூலம் தீர்க்க முயன்று வருகின்றனர். நலத்திட்ட நிறுத்தங்கள் மற்றும் ஊதிய குறைப்புகள், பொது நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது போன்ற மோசடியான பயனற்ற “ புரட்சிகர மாயாவாதம்” மூலம் மூடிமறைக்க முயற்சித்து வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் மூலம் பிஸ்யுவி மக்களிடம் பெற்றிருந்த மிகப்பெரும் சமூக ஆதரவை அதிவேகத்தில் இழந்துவருகின்றனது. முன்னர் மதுரோ அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நிதியுதவிகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை பெற்றுவந்த பூர்சுவா முதலாளிகள் தற்போது ஏகாதிபத்திய தரகர் உடன் சேர்ந்துகொண்டு நேரடியாக அரசியல் அதிகாரம் பெற காய் நகர்த்தி வருகின்றனர். நேர்மையற்ற நிர்வாகிகள், ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட அதிகாரத்துவ “ சோஷலிஸ” மாதிரியே இப்போதைய நெருக்கடியின் காரணியாகும். அவர்களின் பொறுப்பற்ற செயல்கள் பெருமைமிகு “ பொலிவிய புரட்சியின்” வெற்றிப் பலன்களை மழுங்கடித்து சந்தர்ப்பவாதிகளுக்கு இடம் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஊர்களிலும், தொழிற்சாலைகளிலும் செயற்குழுக்களை உருவாக்க வேண்டும், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும், முதலாளித்துவத்தையும், அதிகாரத்துவத்தையும், தோற்கடிப்பதற்கு ஒரு இடதுசாரி ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்
ஜுவான் கைடோ ஒரு பசுத்தோல் போர்த்திய புலியைப் போல “அனைவருக்குமான சமரச அரசாங்கத்தைப்” பற்றி பேசுகிறார். இந்த வலதுசாரிப் பிற்போக்கும் – தினமும் அதை ஆதரிக்கும் சக்திகளும் -அதிகாரத்திற்கு வந்தால், அது ஏற்கனவே சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு துரதிஸ்டவசமாக அமையும். அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார நோக்கமே இன்னும் கூடுதலான பணி நீக்கங்கள், சமூக நலத் திட்ட செலவினங்களை குறைத்து விடுவதே. இது மட்டுமின்றி இந்த சதியைத் தூண்டிவிடும் அண்டை நாட்டு சக்திகள் – போல்சனரோ, டூக், மக்ரி’ஐ போல தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்களை அடக்கி, அவர்களின் மீது மிருகத்தனமான தாக்குதல்களை அரங்கேற்றுவது அவர்களின் நோக்கம் ஆகும்.
தொழிலாள வர்க்கம் மற்றும் அரசியல் உந்துதல் பெற்ற வெனிசுவேலா மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட்சிப்பறிப்பு சதிக்கு எதிராக எதிர்ப்பை செய்தாகவேண்டும். ஜுவான் கைடோ, வலதுசாரி மற்றும் ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்களைக் எதிர்ப்பதன் மூலம் நாம் தொடங்க வேண்டும். நமது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் என்ன என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும் –அதே சமயம் வலதுசாரிகளின் பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஒரு பேராபத்து என்று அடையாளப்படுத்தவும் வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் இடங்களிலும் நாம் கூட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். ஒவ்வொரு வேலை மையத்திலும், ஒவ்வொரு ஊர்களிலும் தொழிலாளர்கள் மற்றும் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க செயற்குழு உருவாக்குவது அவசரமானது. உண்மையான சோசியலிச வர்க்க வேலைத்திட்டத்தை பாதுகாத்து, பெரிய தனியார் ஏக போகங்களையும் வங்கிகளையும் பறிமுதல் செய்து, பணவீக்கம் மற்றும் அதிகாரத்தின் சலுகைகள் நீக்கப்பட்டு உண்மையான அதிகாரத்தை தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளுக்கு ஒப்படைக்கப்பட முயல வேண்டும். நாம் பாரிய அணிதிரட்டல்களை முன்னெடுக்க வேண்டும். அதோடு வலதுசாரிகளின் வன்முறைக்கு எதிராக சட்டபூர்வமான சுய பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மதுரோ அரசாங்கம், மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் செயல்பாடுகள் மூலம் சதிப்புரட்சியை தடுக்க முடியாது என்பதை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவம் காட்டுகிறது. மதுரோ’வின் கொள்கைகள், அதிகாரத்துவம் மற்றும் ஊழல்களே , வலதுசாரிகளின் தற்போதைய எழுச்சி மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு வழிவகுத்தது. தொழிலாளர் வர்க்கத்திற்கும் வெனிசுலா மக்களுக்கும் துன்பகரமான விளைவுகளை தவிர்ப்பதற்கான ஒரே வழி இடதுசாரிகளின் ஒரு ஐக்கிய முன்னணியை எழுப்புவதே ஆகும், இந்தப் பேரழிவை ஏற்படுத்தியவர்களிடமிருந்து முற்றிலும் தன்னிச்சையான, ஒரு ஜனநாயக நிர்வாகத்தை நிறுவுவதற்கான அதிகாரத்தை தொழிலாளர்கள் , மற்றும் சுரண்டப்பட்ட மக்களுக்கு அளித்து, சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் அனைத்து மட்டங்களில் இருந்தும் பங்கு பெறும் நேரடி ஜனநாயகம் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும். முதலாளித்துவ சொத்துக்களை அரசுடமையாக்கி தொழிலாளர்களின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் முன்பு போல, வேலை வாய்ப்பை உருவாக்கி, உற்பத்தியை அதிகரித்து சமூக மாற்றத்தை உருவாக்குதல் வேண்டும்.
கால விரயம் இன்றி நாம் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை வென்றெடுக்க வெகுஜன அணிதிரட்டல் உடன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து தொடங்கி, உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும், தொழிலாள வர்க்கமும் வலதுசாரிகளின் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியையும், அந்த சதியின் நீட்சியாக வலதுசாரி சர்வதேச ஆலோசகர்களால் திட்டமிடப்பட்டு வரும் வன்முறையையும், முறியடிப்பதை கடமையாகக் கொள்ளவேண்டும். உழைக்கும் மக்களால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற முடியும்.