Home / கட்டுரைகள் / பெண்களின் எதிரி யார்?

பெண்களின் எதிரி யார்?

பெண்கள் தினத்தன்று அதன் தோற்றம், வரலாறு, போராட்டங்களைப் பற்றி எழுதுவது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது என்று நீங்கள் எண்ணலாம். இந்த பதிவில் இருக்கும் பல விடயங்களைப் பலர் முன்கூட்டியே அறிந்திருக்கலாம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் தீர்வு இடதுசாரிகளுக்கு பரிச்சயமான ஒன்று தான். இருப்பினும் பிரச்சனைகள் மாறவில்லை இன்னும் தீவிரம் அடைந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்கையில் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கவும் நாம் செல்ல இருக்கும் பாதையை அலசி பார்ப்பதற்கான தேவையும் இருக்கின்றது.

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தின் வரலாறு :

நீராவி இன்ஜினின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட தொழிற்புரட்சி முதலாளித்துவ சமூகத்தைத் தோற்றுவித்தது. இக்காலகட்டத்தில் பெண்கள் அதிகபட்ச சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

அமெரிக்காவின் லோவேல்லில் சராசரியாக ஒரு வாரத்திற்கு 81 மணிநேரம் வேலைக்கு, வெறும் $3 கூலியாக வழங்கப்பட்டது. இதில் கிட்டதட்ட பாதி, அதாவது $1.5 தங்குவதற்கும், உணவுக்கும் வசூலிக்கப்படும். 1844-ம் ஆண்டு பெண்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்நாட்டுப் போர் காரணமாகப் பல பெண்கள் தங்கள் கணவரை இழக்க நேரிட்டது. அவர்கள் அடுத்தவேளை உணவிற்காக பணிக்குச்செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆண்கள் அவர்களது தொழிற்சங்கத்தில் பெண்களை ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால், பெண்கள் தங்களுக்கான தொழிற்சங்கத்தை கட்டியெழுப்பவேண்டிய நிலை ஏற்பட்டது.

1857-ம் ஆண்டு மார்ச் மாதம் வாக்குரிமை, வேலைக்கு ஏற்ற ஊதியம், குழந்தை தொழிலாளி முறை ஒழிப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தைக் காவலர்கள் கலைத்துவிட்டாலும் 2 வருடங்கள் கழித்து

அதேமாதம் பெண்கள் அவர்களுக்கான தொழிற்சங்கத்தை கட்டியமைத்தனர்.

1900-ல் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பெண்கள் கடினமான பணிச்சூழலில் வேலைசெய்ய நேர்ந்தது. 1903-ம் ஆண்டு மேல்தட்டு மற்றும் நடுத்தர அறிவுஜீவி பெண்களின் ஆதரவோடு ட்ரையங்கள் வேஸ்ட் மற்றும் லிசர்சென் அண்ட் நிறுவனத்துக்கு எதிராகப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்காலகட்டத்திலிருந்த முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்த அரசும் சட்டமும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தது. போராட்டத்திற்கான செலவையும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான செலவையும் தொழிற்சங்கம் ஏற்றுக்கொண்டது.

போராட்டம் கலைக்கப்பட்ட ஓராண்டிற்கு பின்னர், ட்ரையங்கள் வேஸ்ட் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது. வேலை நேரத்தின் போது ஓய்வு எடுக்கக் கூடாது என்ற காரணத்தினால் ஆபத்துக் காலத்தில் வெளியே செல்ல உபயோகிக்கும் கதவுகளை வெளியே இருந்து பூட்டிவிட்டதால் பணியாளர்களால் வெளியே செல்ல முடியவில்லை. இவ்விபத்தில் 146 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள், பெரும்பாலும் 13-25 வயதிற்கு உட்பட்ட பெண்கள் ஆவர். இச்சம்பவம் தொழில் சட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நடந்த சர்வதேசிய பெண்களின் மாநாட்டில் இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பபட்டன.

அமெரிக்காவில் முதல் முதலில் பிப்ரவரி 28 சர்வதேச பெண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவில் பிப்ரவரி இறுதி ஞாயிறு அன்று சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் அனுசரித்த அதே வேளையில் ரொட்டியும் அமைதியும் கோரி போராட்டங்களும் பொது வேலைநிறுத்தங்களும் நடத்தப்பட்டன. இதற்கு செயின்ட் பிட்டர்ஸ்பர்கைச் சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கினார்கள். இதுவே எல்லோராலும் பரவலாக அறியப்பட்ட பிப்ரவரி புரட்சி. இதன் விளைவாகச் சார் அரசு பதவியிலிருந்து இறக்கப்பட்டது. இதன் பிறகு பதவி ஏற்றத் தற்காலிக அரசு, 4 நாட்களுக்குப் பிறகு பெண்களின் வாக்குரிமையை உறுதி செய்தது.

1910-ம் ஆண்டு நடைபெற்ற அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸில் சர்வதேசிய பெண்கள் தினம் கடைப்பிடிக்கவேண்டும் என்று க்ளாரா ஜெட்கின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை லெனினும் ஆதரித்து வாக்களித்தார். 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின் ரஷ்யாவிலும், 1924 பிறகு சீனாவிலும் சர்வதேசிய உழைக்கும் பெண்கள் தினம் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண்களின் எதிரி யார்?

இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பு தான் பெண்களின் மிகப் பெரிய எதிரி. முதலாளித்துவத்தால் தான் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகியது, அதன் மூலமாகத் தான் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் ஏற்பட்டது, முதலாளித்துவ சமூகத்தில் தான் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கப் பட்டது போன்ற பல வாதங்கள் எழலாம் ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தாலே இதில் இருக்கும் முரண்கள் புலப்பட்டு விடும்.

பெண்களை சமூக உற்பத்தியில் ஈடுபடுத்தியது முதலாளித்துவத்தின் லாப நோக்கத்திற்காக, உழைக்கும் இடங்களில் பெண்கள் படும் இன்னல்கள் நாம் அறிந்த ஒன்று தான். ஓடாய் தேய்ந்தாலும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட வழங்காமல் உழைப்பாளர்களை சுரண்டுவது தான் இந்த ஏகாதிபத்தியத்தின் வழக்கம். சட்டரீதியாகப் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ஏற்பட்டு இருக்கிறது என்பது உண்மை ஆனால் சொத்து யார் இடம் இருக்கிறது? 1% மேல்தட்டு வர்க்கத்தினர் இடம்.

செல்வந்தர்கள் இடம் தான் செல்வம் குவிந்து கொண்டே வருகின்றது. போராடி பெற்ற 8 மணி நேர வேலை இன்று நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம். பெண்கள் என்பதைத் தாண்டி உழைப்பாளர்களாய் சமுதாய மாற்றத்தில் ஈடுபட வேண்டிய தேவை இருக்கிறது. சோசியலிச சமூகத்தில் தான் பெண்களின் உரிமைகள் உண்மையில் நிலைநாட்டப்படும்.

உடமை சிந்தனையால் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களை உடமைச் சிந்தனையை வேரறுப்பதால் மட்டுமே விடுவிக்கப்பட முடியும். உடமை சமுகத்தில் உரிமை பறிக்கப்பட்ட பெண்களுக்குப் சோசியலிச சமூகத்திலேயே உரிமை உறுதி செய்யப்படும். பெண்களின் மீதான ஒடுக்குமுறை மட்டும் அல்லாமல் சாதிய, இனம் சார்ந்த அனைத்து ஒடுக்குமுறையும், சோசியலிச சமூகத்திலேயே களையப்படும். பெண்களின் எதிரி ஆண்கள் அல்ல என்பதைப் புரிந்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் இணைந்து சோசியலிச சமூகத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

About புதிய சோசியலிச இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top