இந்திய அளவில் தேசியக் கட்சிகள் பலம் குறைந்து கொண்டு வருகிறது இதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் இடதுசாரிகள் செய்ய வேண்டியது என்ன? தொழிலாளர்களையும் மாணவர்களையும் விவசாயிகளையும் அத்தகைய ஏனைய நட்புச் சக்திகளையும் அரசியற் படுத்துவதில் கவனம் செலுத்தி அவர்களை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லாமல்,மீண்டும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பதினால் இவர்கள் அடையப்போகும் பலன் தான் என்ன? தமிழகத்தில் ஜெயலலிதா இருந்த காலத்தில் கடந்த 2014 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க 37 இடங்களைக் கைப்பற்றியது. பிறகு 2016 தேர்தல்களில் அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. அதிமுக, திமுக, கூட்டணி இல்லாத புதியதாக மக்கள் நல கூட்டணியை உருவாக்கி தேர்தலில் நின்ற இடதுசாரி இயக்கங்கள் படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இது எதனால் நிகழ்ந்தது என்ற அரசியற் பார்வை அவர்களிடம் ஈர்க்கவில்லை. மாறாக தேர்தல் எல்லைகளுக்குள் முடங்கியதாக இருந்தது அவர்கள் பார்வை. தற்போது ஜெயலலிதா, கலைஞர் என்ற செல்வாக்குள்ள தலைமைகள் இல்லாமல் தேர்தலை சந்திக்க இருக்கின்றன அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள். இந்தக் கட்சிகள் பலவீனமாக இருந்தும், அவர்கள் ஆதரவு குறைந்து இருந்தும் இந்தச் சந்தர்பத்தில் தமது பலத்தைக் கட்ட முன்வரவில்லை இடதுசாரிகள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து செல்வதற்கான வழி என்னவென்று தான் தேடுகிறார்களே தவிர மாற்று அரசியலை முன்வைத்து இங்கு இருக்கக்கூடிய போராட்ட சக்திகளை அணி திரட்ட முன்வரவில்லை. இந்த முதலாளித்துவக் கட்சிகளால் இவர்கள் பெறப் போவது தான் என்ன? இரண்டு மூன்று எம்பிகள் மட்டும் தான் இவர்களுடைய இலக்கா? அதிமுக இரண்டு துண்டுகளாக உடைந்து சிதறுண்டு இருக்கும் இந்த நேரத்தில் கூட இங்கு இருக்கும் மக்களைத் திரட்டவோ தொழிலாளர்களை ஓரணியில் இணைக்கவோ இவர்கள் முயற்சிக்காமல் இருக்கிறார்கள். இது ஏதோ ஒரு வகையில் பாஜக அல்லது காங்கிரஸ் போன்ற முதலாளித்துவ கட்சிகளை உயிர் பெறத்தான் வழிவகுக்கிறது. இந்திய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனது தேசிய அளவு செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை பார்க்கிறோம். இதைச் சரியாகப் பயன்படுத்தி இடதுசாரிகள் தொழிலாளர்களையும் மாணவர்களையும் விவசாயிகளையும் அரசியல் படுத்த வில்லை என்றால் அது இடதுசாரிகளுக்கு தான் இழப்பு. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதுகிறது காங்கிரஸ். 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தது மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளை கையாண்டதன் மூலமாக தேசிய உணர்வைத் தூண்டி மீண்டும் பாஜக ஆதரவு திரட்டி வருகிறது. அடுத்த தேர்தலில் பாஜக வருமா காங்கிரஸ் வருமா என்ற ஊசலாட்ட நிலையில் இருக்கிறது இன்றைய அரசியல் சூழ்நிலை. பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி போன்ற ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது பாஜக அரசு என்றால் இதற்கு கொஞ்சமும் சலிப்பில்லாமல் அடக்குமுறை கொள்கைகளை நிறைவேற்றியதுதான் காங்கிரஸ். இதுக்கு முன்பு ஜிஎஸ்டி போன்றதற்கு நிகரான மசோதாக்கள் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. கடந்த 2014 காங்கிரசின் இறுதி ஆட்சிக் காலத்தில் எண்ணெய் நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்ததன் விளைவாகவும்தான் இன்று பெட்ரோல் விலையும் டீசல் விலையும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தி மு க தனித்துப் போட்டி இட முடியாத நிலையில் கூட்டணிக்கு வரவில்லை. அவருக்கான வாக்குக்களை உடைக்காமல் வெற்றியை உருதி செய்வதே அவர்களின் நோக்கம். இதனால் இடதுசாரியக் கட்சிகளுக்கு என்ன லாபம்? கடந்த 2014 தேர்தல்களில் திமுக என்ன அளவில் வாக்கு சதவீதத்தை பெற்றதோ அதிலிருந்து சற்றுக் கூடுதலான வாக்கைப் பெறும் சந்தர்ப்பத்தை மட்டுமே இந்தக் கூட்டணி ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக பிளவுபட்டுள்ள இந்த நிலையில் அவர்களாலும் முழுமையான வாக்குவங்கியை ஒரு அணியால் தக்கவைக்க முடியாது என்பதையும் கவனிக்க வேண்டும். தினகரன் அவர்கள் 20 சதவீத வாக்குகளையாவது தக்கவைத்து அதிமுக இயக்கத்தை தன்வயப்படுத்த எல்லாவிதத்திலும் முயற்சியும் செய்வார். அப்படி ஒருவேளை அவர் அந்த இயக்கத்தை முழுமையாக தன்வயப்படுத்தினாலும் அது கொள்கை அளவில் எவ்வித மாற்றங்களையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை. அது ஓரு வலதுசாரிய பண்பில்தான் இயங்கும். இன்னொருபுறம் தமிழகத்தில் பாஜகவால் வேரூன்ற முடியாது என்று நாம் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவதுடன் நின்று விடுகிறோம். ஆனால் அவர்களோ நாளுக்கு நாள் மத அரசியல் மூலமாக தம்மை இங்கு மிக நேர்த்தியாக நிலைநிறுத்தி கொண்டு வருகிறார்கள். முன்பு இருந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் தற்போதிருக்கும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மிகப் பெரிய எண்ணிக்கை வித்தியாசங்கள் உள்ளன. அதிகார மட்டத்திலும் கூட அவர்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை நிறுவிக்கொண்டு தங்களுக்கான அரசியல் ராஜதந்திர வேலைகளை செய்துகொண்டு வருவது அவர்கள் பலப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில் நோட்டாவின் (யாருக்கும் ஆதரவற்ற ஓட்டு) எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. மக்கள் தமக்குத் தேவையான மாற்றங்கள் நிகழாமல் இருக்கும் போது அனைத்து கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகளைக் கூட மாற்றாக நினைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் மக்கள். மாற்றம் வேண்டும் என்று நாங்கள் கேட்பதோ திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் பாஜக பாமக சீமான் ரஜினி கமல் இவர்களிடமிருந்து அல்ல. இடதுசாரிகள் மத்தியில் இருந்தே ஒடுக்கப்படும் மக்களுக்கான மாற்று உருவாக முடியும். கடந்த ஜனவரி மாதம் 22 கோடி இந்தியத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்தை நடத்தி இருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வைத்து, இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தக் கூடிய அமைப்பு பலம் இருக்கும் இடதுசாரிகள் மீண்டும் மீண்டும் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்று ஒரு நிலையை உருவாக்கி வைத்திருப்பது கேவலம். தற்போது இருக்கும் மோடி ஆடிசியில் தாம் எடுக்கும் விசேச முடிவே காங்கிரசுக்கு ஆதரவு என்பதாகவும் சிலர் வாதிக்க முற்படுகின்றனர். முன்பு நீண்ட காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதற்கு மாற்றாக ஏன் இடதுசாரிகள் தங்களை வளர்த்துக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பாஜக மதவாத கட்சி என்றால்? அதற்கு மாற்று காங்கிரஸ் தான் தீர்வு என்று சொல்கிறீர்கள்! அப்போ காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த மதவாத கட்சிகள் மறைந்து விட்டனவா? அந்த காலகட்டத்தில் இவர்கள் வளரவே இல்லையா இவர்கள் பலர் வளர்வதற்கான காரணிகளில் முக்கிய காரணியாக காங்கிரஸ் கட்சியின் வலதுசாரிய கொள்கை நடைமுறை இருந்தது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா? இங்கு இருக்கும் அனைத்துத் தொழிலாளர், விவசாயிகள், மாணவர்கள், ஜனநாயகச் சக்திகளை, ஒன்று திரட்டி தேர்தலைச் சந்திக்க வேண்டும். ஒரு தேர்தல் இரண்டு தேர்தல்களில் மாற்றம் நிகழாமல் இருக்கலாம் ஆனால் தீர்வு அதுதான். தீர்வு காண வழியைத் தேடாமல், தொழிலாளர்களுக்கோ ஏழைகளுக்கோ மாணவர்களுக்கோ விவசாயிகளுக்கோ எந்தவிதமான மாற்றத்தையும் வழங்கிவிட முடியாது என்பதை இனியாவது இடதுசாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தோழமையுடன் புதிய சோசலிச இயக்கம்
|
|