Home / வரலாறு / ஃப்ரிட்ஸ் ப்ளாட்டன் கொல்லப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வரை – கம்யூனிச அகிலத்தின் ஆவிக்கு ஒரு அஞ்சலி:

ஃப்ரிட்ஸ் ப்ளாட்டன் கொல்லப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வரை – கம்யூனிச அகிலத்தின் ஆவிக்கு ஒரு அஞ்சலி:

வசந்த்

பிப்ரவரி புரட்சிக்கு பின் லெனின் சுவிட்ஸர்லாந்திலிருந்து ரஷ்யாவுக்கு திரும்ப விரும்பினாலும், அது அவ்வளவு சாத்தியப்படக்கூடியதாக இல்லை. முதலாம் உலகப்போர் நடந்துக் கொண்டிருந்ததால் ரஷ்யாவுக்கு செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன. லெனினை பெட்ரொகிராட்க்கு அழைத்து செல்லும் பொறுப்பை தலைமை ஏற்று ஒருங்கிணைத்தவர் தான் சுவிஸ் நாட்டு கம்யூனிஸ்ட் ஃப்ரிட்ஸ் ப்ளாட்டன். ஜெர்மானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சீல் வைக்கப்பட்ட ரெயில் பெட்டியின் மூலம் ஜெர்மனியை கடக்க ஏற்பாடு செய்தார். பின்னர் அந்த ரெயில் வடக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து வழியாக பெட்ரொகிராடை அடைந்தது. ப்ளாட்டனின் உதவியால் லெனினும் ரஷ்யா திரும்பினார். இன்னொரு சமயம், ஜனவரி 14, 1918 அன்று லெனின் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு திரும்பிய போது லெனின் பயணித்த கார் தாக்கப்பட்டது. லெனினுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ப்ளாட்டன், அவரது தலையை அழுத்தி அணைத்துக் கொண்டார். லெனின் தலைக்குள் பாய வேண்டிய தோட்டாவை தனது கைகளில் தாங்கி அவரது உயிரை காப்பாற்றினார். தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து பணியாற்றிய இவர் மூன்றாம் அகிலத்தின் உருவாக்கத்திலும், அதன் செயல்பாடுகளிலும் சிறப்பான பங்கினை ஆற்றினார். கம்யூனிச அகிலத்தில் பணியாற்றி கொண்டிருந்த இவரது மனைவி பெர்தா ஜிம்மர்மானை 1937லும், இவரை 1938லும் சோவியத் அரசாங்கம் கைது செய்தது. டிராட்ஸ்கியுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டை சுமத்திய அரசு, இவர்களுக்கு மரணதண்டனையை விதித்தது. 1942ஆம் ஆண்டு, ஏப்ரல் 22ஆம் நாளான லெனினது பிறந்த நாளன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்களை போன்றே பல புரட்சியாளர்கள் இக்காலத்தில் இதே குற்றச்சாட்டிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். டிராஸ்கியும் கூட ஸ்டாலினின் அடியாள் ஒருவனால் தலையில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் ஆகஸ்டு 21, 1940ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
உலகம் முழுவதிலும் உழைக்கும் வர்க்கத்தை புரட்சி பாதைக்கு அழைத்து சென்று, உலக முதலாளித்துவத்தின் கொலைகார ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கம்யூனிச மூன்றாம் அகிலம் லெனினால் நிறுவப்பட்டது. இதன் அடிப்படை கடமைக்கும், சோவியத் ஒன்றியத்தின் அதிகாரவர்க்கத்தின் ’ஒற்றை நாட்டில் சோஷலிசம்’ என்ற கொள்கைக்கும் இடையிலான முரண்பாட்டை உற்று நோக்கினால், டிராஸ்கியுடனான தொடர்பை சோவியத் அரசாங்கம் ஏன் பெருங்குற்றமாக கருதியது என்பதை புரிந்துக்கொள்ளலாம். லெனினது மரணத்திற்கு பின்பு ஸ்டாலின் மற்றும் நிக்கோலை புக்காரின் முன்வைத்த ஒற்றை நாட்டில் சோஷலிசம் என்ற கோட்பாடானது அடிப்படை மார்க்ஸிய கோட்பாட்டிலிருந்து விலகுவதாக இருந்தது. முதலாளித்துவமானது உலகமயமாகியிருக்கும் சூழ்நிலையில் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தால் மட்டுமே அதனை வீழ்த்த முடியும். உலக பாட்டாளிவர்க்கத்தின் விடுதலையை உறுதிப்படுத்தாமல், ரஷ்யாவில் புரட்சி நிலைக்காது என்பதே உண்மை. இதனை நிராகரித்த ரஷ்ய அதிகார வர்க்கம், உள்நாட்டில் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, உள்நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய எண்ணியது. இதற்கு ஏதுவாக முன்வைக்கப்பட்ட கொள்கையே இந்த ஒற்றை நாட்டில் சோஷலிசம்.

சர்வதேச அரங்கில் பாட்டாளி வர்க்கம் சந்தித்த தோல்விகள் உள்நாட்டில், டிராட்ஸ்கி தலைமையிலான இடதுசாரிகளின் சர்வதேசியம், நிரந்தரப்புரட்சி போன்ற கோட்பாடுகளுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நிலைபாட்டை வலுப்படுத்த உதவின. கம்யூனிச அகிலத்தின் பணிகள் சிறிது சிறிதாக நீர்த்துப்போகும்படி செய்த அதிகாரவர்க்கம், இறுதியில் அகிலத்தை, சோவியத் ஒன்றியத்தின் உள்நாட்டு நலன்களுக்காக இயற்றப்பட்ட அயல்நாட்டு கொள்கையை செயல்படுத்தும் ஒரு அரசு முகமையாக மாற்றியது. இதற்கு தடையாக இருந்த அல்லது எதிர்த்து கேள்வி கேட்ட அனைவரும் பொய் வழக்குகள் போடப்பட்டு தண்டிக்கப்பட்டனர், அதாவது பிளாட்டனை போல் கொல்லப்பட்டனர். அகிலத்தின் பணியாளர்கள் மொத்தமாக மாற்றப்பட்டனர்.

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, ஜெர்மானிய கம்யூனிஸ்டுகளை கொலை செய்து கொண்டிருந்த நாஜி அரசுடன் சோவியத் அரசாங்கம் வர்த்தக ஒப்பந்தங்களும் போட்டுக்கொண்டது. சோவியத் ஒன்றியத்திடமிருந்து பெற்ற மூலப்பொருட்களை போருக்கு பயன்படுத்திக்கொண்ட நாஜி ஜெர்மனி, அம்மூலப்பொருட்களை தங்களுக்கு விநியோகம் செய்த சோவியத் ஒன்றியத்தின் மீதே போரை துவங்கியது. நாஜிக்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுடன் சோவியத் கூட்டணி வைத்துக்கொண்டது.

ரஷ்ய புரட்சி என்பது வெறும் ரஷ்ய நாட்டு புரட்சி மட்டுமல்ல. உலகப்புரட்சியின் ஒரு பகுதியே அது. ரஷ்யாவில் புரட்சி நடத்தியதில் மட்டுமென்றி, அப்புரட்சியை பாதுகாத்ததிலும் உலக பாட்டாளி வர்க்கங்களுக்கு பங்கு உண்டு. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சக்தி வாய்ந்த நாடுகளின் படையெடுப்பிலிருந்து ரஷ்ய தொழிலாளர் அரசை காப்பாற்றியது அந்நாடுகளின் பாட்டாளிவர்க்கங்கள் உள்நாட்டில் தங்களது அரசுகளை எதிர்த்து நடத்திய போராட்டங்களே. ஆனால், இரண்டாம் உலகப்போரின் போது ரஷ்ய அதிகார வர்க்கம் உலக பாட்டாளிவர்க்கங்களை சார்ந்திருப்பதற்கு பதிலாக, அவர்களை ஒடுக்கிக்கொண்டிருந்த முதலாளித்துவ அரசுகளின் உதவியை நாடியது.

சோவியத் ஒன்றியத்தின் கூட்டணி நாடுகளை சேர்ந்த தொழிலாளர் வர்க்கங்கள் அந்தந்த நாடுகளின் முதலாளித்துவ அரசுகளை ஆதரிக்குமாறு கம்யூனிச அகிலத்தால் அறிவுறுத்தப்பட்டன. இந்நடவடிக்கையானது, எந்த சூழ்நிலையிலும், பாட்டாளிவர்க்கங்கள் தங்களது நாட்டின் முதலாளித்துவ அரசுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதை தடுக்கவோ, அவர்களை பலவீனப்படுத்தவோ கூடாது என்ற போல்ஷ்விக் கட்சியின் அடிப்படை கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும். இந்த வரலாற்று பிழையின் தாக்கம் உலகம் முழுக்க பிரதிபலித்தன. உதாரணமாக, இந்தியாவில் சுதந்திரத்திற்கான இந்திய இடதுசாரிகளின் பங்களிப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரியமும், இந்தியாவின் கம்யூனிஸ்டுகள் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவினால் காங்கிரஸிக்கு கை மாறின. இன்று வரை இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகள் பாசிச பூச்சாண்டிக்கு எதிராக காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கற்பனை உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களுடன் கூட்டணி வைக்க வேண்டிய அடிப்படை கடமையையும், சர்வதேசியத்தின் முக்கியத்துவத்தையும் முழுவதுமாக மறந்துபோய் முதலாளித்துவ கட்சிகளாக திரிந்துவிட்டனர். உலக முதலாளித்துவ நாடுகளின் கோரிகைகளுக்கு பணிந்து, 1943ஆம் ஆண்டு கம்யூனிச அகிலத்தை ஸ்டாலின் கலைத்த போதிலும், அந்நிறுவனத்தின் மூலம் ரஷ்ய அதிகாரத்துவம் இழைத்துள்ள துரோகம் இன்றுவரை உலக பாட்டளிவர்க்கத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.

”ஒற்றை நாட்டின் சோஷலிசம்” என்ற ஸ்டாலினிய அதிகாரத்துவ கோட்பாட்டின் தோல்வியால் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னரும் இன்றுவரை அதன் தாக்கத்திலிருந்து உலக இடதுசாரிகள் மீளவில்லை. உலக பாட்டாளி வர்க்கத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் பொருட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்ட லியோன் டிராட்ஸ்கியின் கோட்பாடுகளையும் அவரது எழுத்துக்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது உலக பாட்டாளி வர்க்கத்தின் இயக்கவியலுக்கு இன்றியமையாததாகும். ஒற்றை நாட்டில் சோஷலிச கோட்பாடு முன்வைக்கப்பட்ட அதே சமகாலத்தில் டிராட்ஸ்கி வெளியிட்ட “அக்டோபர் புரட்சியின் படிப்பினைகள்”, என்ற நூலை கூர்ந்து படிப்பதன் மூலமும், ”நிரந்தரப்புரட்சி”, ”துரோகத்துக்குள்ளாக்கப்பட்ட புரட்சி” உள்ளிட்ட நூல்களையும் வாசிப்பதன் மூலமும் ஸ்டாலினிய அதிகாரத்துவம் உருவாக்கியுள்ள திரிபுகளிலிருந்தும் மாயைகளிலிருந்தும் பாட்டாளிவர்க்கம் விடுபட இயலும். மழுங்கடிக்கப்பட்ட உலக பாட்டாளிவர்க்கத்தின் கடமையை பூர்த்தி செய்ய இந்நாளில் உறுதி ஏற்போம்..

Committee for workers International
New Socialist Alternative
Cell_9500111154

About T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top