Home / அறிவித்தல்கள் / தொழிலாளர் ஓன்று பட்டு போராடினால் தோற்கடிக்க முடியாது-ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற வேண்டும்.

தொழிலாளர் ஓன்று பட்டு போராடினால் தோற்கடிக்க முடியாது-ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற வேண்டும்.

– புதிய சோசலிச மாற்று (தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் இந்தியப் பிரிவு)

Click to download leaflet here –leaflet

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களை மேம்படுத்த சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடாவடி நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து பொது வேலை நிறுத்தம் என்ற ஒன்றுபட்ட வர்க்க நடவடிக்கையின் வாயிலாக இந்திய பாட்டாளி வர்க்கம் மீண்டும் ஒருமுறை கொதித்தெழுந்துள்ளது. முதலாளித்துவத்தின் சரித்திரம் தோறும் உலகெங்கிலும் இதுவரை நடைபெற்றுள்ள பொது வேலை நிறுத்தங்கள் யாவும் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக குவிந்துள்ள கோபத்தின் அனல் தகிக்கும் வெளிப்பாடாகவே இருந்து வந்துள்ளன. துவக்கத்தில் இவை பொருளாதாரக் கோரிக்கைகளை வென்றெடுப்பதையே நோக்கமாக கொண்டிருந்தாலும், எந்நேரத்திலும் ஒரு படி மேலே சென்று பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க செய்யும் சக்தி தொழிலாளர் வர்க்கத்துக்கு உண்டு என்பதை இந்நடவடிக்கை நிரூபித்துக்காட்ட முடியும்.  அடிப்படை மாற்றத்தைக் கோரும் தொடர்ச்சியான அடுத்தடுத்த போராட்டங்களின் மூலம் அரசியல், பொருளாதார மற்றும் சமூக புரட்சிக்கு வழிவகுக்கும் தன்மை கொண்ட வர்க்கப் போராட்டத்தின் சக்தியை அவை வெளிப்படுத்துகின்றன.

 

இன்றைய இந்தியா

இந்த ஜனவரி 8 பொது வேலைநிறுத்தம் நடைபெறும் இதேவேளை முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு காணாத கொந்தளிப்புகள் இந்திய துணை கண்டம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.  ஆங்காங்கே பல வர்க்கங்கள் ஒன்று திரண்டு பல ஆண்டுகளாக குவித்து வைத்துள்ள கோபக் கணைகளை வெளிப்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நமது வாழ்க்கைத் தரம் பெருமளவு சரிந்துள்ளது, அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன, விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர் – அவர்களில் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் – இளைஞர்கள் மத்தியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது!

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாதிய ஒடுக்குமுறைகளும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் நீடித்து நிற்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், பழங்குடி மக்களையும், சமூகத்தின் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் சுயமரியாதையோடு வாழவிடாமால் அவர்களின் மீது வன்முறைகளை ஏவி விடும் அளவுக்கு சாதிய ஒடுக்குமுறைகள் அருவருக்கத்தக்க வடிவை எட்டியுள்ளன.  ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்ற சட்ட உரிமைகள் யாவும் இடையறாத தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இத்தாக்குதல்களை தலைமை ஏற்று நடத்துவது அவர்களை இழிவுபடுத்தி கேலி செய்யும், தீயிட்டு கொளுத்தும், பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களின் மூலம் பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தி ஆளும் வர்க்கத்துக்கு அஞ்சி நடுங்கி வாழும் நிலைக்கு தள்ளும் நிலவுடமை ஆதிக்க சமூகத்தின் வலதுசாரிக் கூறுகளே.

இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த குடியுரிமை சார்ந்த உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதை எதிர்த்து நடைபெற்றுவரும் கொந்தளிப்பான நிகழ்வுகள் யாவும் ஆளும் வர்க்கங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்திய ஜனநாயக கட்டமைப்புக்கு எதிரான மிகப்பெரிய சவாலாக சில வலதுசாரி அரசியல் கட்சிகளே போராடும் அளவுக்கு நிலைமை உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியும், அதனோடு சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடாக உருவெடுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடும், இரண்டாம் உலக போருக்கு முந்தைய ஜெர்மனியில் வகுப்புவாத வன்முறைகளை கட்டவிழ்த்து விட ஹிட்லர் திட்டம் தீட்டியதை போன்று, ஹிந்து ராஷ்டிர பேரினவாத வன்முறை நோக்கத்தை அடைய விரும்பும் பாஜகவின் திட்டத்தை அம்பலப்படுத்துகின்றன.

 

கொந்தளிப்பான உலக நிலவரம்:

 

அனைத்து கண்டங்களிலும் வர்க்கப் போர் எழுச்சியுடன் நடந்து வருவதைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியக்கும் தருவாயில் தான் ஜனவரி 8 பொது வேலைநிறுத்தம் நடைபெறுகின்றது. இந்திய நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் முக்கியமான இரு சர்வதேச நிகழ்வுகள் சிலி மற்றும் ஹாங்காங் போராட்டங்களாகும். இவ்விரு நிகழ்வுகளிலும் இளைஞர்கள் முன்னணி வகிக்கின்றனர். ஓரளவு ஸ்திரத் தன்மையுடன் கூடிய ஒரு கொடூரமான நவ-தாராளவாதத்துக்கு ஒரு முன்மாதிரியாக ‘சிலி’ உலக முதலாளி வர்க்கங்களால் போற்றப்பட்ட வந்தது. அங்கு இலட்சக்கணக்கான மக்கள் ராணுவத்தை எதிர்த்து போராடி -பொது வேலைநிறுத்தங்கள் செய்து – தொடர்ந்து தெருவுக்கு வந்து போராடியதால் அரசு பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, முதலாளிகளின் முன்மாதிரியும் தகர்ந்து போகத் தொடங்கி உள்ளது.

கம்யூனிஸ்ட் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும், கம்யூனிசத்துடன் சிறிதும் சம்பந்தம் இல்லாத சீன அதிகாரத்துவ சர்வாதிகாரத்தால் ஆட்டி வைக்கப்படும் உள்ளூர் நிழல் அரசாங்கத்துக்கு எதிராக ஹாங்காங்கில் துணிச்சலான இளைஞர்கள் தீர்க்கமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்துக்கான இந்த மாபெரும் இயக்கம் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தாண்டி மீண்டும் மீண்டும் எழுகின்றது. சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஜனநாயகத்துக்கு அளித்த பேராதரவை  போலி சோசலிச அரசாங்கம் திரைமறைவில் புறக்கணித்த போது, காவல்துறை வன்முறைகளையும் மரண அச்சுறுத்தல்களையும் புறந்தள்ளிய மாணவர்களும் இளைஞர்களும் ஜனநாயகத்தை காக்க நெஞ்சை நிமிர்த்தி போராடினர்.

 

அச்சத்தின் சகாப்தம் முடிவடைந்தது!

 

இந்தியாவின் பெருவாரியான மக்கள் போலியான ஜனநாயக மதசார்பற்ற அரசுகளின் கீழ், இழிவான ஏழ்மை நிலையை தாங்கிக்கொள்ளும் நிர்பந்தத்துக்கு உள்ளாகி இருந்ததோடு, வகுப்புவாத மதவாத சண்டைகளுக்கும் அப்பட்டமான சாதிய ஒடுக்கு முறைகளுக்கும் இரையாகி கொண்டிருந்தனர். ஆனால்,  நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் அப்பட்டமான இந்துத்துவ பேரினவாத ஆட்சியில் இஸ்லாமியர்கள்-விரோத, இதர சிறுபான்மையினர் விரோத, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விரோத ஆட்சி, போராட வேண்டியதன் அவசியத்தை இறுதியில் மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

 

பாஜகவின் விஷத்தனமான பிரச்சார பிரிவு 95 வயதான ராஷ்டிரிய ஸ்வயம் சேவாக் சங் (RSS). அதன் 60 லட்சம் தொண்டர்கள் மற்றும் நாடு முழுக்க பரவிக்கிடக்கும் 60,000 கிளைகளின் உதவியோடு பல ஆண்டுகளாக கலாச்சார பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேசியவாதம், ஒருங்கிணைந்த மனிதநேயம், காந்திய சோஷலிஸம் ஆகிய போலி கருத்துக்களின் பின் நின்றபடி வகுப்புவாத வன்முறை பிரச்சாரங்களை வளர்த்து வந்துள்ளனர். குறிப்பாக மதச் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை விதைத்து வருகின்றனர்.

இதுவரை பக்திமானாகவும் வசுதைவ குடும்பகம் ( உலகமே என் குடும்பம்) என கூவிக் கொண்டு தீங்கற்ற அமைப்பைப் போல நடித்து வந்த ஆர் எஸ் எஎஸ்ஸின் உண்மை முகம் லேலும் மேலும் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. அந்த அமைப்பின் தீவிரமான உறுப்பினர் ஒருவர் குஜராத்தின் முதல்வராகவும், பின்னர் 2014-இல் பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்ட பின் அதன் உண்மையான நோக்கங்கள் உலகெங்கும் அம்பலமாகியுள்ளது.

 

மோடியின் சாதனை:

 

பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை, போன்ற இரத்தம் தோய்ந்த குஜராத் வரலாற்றுப் பின்னணியை கொண்ட மோடி 2019இல் இரண்டாவது முறையாக பிரதமராகவும் அவரது கையாளான அமித்ஷா உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றது முதல் கடுமையான தாக்குதல்கள் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவதை பார்க்கிறோம்.  இடதுசாரிகள் உட்பட, ஒட்டு மொத்த பாராளுமன்ற எதிர்க் கட்சிகளும் அரசியல் ரீதியாக முடக்கப்பட்டு தமது இயலாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மோசடி திட்டங்களான பணமதிப்பு நீக்கம், GST  உள்ளிட்ட மோடி ஆட்சியின் எந்தவொரு பொருளாதார பிழைகளுக்கும் பெரும்பாலும் எந்த எதிர்ப்பும் எழவில்லை. பின்னர், ஜம்மு காஷ்மீர் தொடர்பான அரசியல் சாசன உரிமைகளை ரத்து செய்வதற்கான மசோதாவும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின்றி வழக்கம்போல இதே தொனியில் நிறைவேற்றப்பட்டன. இந்த மோசடியான தாக்குதல்கள் பெரும்பான்மையான மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக, இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய அளவிலான கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த ஏமாற்றங்களும் இயலாமையும் சேர்ந்து போராடுவதற்கான உறுதியாக உருமாறியிருப்பதை கடந்த 3 வார காலமாக இசுலாமியர்கள் மாணவ-இளைஞர்கள் இளம் பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்டவர்கள் நடத்தி வரும் போராட்டங்களின் மூலம் நாம் காண்கின்றோம். தங்களது உயிரையும் உடலுறுப்புகளையும் கூட துச்சமென கருதி நாடெங்கிலும் இலட்சக்கணக்கானோர் நடத்திவரும் போராட்டங்கள் “அச்சத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதை” நமக்கு உணர்த்துகிறது.

குடியுரிமை சட்டத்திருத்தம் பல்வேறு தேசிய இனங்களையும் அச்சுறுத்தி, அவர்களின் எதிர்ப்பை வெளிப்படையாக சம்பாதித்து. மக்களின் அரசியல், சமூக மற்றும் மதம் சார்ந்த பிணைப்புகளை துச்சப்படுத்தியமை அரசை ஆட்டம் காண வைக்கும் கிளர்ச்சியை உருவாக்கி உள்ளது. தேசிய இனங்களின் சிறைச்சாலையான இந்தியாவில் நீண்ட காலத்திற்குப் பின் மக்கள் போராடுவதற்கு ஒரு பொதுவான காரணமும், பொதுவான எதிரியும் கிட்டியுள்ளது என குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த எங்களது சமீபத்திய அறிக்கையில் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். மோடியின் ஒரு தேசியமாக்கும் வேலை பல்தேசிய உடைவுகளையே பலப்படுத்தி வருகிறது.

பொது வேலை நிறுத்தமும் அதன்முன் வீற்றிருக்கும் சவால்களும்:

இந்த எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக எழும் ஒவ்வொரு குரலும் வெற்றிக்கு இன்றியமையாதவையே. மத்திய தொழிற்சங்கங்களின் இப்பொதுவேலை நிறுத்தமும் மக்களால், குறிப்பாக, தேசிய சிறுபான்மையினரால் முன்னெடுக்கப்படும் அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்தை எதிரொலிக்க வேண்டும். தொழிற்சங்கவாத ஆதரவு என்ற வழக்கமான வரம்பிற்குள் தங்களை சுருக்கிக் கொள்ளாமல், மதங்களுக்கும் இனங்களுக்கும் அப்பாற்பட்டு தலைக்கு நேராக தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியை எதிர்த்து களத்தில் இறங்கி போராட வேண்டும். சமூக ஆய்வாளர்கள் கூறுவதைப் போல் பாஜக அரசின் நடவடிக்கைகள் யாவும் இரண்டாவது பிரிவினைக்கு வழிவகுப்பவையாவும்.

அமைப்புசார் தொழிலாளர்களை (மொத்த தொழிலாளர்களில் வெறும் 7 விழுக்காட்டுக்கும் குறைவான எண்ணிக்கை மட்டுமே) பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான சரியான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அமைப்புசாரா/ சங்கமிக்கப்படாத தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டிய வரலாற்று பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. உண்மையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களில் பெருமளவு அணி திரள்வது தங்களது குடியுரிமையே பறிபோவதாக உணரும் அமைப்பு சாரா துறையின் தொழிலாளர்களே.

அனைத்து முனைகளிலும் தோற்றுக் கொண்டிருக்கும் மோடி ஆட்சிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் வரலாறு காணாத போராட்டங்களை தங்களுடைய போராட்டங்களோடு இணைத்துக்கொள்ள தொழிற்சங்க தலைமை அஞ்சுவதும் தயக்கம் காட்டுவதும் துரதிஷ்டவசமானது. வெகுஜன வேலையில்லா திண்டாட்டமும், சொற்பமான ஊதியமும், விவசாய நெருக்கடிகளும், விலைவாசி உயர்வும், பொது துறைகளும் பொது சேவைகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதும் பெரும்பான்மை மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்திலிருந்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்தும் வேறுபட்ட பிரச்சினைகள் என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானதாகும்.

நடந்து வரும் அனைத்து போராட்டங்களும் பொது வேலை நிறுத்த கோரிக்கைகளோடு சம்மந்தப் பட்டவையே. இவற்றின் இணைவு அனைத்துக் கோரிக்கைகளையும் பலப்படுத்தும். அந்த நோக்கிலும் இந்த பொது வேலை நிறுத்தம் நிகழ வேண்டும்.

 

நாம் எதிர்கொண்டுள்ள இரட்டைப்பணி

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக நடந்து வரும் போராட்டம் சரியான தலைமை அற்று பல் வர்க்க போராட்டமாக நடந்து வருகிறது. இதற்கு தொழிலாளர் தலைமை தாங்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் முடிவுகட்ட இது ஒன்றே வழியாகும்.

சிறு, குறு மற்றும் கனரக தொழிற்துறையிலும், வேளாண் துறையிலும், வங்கி, ரயில்வே, சுகாதாரம், தபால் துறை மற்றும் இதர துறைகளிலும் பரவி கிடக்கும் தொழிலாளர் வர்க்க சக்திகளின் ஆதரவை பெற்ற ஒரு துடிப்பான இடதுசாரி சக்தி மட்டுமே இந்த முதாளித்துவத்தை முடிவுக்கு கொண்டுவரும் திசையில் நகர முடியும். இத்தகைய ஒரு சக்தி மட்டுமே மோடியின் வகுப்புவாத ஆட்சிக்கு எதிரான உண்மையான சவாலாக விளங்க முடியும்.

வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியிருக்கும் மகத்தான அனுபவங்களை தாங்கி நிற்கும் இந்திய தொழிற் சங்கங்களும் இடதுசாரிகளும் இணைந்து தங்களது ஒருங்கிணைப்பு திறமைகளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த தேசத்தையும் ஸ்தம்பிக்க செய்யும் போராட்டங்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்து வருவதால் இந்த முன்னோக்கு முற்றிலும் சாத்தியமே. கடந்த ஆண்டு இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் தேசம் முழுக்க 22 கோடி தொழிலாளர்களின் பிரம்மாண்டமான பங்கேற்பை கண்டது எனபது குறிப்பிடத் தக்கது.

ஜனவரி 8

இந்தியாவின் மிகப்பெரிய 10 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த ஆண்டு போராட்டத்தில் 30 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. மோசடி முதலாளி வர்க்கத்துக்கு அடிவருடிகளாக செயல்பட்டு வரும் பாஜக மற்றும் மோடியின் ஆட்சியின் கீழ் கோரப்படும் பொருளாதார மற்றும் தொழில்துறை சார்ந்த கோரிக்கைகள் யாவும் உழைக்கும் மக்களுக்கு வாழ்வா-சாவா பிரச்சினைகளாகியுள்ளன. குடிமக்களின் மீதான தாக்குதல்களுக்கு எதிரான வெகுஜன போராட்டத்தை போன்றே மோடி அரசுக்கு எதிரான இந்த பொருளாதார போராட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இவ்விரு போராட்டங்களும் தனித்தனியானவைகளாக இல்லாமல், மக்களால் வெறுக்கப்படும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியத்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் குடியுரிமை உள்ளிட்ட கடந்த காலத்தில் போராடி வென்றுள்ள அனைத்து உரிமைகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவையாலும் ஒன்றோடொன்று முழுவதும் தொடர்புடையவையாக உள்ளன.

இப்பொது வேலை நிறுத்தத்தில் நாம் முன்வைத்துப் போராடும் முக்கிய கோரிக்கைகள்!!

 • தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 21,000 ஆக ஆக்கு!
 • ஓய்வூதியம்- தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய அனைவருக்குமான ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்து.
 • அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்து! அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்து!
 • புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு! காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பு!
 • ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை முறைப்படுத்தி அவர்களை நிரந்தர பணியாளர்களாக்கு!
 • சமவேலைக்கு சம ஊதியம்! முறைசாரா பணியாளர்களுக்கான நல வாரியங்களை மேம்படுத்து!!
 • கிராமப்புற 100 நாள் வேலை திட்டங்களுக்கும், விவசாயத்துக்குமான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து!
 • தற்காலிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும் உடனடியாக நிறுத்து!
 • தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை உடனடியாக நிறுத்து!
 • ரெயில்வே, பாதுகாப்பு, நிலக்கரி மற்றும் ஏனைய துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டை நிறுத்து!
 • அனைத்து வங்கி இணைப்புகளையும் உடனடியாக ரத்து செய்! பெருமுதலாளிகளின் வாராக் கடன்களை தள்ளுபடி செய்யாதே!!

இந்தப் பொருளாதார கோரிக்கைகளோடு, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டமும் அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய வேலைத்திட்டமும் சேர்ந்தால் முதலாளித்துவத்தையும் நிலவுடமை அமைப்பையும் வேரோடு அசைக்கக் கூடிய ஆற்றல் பெற்ற ஒரு பெரும் போராட்டமாக உருவெடுக்க கூடும்.

 • குடியுரிமை சட்டத்தையும் தேசிய குடியுரிமை பதிவையும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ரத்து செய்ய வேண்டும்!
 • அனைத்து அகதிகள்/ புலம்பெயர்ந்தோருக்கும் மதம் மற்றும் இன பேதமின்றி குடியுரிமைகளை வழங்கிட வேண்டும்!
 • அனைத்து வடிவிலான நாடு கடத்தல்களையும் எதிர்த்து நிற்போம்! அரசியல் சாசன உரிமைகளையும், இதர உரிமைகளையும் பாதுகாக்க கரம் கோர்ப்போம்!
 • எந்த மதத்தையும் வழிபடவோ அல்லது மதமின்றி வாழ்ந்திடவோ இருக்கும் சுதந்திரத்தை பாதுகாப்போம்!
 • இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தோள் கொடுத்து நிற்போம்!
 • போராடும் மக்களுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்!
 • தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகாகவும், பேச்சு உரிமையையும், போராடுவதற்கான சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்ளவும் ஒன்றுபட்டு நிற்போம்!
 • சோசலிச இந்திய துணைக்கண்டத்துக்காக போராடுவோம்.

 

ஏழைகளையும், இளைஞர்களையும் விவசாய குடிகளையும், உழைக்கும் மக்களையும் உள்ளடக்கி, சோசலிச கொள்கைகளோடு, ஜனநாயக பூர்வமாக ஒருங்கிணைக்கப்படும் ஒரு வெகுஜன அமைப்பை கட்டி எழுப்பியாக வேண்டியது அவசியமாகும். முதலாளித்துவத்தை வீழ்த்தவும், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் அரசாட்சியை நிறுவி சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கான சோசலிச திட்டமிட்ட பொருளாதாரத்தை கட்டியமைக்கவும் அவ்வெகுஜன அமைப்பு போராட வேண்டும்.

இத்தகைய ஒரு சோசலிச மாற்றை நிறுவ எங்களுடன் கரம் கோர்த்திடுங்கள்!!!

newsocialist.in@gmail.com

For English articles visit http://www.socialism.in/

 

 

About T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top