Home / அறிவித்தல்கள் / Covid -19: சுகாதாரத்துறையை அரசுடமையாக்கக் கோரி இந்திய தொழிற்சங்கங்களும், புதிய சோஷலிச இயக்கமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை

Covid -19: சுகாதாரத்துறையை அரசுடமையாக்கக் கோரி இந்திய தொழிற்சங்கங்களும், புதிய சோஷலிச இயக்கமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை

பல்வேறு தொழிற்சங்கங்களும், தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும், புதிய சோஷலிச இயக்கமும் (CWIஇன் இந்திய பிரிவு) கைக்கோர்த்து இந்தியாவில் கொரோனா நெருக்கடி தொடர்பாக வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையை இங்கு சமர்ப்பிக்கின்றோம். இந்தியா முழுவதும்  உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனை ஒன்றுக்கு ரூபாய் 4,500/- ஐ வசூலித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு மாபெரும் ஊழலாகும். இதன் மூலம் இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர்களும் ஏழை மக்களும் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால், உயிர் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமை என்றும், உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றும் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகின்றது.

 

இலவச பரிசோதனை வேண்டும் மற்றும் சுகாதாரத்துறையை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் பெருவாரியான ஆதரவை திரட்டும் நோக்குடன் இக்கூட்டறிக்கை வரையப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் சுகாதாரத்துறையை அரசுடமையாக்க வேண்டும் என்ற இந்த அவசர கோரிக்கைக்கு இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் செயல்படும் தொழிற்சங்கங்களும், சங்க உறுப்பினர்களும், சோஷலிசவாதிகளும் தங்களது பெயர்களை சேர்த்து ஆதரவளிக்குமாறு தோழமையுடன் அழைக்கின்றோம். பின்வரும் அமைப்புகள் இக்கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

 

புதிய சோஷலிச மாற்று

லால் பவதா ஷெட்மஜூர் சங்கம்

லால் பவதா விவசாய தொழிலாளர் சங்கம் (மஹாராஷ்ட்ரா)

CITUவின் மராட்டிய மாநில வங்கி தொழிலாளர் கூட்டமைப்பு

மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி

பி.எஸ்.என்.எல் தொழிலாளர் சங்கம்

அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC), மஹாராஷ்ட்ரா

அன்னபூர்னா பரிவார் ஜெனரல் காம்கர் (லால் பவதா)

 

தனியார் ஆய்வுக்கூடங்களின் வணிக நலன்களை பாதுகாக்கும் பொருட்டு, கொரோனா பரிசோதனைகளுக்காக ரூபாய் 4500/-ஐ வசூலித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இடைக்கால உத்தரவின் மூலம் இதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இலவச பரிசோதனையை கட்டாயமாக்கி ஏப்ரல் 8ஆம் நாளன்று உத்தரவு பிறப்பித்தது. தற்போதைய இக்கட்டான சூழலில், பரிசோதனைக்கு 4,500 ரூபாயை செலவழிக்க வழியில்லாத பெருவாரியான மக்களுக்கு இந்த உத்தரவு நிம்மதி பெருமூச்சாக அமைந்தது. ஆயினும், ஏப்ரல் 13 அன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, பரிசோதனை கட்டணம் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து தனியார் ஆய்வகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு இணங்கி, உச்ச நீதி மன்றம் முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டது. மத்திய அரசின் இத்தகைய நிலைப்பாட்டை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.

 

இத்தனியார் ஆய்வகங்கள் யாவும் இலாபத்துக்காக இயங்கும் பெரும் கார்பொரேட் நிறுவனங்களாகும். தங்கள் பங்குதாரர்களின் முதலீட்டின் மீதான இலாபத்தை பெருக்குவது தான் இவர்களது கடமையே தவிர, மக்களுக்கு சேவை செய்வதல்ல. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு இவர்களின் வணிக நோக்கத்தை அப்பட்டமாக கேள்விக்குள்ளாக்கியது. இதற்கு பதிலடியாக, தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தீர்ப்பை திரும்பப் பெற செய்ததின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் மீது இவர்கள் மூர்க்கமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். தைரோ-கேர் என்ற ஆய்வகம் கொரோனா பரிசோதனைகளை நிறுத்தி விடுவதாக அறிவிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. இதற்கு மேல் கொரோனா பரிசோதனை கட்டுபடியாகாது என்று வாதிட்டு இதர ஆய்வகங்களும் இதே நிலைப்பாட்டிற்கு வந்துள்ளன. சில நூறுகளிலிருந்து சில ஆயிரம் கோடிகள் வரை இலாபத்தில் புரளும் இந்நிறுவனங்கள், தங்களது வணிக நலன்களை மேம்படுத்திக் கொள்ள தேவைப்பட்டால், பரிசோதனைகளை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட மோசமான யுக்திகளையும் பயன்படுத்த தயங்காது என்பது தற்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

 

மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு, இத்தகைய தனியார் ஆய்வகங்களையும், மருத்துவமனைகளையும் அரசுடமையாக்கும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பெரும்பான்மை மக்களைப் புறக்கணித்துவிட்டு, இந்நிறுவனங்களின் கோடீஸ்வர முதலாளிகளுடனும், பங்குதாரர்களுடனும் அரசு கைக்கோர்த்திருக்கிறது. இது மிக மோசமான, வெட்கக் கேடான விஷயமாகும். மக்கள் நலன்களுக்கு நேர்மாறான முதலாளிகளின் நலன்களுக்காக அரசு மிகத்தெளிவாக சேவையாற்றுகிறது. ஏழை மக்கள் பிரதம மந்திரி ‘ஜன் ஆரோக்கிய திட்டத்தின்’ கீழ் (50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் வருவதாக அரசு சொல்கிறது) இலவச பரிசோதனைகளையும், இலவச சிகிச்சைகளையும் பெறுவார்கள் என்பதால். பரிசோதனைகளை இலவசமாக்குவது தேவையற்றது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது மனுவில் கூறியிருந்தது. இதனை ஒரு ஏமாற்று வேலை என்று கூறினாலும் போதாது. முதலில், இத்திட்டத்தில் நிலவும் குளறுபடிகளாலும், செயலற்ற தன்மையாலும், அனைத்து பயனாளிகளுக்கும் இத்திட்டத்தின் பலன் சென்று சேருமா என்பது சந்தேகமே. அப்படியே, சென்று சேரும் என்று எடுத்துக் கொண்டாலும், மீதமுள்ள 85கோடி மக்களின் நிலை என்ன? அப்படியானால், பெரும்பாலான மக்களை இந்த தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் என்ற கோணத்தில் அரசு சுருக்கிப் பார்க்கிறதா?

 

நாட்டின் உழைக்கும் வர்க்கம் இந்நாளில் தீவிரமான வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தையும் கூட விட்டுவைக்காத கதவடைப்பால் பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடப்பதோடு, பல கோடி வேலைகள் பறிப்போயுள்ளன. பல்வேறு மருத்துவர்களும், செவிலியர்களும், அங்கன்வாடி ஊழியர்களும், மருத்துவ பணியாளர்களும் கொரோனா நெருக்கடியை கையாளுகையில், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தங்களது உயிர்களை பணையம் வைத்து வருகின்றனர். தனியார் மற்றும் பொதுச்சுகாதார துறையை சேர்ந்த பல தொழிலாளர்களின் ஊதியம், ஒற்றை கொரோனா பரிசோதனைக்காக தனியார் ஆய்வகங்கள் வசூலிக்கும் 4500 ரூபாய் அளவுக்கு கூட இல்லை. இது போன்ற உயிர் போகும் சூழ்நிலைகளில் கூட, அரசு இந்நிறுவனங்களின் கேவலமான முதலாளிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் துணை போவது மிகவும் இழிவாக உள்ளது.

 

கடந்த இருபது ஆண்டுகளாக சுகாதார சேவைகளை விற்பனை பண்டங்களாகவும், மக்களை வாடிக்கையாளர்களாகவும் மாற்றியதன் மூலம் இந்நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளை இலாபமாக ஈட்டியிருக்கின்றன. இத்தகைய வணிகமயமாக்கலின் மூலம் இந்நிறுவனங்கள் லட்சக்கணக்கான படுக்கைகளையும், சுவாசக்கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் கொண்ட ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளையும், ஆய்வுக்கூடங்களையும் கட்டியெழுப்பியுள்ளன. இச்சுகாதார கட்டமைப்புகள் முழுவதும் தற்போதைய கொரோனா நெருக்கடியை சமாளிக்க மிகவும் தேவைப்படுகின்றன. மும்பை மாநகர் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால், அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு சில மருத்துவமனைகளே இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் கோடீஸ்வர முதலாளிகளின் நலன்களை தூக்கிப் பிடிக்கும் அரசு, கோடிக்கணக்கான மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருப்பதை புறக்கணித்து வருகிறது.

 

பரிசோதனை மட்டுமல்ல, சிகிச்சையையும் அரசு இலவசமாக செய்து தரவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். தனியார் ஆய்வகங்களையும், மருத்துவமனைகளையும் அரசு பறிமுதல் செய்தாக வேண்டும், என்பதுடன், கொரோனா நெருக்கடிக்கு எதிரான போரில், அவற்றின் கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் அனைவருக்கும் உரித்தாக்க வேண்டும்.

 

எங்களது கோரிக்கைகள்:

 

  • கொரோனா பரிசோதனை மட்டுமின்றி, சிகிச்சையையும் இலவசமாக வழங்கு!
  • தனியார் ஆய்வகங்களையும், தனியார் மருத்துவமனைகளையும் பறிமுதல் செய்து பொதுச்சுகாதார அமைப்பில் சேர்த்து விடு! அவற்றை மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், அரசு மற்றும் நோயாளிகளின் பிரதிநிதிகளை கொண்ட குழுவின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வா!
  • அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் இதர மருத்துவ பணியாளர்களுக்கும், அங்கன்வாடி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு உபரணங்களை வழங்கிடு!
  • அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும், அரசு மற்றும் தனியார் சுகாதாரத்துறையை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 25,000க்கு மேல் வழங்கிடு!
  • நிவாரணப் பொருட்களின் விநியோகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி சபைகள் மற்றும் சமூக பிரதிநிதிகளின் மேற்பார்வையின் கீழ் செய்திடு!

 

கையெழுத்திட்டோர்:

 

தோழர். யுவ்ராஜ், பொது சுகாதார சேவைக்கான பிரச்சாரக் குழு, புதிய சோஷலிச மாற்று

தோழர். ராஜன் ஷிர்சாகர், தலைவர், லால் பவதா ஷெட்மஜூர் சங்கம், மகாராஷ்ட்ரா (லால் பவதா விவசாய தொழிலாளர் சங்கம்)

தேவிதாஸ் துலஜா புர்கர், பொதுச் செயலாளர், மராட்டிய மாநில வங்கி ஊழியர் கூட்டமைப்பு

மேத்தா பட்கர், மக்கள் இயக்கத்திற்கான தேசிய கூட்டணி

முனைவர். D L காரத், தேசிய துணை தலைவர், இந்திய தொழிற்சங்க மையம் (CITU)

தோழர். ராஜன் டேனி, மாநில செயலாளர், பி.எஸ்.என்.எல் தொழிலாளர்கள் சங்கம்

அனில் கணாச்சார்யா, துணை தலைவர், INTUC (மகாராஷ்ட்ரா)

பிரகாஷ் பன்ஸோதே, மத்திய கமிட்டி உறுப்பினர், AITUC

மேதா சாமந்த், அன்னபூர்ணா பரிவார்

தோழர். ராஜூ பரஞ்ஜ்பே, தலைவர், பொது தொழிலாளர் சங்கம் (லால் பவதா)

இப்பட்டியலில் நீங்களும் இடம்பிடிக்க வேண்டுகிறோம்.

உங்கள் பெயரையும், தாங்கள் ஏதேனும் பொறுப்பு வகிப்பின், அது குறித்த தகவலையும் எங்களுக்கு newsocialist.in@gmail.com மற்றும் cwi@worldsoc.co.uk ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.

About T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top