Home / கட்டுரைகள் / “அனைத்தும் மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது” – வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ நெருக்கடியின் புதிய சகாப்தமும்:

“அனைத்தும் மாறிவிட்டது, முற்றிலும் மாறிவிட்டது” – வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ நெருக்கடியின் புதிய சகாப்தமும்:

CWI இன் சர்வதேச செயலகத்தின் அறிக்கை

மொழிப்பெயர்ப்பு – வசந்த்

 

‘ஈஸ்டர் 1916’ கவிதையிலிருந்து கிடைக்கப் பெறும் WB யீட்ஸின் சொற்கள் தற்போதைய உலக நிலவரத்தை சுருக்கமாகக் கூறுகின்றன: “அனைத்தும் மாறிவிட்டன, முற்றிலும் மாறிவிட்டன.” முந்தைய CWI பகுப்பாய்வில் நாம் விளக்கியது போல 2020ஆம் ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். உலகப் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலில் அடிப்படை மாற்றங்களும், உலக அளவில் வர்க்கங்களுக்கிடையில் ஒரு பெரிய துருவமுனைப்பும் உருவாகி வருகின்றன.  கோரோனா பெருந்தொற்றின் நெருக்கடி தொடங்குவதற்கு முன்னரே, இன்று நாம் காணும் நிகழ்வுப் போக்குகள் அனைத்தும் இருந்தன. ஆயினும், அவை தற்போது கத்தி முனை போல்-கூர்மைப்படுத்தப்பட்டு மின்னல் வேகத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. புரட்சியாளர்கள் மற்றும் சோசலிஸ்டுகளை பொருத்தவரை, அரசியல் ரீதியிலும், நடைபெற்று வரும் சமூக எழுச்சிகளில் நமது தலையீடுகளிலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய சவால்களையும் பணிகளையும் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். நடந்துவரும் வியத்தகு எழுச்சிகள் யாவும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்பது பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனினும், முதலாளித்துவத்தால் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மட்டுமல்ல, 2007-08க்கு முந்தைய நிலைக்குக் கூட திரும்ப முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

நீண்டகால பொருளாதார வீழ்ச்சியோ அல்லது மந்தநிலையோ தான் 2020 களின் அடையாளமாக இருக்கப்போகிறது. பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் எந்தவொரு ஏற்றமோ, இறக்கமோ கோடிக்கணக்கான மக்கள் எதிர்கொண்டு வரும் வறுமையையும் இயலாமையையும் முடிவுக்குக் கொண்டுவராது என்பதோடு, பணியில் இருப்பவர்களுக்கும் வேலை பாதுகாப்பை அளித்து விடாது. அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் நடந்துவரும் சமீபத்திய சமூக வெடிப்புகள் காட்டியுள்ளபடி, பல பத்தாண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் 1930 களில் இருந்து,  காணப்படாத சமூக மற்றும் அரசியல் பூகம்பங்கள், தற்போது பொது மேடைக்கு வந்து விட்டன. சாத்தியமற்றது என்று நேற்று கருதப்பட்டவை யாவும் இன்று சாத்தியப்பட கூடியவையாகவும், சாத்தியமானவையாகவும் மாறிவிட்டன. புரட்சியும், எதிர் புரட்சியும் இன்னும் கூர்மையான வடிவில் பல பத்தாண்டுகளுக்கு ஒன்றோடு மோதிக்கொள்வதற்கான சாத்தியக்கூறினை நாம் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம். இதை நாம் அதன் இயங்கு போக்கில் அவதானிக்க வேண்டும். நேற்றைய முப்பரிமாண கண்ணாடியின் மூலம் இன்றைய  உலகையும், வர்க்கப் போராட்டங்களையும் பார்ப்பதன் மூலம் பின்தங்கிவிடக்கூடாது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் மூர்க்கமான போராட்டங்களே உலக நிலவரத்தின் மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால வீழ்ச்சியையும், இரண்டாவது உலக சக்தியாக சீனாவின் துரிதமான எழுச்சியையும் பிரதிபலிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எழுச்சி வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் மொத்த உலக உற்பத்தியில் 3.5% ஆக இருந்த சீனாவின் பங்களிப்பு 2019 ஆம் ஆண்டில் 14.5% ஆக உயர்ந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய கடன் வழங்குநராக உள்ள சீனா, 5 லட்சம் கோடி டாலர்களை கடனாக அளித்துள்ளது. மேலும் 3 லட்சம் கோடி டாலர்களுக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கிறது. இந்த நெருக்கடி தொடங்குவதற்கு முன்பே பொருளாதாரத்தை மறுமையப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொருளாதார ரீதியாகவும் சுகாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கும்,  மிகவும் திறமையாகவும் துரிதமாகவும் செயல்படவும் உதவியுள்ளன. சீன அரசு தற்போது டிஜிட்டல் நாணயத்தை புழக்கத்தில் கொண்டுவர சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல சிக்கல்களையும் சிரமங்களையும் இந்நடவடிக்கை உள்ளடக்கியிருக்கும் போதிலும், டாலருக்கு மாற்றான நாணயமாக இதைப் பயன்படுத்தும் உள் நோக்கத்தையும் சீன அரசு கொண்டிருக்கக்கூடும். இதில் அவர்கள் வெற்றிபெற முடியுமா என்பது மற்றொரு கேள்வி. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உலகின் முன்னணி பரிவர்த்தனை நாணயமாக இருக்கும் டாலரின் இடத்தை பலவீனப்படுத்துவதில் பிரதிபலிக்கும். போட்டி நாணய மோதல்கள் வெடிப்பது நெருக்கடியின் வளர்ச்சிப்போக்கில் ஒரு அம்சமாகும்.

சீனாவின் வளர்ச்சியும், அமெரிக்காவின் வீழ்ச்சியும் புவிசார் அரசியலடுக்கு தட்டுகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் உறவுகளிலும் கூட்டணிகளிலும் அதிர்வலைகளை உருவாக்குவதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகில் ஒரு மிகப்பெரிய வல்லாதிக்க சக்தியாக அமெரிக்கா இருக்கும் போதிலும், உலகின் ஒற்றை வல்லாதிக்க சக்தியாக தன்னை இருத்திக் கொள்ள அதனால் முடியவில்லை.  பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் செல்வாக்கு மண்டலம் பலவீனமடைந்துள்ளது. இந்த சரிவு  சமீபத்திய நாட்களாக அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கும் வெகுஜன சமூக வெடிப்பில் பிரதிபலிக்கிறது.  இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சரிந்த போது பெரிய வர்க்கப் போராட்டங்களும் புரட்சிகர கொந்தளிப்புகளும் உருவாகியதை நாம் நினைவுகூர வேண்டும். இந்த செயல்பாடு தற்போது அமெரிக்காவில் வளர்ந்து வருகிறது, அங்கு நிகழ்வுகள் மின்னல் வேகத்திலும், பெரும்பாலும் வன்முறை முறையிலும் அரங்கேறுகின்றன.  அமெரிக்காவில் நடந்த ஒரு வேலைநிறுத்தம் குறித்து ட்ரொட்ஸ்கி கூறியதை போல, வர்க்கப் பிரிவுகள் அப்பட்டமாக இருக்கும் ஒரு நாட்டில் போராட்டங்கள் பெரும்பாலும் ஒரு சிறு உள்நாட்டுப் போரின் தன்மையைக் கொண்டிருக்கும்.

1990களின் கொள்கைகளும் உலகமயமும் விடைபெறுகின்றனவா?

முன்னாள் சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பாவின் முன்னாள் ஸ்டாலினிச நாடுகளும் வீழ்ந்ததை தொடர்ந்து, 1990 களின் காலக்கட்டம் உலகமயமாக்கலாலும், உலகப் பொருளாதார ஒருங்கிணைப்பு என்ற அம்சத்தாலும் குறிக்கப்பட்டது. இந்த செயல்முறையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு, யூரோ மண்டலத்தை நிறுவுதல், வட அட்லாண்டிக் தடையிலா ஒப்பந்தம் போன்ற வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பிரதிபலிக்கும் அளவுக்கு நீண்டது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்த சீனா, ஒரு பெரிய வர்த்தக விரிவாக்கத்தை, குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் கண்டதோடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான விநியோகச் சங்கிலியின் முக்கிய பகுதியாகவும் ஆனது. சில அதிர்ச்சிகளும் நெருக்கடிகளும் இருந்தபோதிலும், இந்த செயல்பாடு முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஒப்பீட்டளவில் நிலையான வளர்ச்சி காலத்தில் தான் நடந்தது.

உலகப் பொருளாதாரத்தில் தொடர்ச்சியான சரிவுகள் ஏற்பட துவங்கியவுடன் இந்த செயல்பாடு தலைகீழாக மாறும் என்று அந்த நேரத்தில் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) வாதிட்ட படி, இந்த நிலைமைக்கு வரம்புகளும் இருந்தன. மற்றவர்கள், மார்க்சிய இடதுசாரிகளில் சிலரும் கூட, இந்த செயல்முறை மாற்ற இயலாதது என்று எண்ணினார்கள்; ஒற்றை ஐரோப்பிய முதலாளித்துவம் ஒன்று உருவாகும் என்று கூட பேசினார்கள். ஆயினும், உலகமயமாக்கல் செயல்பாட்டின் உச்சத்திலும் கூட, முதலாளித்துவத்தின் கீழ் தேசிய அரசுகளால் விதிக்கப்பட்ட வரம்புகள் யாவும் முழுமையாக தளர்த்தப்படவில்லை. 2007-08 இன் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்த முன்கணிப்பு நிரூபணமானது. ஆளும் வர்க்கங்கள் தங்கள் சொந்த தேசிய நலன்களைப் பாதுகாக்க முற்பட்டதால் உலகமயமாக்கலை சுருக்கும் ஒரு செயல்பாடும் துவங்கியது.

COVID-19 நெருக்கடியால் துவக்கி வைக்கப்பட்டுள்ள தற்போதைய பொருளாதார சரிவு அல்லது சுணக்கத்தின் தீவிரம் இந்த போக்கை அதிவிரைவாக முடுக்கிவிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஜனவரி மாதம் ஒரு சுமூக பேச்சுவார்த்தை நடந்த பின், மீண்டும் அந்நாடுகள் தங்களுக்கிடையிலான வர்த்தக யுத்தத்தை துவங்க இந்நெருக்கடி வழிவகுத்துள்ளது.  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை அமெரிக்கா 1993ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. அமெரிக்காவில் சீன முதலாளித்துவ முதலீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அளவுகளில் 60% குறைந்துள்ளது. சீனாவிற்கு மின் தடுப்பு சாதனங்களின் விற்பனையைத் தடுக்கும் வண்ணம் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன; சில சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதை நிறுத்த ஓய்வூதிய நிதியத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதோடு, மின் பகிர்மான கம்பங்களுக்கு பயன்படுத்தப்படும் மின் சாதனங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தவும் அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சீனாவுடனான தொடர்புகளை முற்றிலுமாக முறித்துக் கொள்வேன் என்று டிரம்ப் கொக்கரித்திருக்கிறார். இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை துண்டிப்பதற்கான செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த செயல்பாடு எவ்வளவு தூரத்துக்கு செல்லப் போகின்றது என்பது இந்த கட்டத்தில் தெளிவாக தெரியவில்லை என்றாலும், அதற்கு வரம்புகள் உள்ளன; எவ்வாறாயினும், இந்த இரண்டு உலக வல்லாதிக்க சக்திகளுக்கிடையே தற்போது நிலவும் போட்டியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், அது நீண்ட தூரம் செல்லக்கூடும் என்று தெரிகிறது. அமெரிக்க பொருளாதாரத்திற்கு இதில் பெரிய இடர்பாடுகள் உள்ளன என்பதால், அமெரிக்க முதலாளி வர்க்கத்தின் சில பிரிவுகள் அதை எதிர்க்கின்றன. சீனாவுக்கு எதிரான ட்ரம்ப்பின் தேசியவாத சொல்லாடலும், அவர் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளும் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அவரது வேட்கையால் உந்தப்பட்டவை என்றாலும், இந்த மோதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியாலும், சீனாவின் ஏற்றத்தாலும் உந்தப்படுகிறது. சீனாவும் பொருளாதார மற்றும் சமூக கொந்தளிப்புகளால் உலுக்கப்படலாம்; அவற்றின் மூலம் அந்நாட்டின் வளர்ச்சியும் தடுத்து நிறுத்தப்படலாம்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஸ்பார்டாவிற்கும் ஏதென்ஸுக்கும் இடையிலான போர்களை (கிமு 431-404) பற்றி எழுதிய கிரேக்க வரலாற்றாசிரியரின் பெயரால் அழைக்கப்படும் ‘துசிடிடிஸ் பொறியில்’ சிக்கியுள்ளது; அதாவது வீழ்ச்சியடைந்து வரும் ஒரு சக்தி, எழுச்சியடைந்து வரும் ஒரு சக்தியை எதிர்கொள்ளும் போது தானாகவே போருக்குள் தள்ளப்படுகிறது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முழு வீச்சிலான இராணுவப் போர் எந்தவொரு நாட்டினாலும் விரும்பப்படவில்லை என்பதோடு, அணு ஆயுதங்கள் காரணமாக சாத்தியமில்லை என்றாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இரு நாடுகளும் வர்த்தகப் போருக்குத் தள்ளப்படுகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், அவை அமெரிக்க பொருளாதாரத்திற்கு மேலும் சேதத்தை உண்டாக்கக் கூடும். டிரம்ப் எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறார் என்பதை இது மட்டுப்படுத்தக் கூடும்.

ஆயினும், போர் என்பது அரசியலின் தொடர்ச்சிக்கான இன்னொரு வழியே என்பதோடு, ஒரு வர்த்தக யுத்தம் என்பதும் இராணுவ யுத்தத்திற்கான அதே தர்க்கத்திற்கே உட்பட்டதாகும். நிகழ்வுகள் யாவும், வேகத்தையும் தனக்கே உரிய ஆற்றலையும் கொண்டுள்ளன.  போர் வெடிப்பதற்கு முன்னர் தொடர்ச்சியான மோதல்கள் நடப்பது, போட்டி முகாம்கள் உருவாக்கப்படுவது என்று சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் சூழலுக்கும், 1914-18 யுத்தத்தின் போது நிலவிய சூழலுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. ஆளும் வர்க்கங்களின் பிரிவுகள் போரைத் தவிர்க்க முயன்றன. போருக்கு எதிராக வெகுஜன போராட்டங்களும் பல நாடுகளில் நடந்தன. ஆயினும், ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிய தொடர்ச்சியான மோதல்கள், எதிர்வினையாற்ற நிர்பந்தித்த நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்வுகளும், முதலாளி வர்க்கத்தின் நலன்களும் தனக்கே உரிய ஆற்றலைக் கொண்டிருந்தன. வர்த்தக உறவுகளை துண்டிப்பதற்கான செயல்முறை எவ்வளவு தூரம் செல்லப் போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை, அதை கணிப்பதும் கடினம், ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது என்பதுடன், உலகப் பொருளாதாரத்தின் மீதும் மற்றும் சர்வதேச உறவுகளின் மீதும் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்பது மட்டும் தெளிவு.

சீன எதிர்ப்பு முகாம் அல்லது கூட்டணியை உருவாக்கும் நோக்குடன் இந்தியாவையும் ரஷ்யாவையும் சேர்த்து, G7 அமைப்பை விரிவுபடுத்துமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், ஜெர்மனி அதிபர் மெர்க்கெலுக்கும் டிரம்பிற்கும் இடையே முரண்பட்ட விவாதங்களை உருவாக்க இந்த அழைப்பு போதுமானதாக இருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நட்பு சக்திகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தாலும், டிரம்ப், பூட்டின் மற்றும் மோடியின் கூட்டணி அப்படி ஒன்றும் நிலையான நட்பு கூட்டணி அல்ல! எவ்வாறாயினும், அடுத்த கட்ட தேவை எழும் போது சாதாரணமாக ஒதுக்கி வைக்கப்படும் ட்ரம்பின் வழக்கமான ஆத்திரப் பேச்சாகவும் இது இருக்கக் கூடும். ஆயினும், இந்த நெருக்கடியிலிருந்து ஒரு புவிசார் அரசியல் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலில் இருந்து, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையற்ற துருவங்களின் தோற்றம் எவ்வாறு உருவாகலாம் என்பதை இது விளக்குகிறது.

இந்த நெருக்கடியின் விளைவாக சீனா சர்வதேச அளவில் தனது நிலையை பலப்படுத்தியுள்ளது. அந்நாடு ஹாங்காங்கின் மீதான தனது பிடியை இறுக்க தற்போதைய சூழலைப் பயன்படுத்தி வருவதோடு, தைவானுடனான உறவிலும் மிகவும் மூர்க்கமாக இருந்து வருகிறது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சக்திகளின் துல்லியமான சமன்பாடு என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கட்டத்தில் தெளிவாக தெரியவில்லை என்றாலும், அது பாய்ச்சலில் இருக்கப் போகிறது என்பது தெளிவு. சீனாவிலும் சமூக எழுச்சிகளுக்கான வாய்ப்பும், ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியும் துவங்கும் பட்சத்தில், இந்த இரு சக்திகளுக்கிடையே உருவாகும் மோதல்கள் அநேகமாக ஒரே நேர்கோட்டில் ஏறுமுகமாகவோ அல்லது இறங்குமுகமாகவோ இருக்காது, மாறாக ஏற்ற இறக்கமாக ஊசலாட்டத்துடன் இருக்கும்.

உலகமயமாக்கல் மற்றும் உலகப் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு பின், தொடர்ச்சியான பொருளாதார சரிவுகளும், மந்தநிலையும் துவங்கி, உலகமயமாக்கலை சுருக்குவது, பாதுகாப்புவாதம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாடு துவங்கும் என்று 1990 களில் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) வாதிட்டது. சமீபத்தில் பிரிட்டிஷ் பத்திரிகையான தி எகனாமிஸ்ட் “குட்பை உலகமயமே” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. “உலகமயமாக்கலின் மிகப் பெரிய சகாப்தத்திற்கு விடைகொடுங்கள் – அதன் இடத்தில் வரப்போவது என்னவாக இருக்கும் என்பதை பற்றி கவலைப்படுங்கள்.” என்று அக்கட்டுரை முடிவடைந்தது.

முதலாளித்துவ பொருளாதாரம் தேசிய-அரசு பொருளாதாரமாக தேசிய எல்லைகளுக்கு பின்னால் உடனடியாக சுருங்கிவிடப் போகிறது என்பதோ, உலகமய பொருளாதாரம் மொத்தமாக சரிய போகிறது என்றோ இதற்கு அர்த்தமில்லை. வர்த்தகம், பாதுகாப்புவாதம் மற்றும் சுங்கவரி ஆகியவை தொடர்பான மோதல்களையும், தற்போது இயங்கிவரும் யூரோ மண்டலம் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முகாம்கள் உடைபடுவது மற்றும் பல்வேறு முதலாளித்துவ சக்திகள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட மோதல்கள் வெடிப்பதையுமே இது குறிக்கும்.

முதலாளித்துவ சரிவு அல்லது மந்தநிலையின் புதிய சகாப்தம் துவங்குகிறது:

இந்த புதிய சகாப்தத்தின் அனைத்து அம்சங்களும் உலகப் பொருளாதாரத்தின் பேரழிவு நிலையிலிருந்தும், நீண்டகால பொருளாதார சரிவு அல்லது மந்தநிலை உருவாவதற்கான வாய்ப்பிலிருந்தும் வருகின்றன. COVID-19 வைரஸ் இன்னும் விரட்டியடிக்கப்படவில்லை. ஏதாவது ஒரு நாட்டில் மீண்டும் இந்நோய் தொற்று வேகமெடுத்தால், சுகாதாரம், அரசியல் மற்றும் பொருளாதார சூழல்களில் பேரழிவுகளை ஏற்படுத்தும். இந்த பொருளாதார சரிவு அல்லது மந்தநிலைக் காலத்திற்குள், சிறிய, தற்காலிகமான மீட்சிகள் குறிப்பாக ‘பொதுமுடக்கம்’ தளர்த்தப்படுவதோ அல்லது நிறுத்தப்படுவதாலோ நிகழப்போவது நிச்சயம். ஆயினும், அவற்றுக்கு பிறகும் சரிவுகளும் மற்றும் தேக்கங்களும் தொடரும். நாம் நுழைந்திருக்கும் இந்த புதிய காலக்கட்டமானது, அதிகரித்து வரும் முதலாளித்துவ நெருக்கடிகள் அடிக்கடி நிகழும் காலக்கட்டமாகவே பெரும்பாலும் இருக்கப்போகிறது. இது முக்கியமானது, ஏனெனில் தொழிலாளர்களையும் நடுத்தர வர்க்கத்தையும் நெருக்கடிக்கான ஒரு புரட்சிகர தீர்வை நோக்கி நகர்த்துவது பொருளாதார வீக்கமோ அல்லது சரிவோ அல்ல. மாறாக, சரிவிலிருந்து ஒரு சிறு மீட்சியும், அதன் பின்னர் மீண்டும் சரிவை நோக்கிய வீழ்ச்சியும் வர்க்க முரண்பாடுகளிலும், விழிப்புணர்விலும், வர்க்கப்போரிலும் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவீன பணவியல் கோட்பாடு ஒரு தீர்வா அல்லது முட்டுக்கட்டையா

முதலாளித்துவ வர்ணனையாளர்களும், இடதுசாரிகளில் சிலரும், 2020 களில் முதலாளித்துவம் எதிர்கொண்டு வரும் அழிவுகளிலிருந்து அதனை தப்பிக்க செய்வதற்கான ஒரு வழியைத் தீவிரமாக தேடி வருகிறார்கள். ‘நவீன நாணயக் கோட்பாட்டில்’ (Modern Monetary Theory) அதற்கான வழியை கண்டுபிடித்து விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். அண்மை காலம் வரை இக்கோட்பாடு ஒரு சில வலைதளப் பக்கங்களில் மட்டுமே இடம்பெறும் அளவு புறந்தள்ளப்பட்டிருந்தது. தற்போது இது முதலாளித்துவ வர்ணனையாளர்களால் விவாதிக்கப்பட்டு வருவதோடு, அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் பெர்னி சாண்டர்ஸின் முன்னாள் ஆலோசகர் ஸ்டெபானி கெல்டன் போன்ற சில இடதுசாரிகளால் அதிக அளவில் முன்மொழியப்படுகிறது. வேலைக்கான உத்திரவாதம் வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

அவர்களது யோசனைகள் யாவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கவன ஈர்ப்பையும் ஆதரவையும் பெறக் கூடும். முதலாளித்துவத்தை தூக்கியெறிவதை விட நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு ‘எளிதான’ வழியாக அவை பார்க்கப்படலாம். முதலாளி வர்க்கத்தின் சில பிரிவுகளும் அழிவிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் இவற்றை கையிலெடுக்கலாம். இந்த கருத்துக்கள் யாவும் முதலாளித்துவத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன. தற்போதைய இடதுசாரி தலைமை முதலாளித்துவ கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டு எதையும் சிந்திக்க வல்லது அல்ல. 1930 களில், சீர்திருத்தவாதிகள் கூட, நடைமுறையில் முதலாளித்துவத்தை எதிர்க்காவிட்டாலும், சோசலிசத்தை ஒரு மாற்று தீர்வாக பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 1930 களில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளும் போதிலும் கூட, ​​’இடதுசாரி’ தலைமையின் பெரும்பான்மையானவர்கள் இந்த சாத்தியத்தை கருத்தில் கொள்ள தயாராக இல்லை என்பதோடு, சோசலிசத்தை ஒரு மாற்றாக முன்வைக்கவே அஞ்சுகின்றனர்.

‘நவீன நாணயக் கோட்பாட்டின்’ கருத்துக்கள் அப்படி எதைத் தான் கூறுகின்றன? இதன் ஆதரவாளர்கள் தங்களை “கீன்ஸிய வழித்தோன்றல்கள்” என்று அழைத்துக் கொள்கிறார்கள்.  புதிதாக ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்த இவர்கள், அடிப்படையில், கீன்ஸின் முடிவுக்கு தான் மீண்டும் வந்தடைந்துள்ளனர். நாணயத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசாங்கங்களுக்கு, அளவின்றி கடன்களை குவித்து கொண்டிருப்பது ஒரு பிரச்சினையே அல்ல என்றும், மிகக் குறைந்த அல்லது பூஜ்ஜிய வட்டி விகிதத்தில் அவை கடன்களை வரம்பின்றி அள்ளி கொடுக்கலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். பண வீக்கம் மட்டுமே ஒரே பிரச்சனை என்பதே அவர்களது வாதம். அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவுக்கு தொழிலாளர்கள் இருக்கும் வரை இப்பிரச்சனையை தவிர்த்துவிட முடியும் என்று கூறுகின்றனர்.

ஆனால், முதலாளித்துவம் இன்று எதிர்கொண்டு வரும் மையப் பிரச்சினையே சந்தையும், பண்டங்களுக்கான தேவையும் இல்லாதிருப்பது தான். ஒன்றன் பின் ஒன்றாக நாடுகளை தாக்கி வரும் வேலையின்மை என்ற சுனாமியும், வேலையில் இருப்பவர்களது வருவாய் குறைந்து வருவதும், அத்துடன் தனிநபர் கடன்கள் பெரிய அளவுக்கு குவிந்துவருவதும் இப்பிரச்சனையை இன்னும் மிகப்பெரியதாக்க  போகின்றது. மேலும், ஒவ்வொரு நாடும் தவிர்க்க முடியாதவாறு, நாணய வரம்புகளை மீறி வெவ்வேறு அளவிலான செலவுகள் மற்றும் கடன் நிலைகளை பின்பற்ற விரும்பும் ஐரோப்பிய மண்டலத்தில் இக்கொள்கை செயல்பட முடியாது.

மிகப்பெரிய அளவுக்கு அரசு நிதியளிக்கும் பட்சத்தில் முழு வீழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தவிர்க்க முடியும். முதலாளி வர்க்கம் தனது நவ-தாராளவாத திட்டங்களை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளதோடு, அரசின் இதர தலையீட்டு நடவடிக்கைகளுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பல லட்சம் கோடிகளை புகுத்தியுள்ளது. பொருளாதாரத்தின் முழுமையான சரிவைத் தடுக்கும் பொருட்டு இத்தலையீடு தொடர்ந்து நிகழ்த்தப்படவும் வாய்ப்புள்ளது. ஜெர்மனி தற்போது இன்னொரு 13000 கோடி யூரோ தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே கணிசமான அளவுக்கு தேவையை அதிகரிக்க செய்தாலும், நெருக்கடியின் மூல காரணங்களை தீர்க்க போதுமானதாக இல்லை. இந்த தொகுப்பு திட்டங்கள் நெருக்கடியை சமாளிப்பதற்கு உதவுமே தவிர, நெருக்கடிக்கு தீர்வல்ல. இந்த கொள்கைகள் தொழில்மயமாக்கப்பட்ட முதலாளித்துவ நாடுகளில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்க கூடும். ஆனால், மிகப்பெரிய அளவுக்கு வர்க்க பிரிவினை, தொழிலாளர்களின் மீதும், ஏழைகளின் மீதும் அழிவுகரமான விளைவுகளை உண்டாக்கி கொண்டிருக்கும் நவ-காலனிய உலகில் இது சாத்தியமல்ல.

ஆயினும், தொழில்மய நாடுகளில் காலவரையின்றி கடன் அளவை ஒரு குமிழி போன்று பெருக்கடித்து கொண்டே சென்றால், ஒரு கட்டத்தில் உலகப் பொருளாதாரம் ஏதேனும் ஒரு அதிர்வலையால் தாக்கப்படும் போது வெடித்து சிதறிவிடும். வரலாற்று ரீதியாக, அமெரிக்கா உள்ளிட்ட முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் மிக அதிகமாக இருந்தது. யுத்த சேதத்தை, குறிப்பாக ஐரோப்பாவில், மீண்டும் கட்டியெழுப்புதல், புதிய சந்தைகளை உருவாக்குதல், உலக வர்த்தகத்தில் அபிரிவிதமான வளர்ச்சி மற்றும் போருக்குப் பிறகு கீன்ஸிய வழிமுறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு, யுத்தத்திற்கு பின் நீடித்த முதலாளித்துவ ஏறுமுக காலத்தில் இக்கடன் விகிதம் குறைக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழல் இதற்கு நேர்மாறாக உள்ளது. உலகம் பொருளாதார சரிவில் மூழ்கிக் கொண்டிருக்கிறது; சில நாடுகளில் மந்தநிலை கூட நிலவுகிறது. கணிசமான, நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இல்லை. முதலாளித்துவத்தின் அடிப்படை பொருளாதார விதிகள் கூறுவது போன்றே, தொழிலாளர்களின் நிலைமைகள் மோசமாகி வருவதும், அவர்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைவதும், நடைமுறை பொருளாதாரத்தில் பிரதிபலிக்கப் போகின்றன. முதலாளித்துவம் அமைப்பு ரீதியான ஒரு நெருக்கடியில் உள்ளது. அமைப்புக்கு உட்பட்டு ஒரு தீர்வு என்பது சாத்தியமல்ல.

நவீன பணவியல் கோட்பாட்டை நியாயப்படுத்த கெல்டன் சுட்டிக்காட்டும் உதாரணம் ஜப்பான் ஆகும். அந்நாடு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளின் பயன்பாட்டுக்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் முயற்சித்துள்ளது. 1992 – 2008 க்கு இடையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 18 க்கும் அதிகமான நிதி தொகுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் எதுவும் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் மீட்டு தரவில்லை. ‘அபே-னாமிக்ஸ்’ இப்போது முதலாளிகளுக்கு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதை எளிமையாக்கியிருப்பதோடு, பணிப் பாதுகாப்பின்மையையும் வியக்கத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. 2015 இல் 37.5% தொழிலாளர்களை பாதித்திருந்த இந்த நிலை, இன்று மேலும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜப்பானில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் 240% ஆகும். ஜப்பானின் பெரும்பாலான கடன்கள் வெளிநாட்டு கடனாளர்களால் அல்லாமல், சொந்த நாட்டு மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதால், இது திவாலுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருகிறது. ஆனால் விளைவு என்னவாக ஆனது? பொருளாதார சரிவு தவிர்க்கப்பட்டது, ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்திய இருபதாண்டுகளுக்கும் மேலான தேக்க நிலையை அதற்கான விலையாக கொடுக்க வேண்டியிருந்தது. போருக்குப் பிந்தைய காலத்தில் ஜப்பானிய முதலாளித்துவத்தின் தலை சிறந்த அம்சமாகக் கருதப்பட்ட ‘நிரந்தர வேலைவாய்ப்பு’ என்பது தற்போது பணிப் பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒரு பகற்கனவாகவே ஆகிவிட்டது. COVID-19 நெருக்கடிக்கு முன்னரே மேற்கு ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய OECDயில் (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகளில்) ஒற்றை பெற்றோர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் வறுமை விகிதம் 56% என்ற உச்சநிலையில் இருந்தது. இந்த தருணத்தில் நவ-கீன்ஸியவாதிகள் ஜப்பானின் வழிமுறையை மாற்று தீர்வாக முன்வைப்பது எந்த வகையில் சிறந்ததாக இருக்கும்? ஜப்பான் ஒரு வெற்றிக் கதைக்கான முன் உதாரணம் அல்ல; மாறாக, நீடித்த தேக்கநிலைக்கும், மோசமாகி வரும் சூழல்களுக்குமான கடுமையான முன்னெச்சரிக்கையாகும்.

அதிக கடன் விகிதத்தை நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடித்து கொண்டிருக்கும் ஜப்பானின் திறனுக்கு இன்னுமொரு காரணம் உண்டு. அது மூன்றாவது பெரிய ஏகாதிபத்திய நாடாக இருக்கும் காரணத்தை நாம் அவதானிக்க வேண்டும். தொழில்மயமாக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரங்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக அளவு கடன் சுமையை தாக்குப்பிடிக்க முடியும் என்றாலும், நவ காலனிய உலகிற்கு இது பொருந்தாது. கடன் திவாலாவதற்கான அச்சுறுத்தல் இந்த நாடுகளில் எப்போதும் உள்ளது. அர்ஜென்டினாவும் லெபனானும் கடனை திரும்ப செலுத்துவதை பகுதியளவுக்கு ஒத்தி வைத்திருப்பதே, வரவிருக்கும் காலகட்டத்தில் கடன் நெருக்கடி ஒரு பெரிய பிரச்சினையாக வெடிக்க வாய்ப்புள்ளது என்பதை காட்டுகிறது. இது மற்றுமொரு உலகளாவிய நிதி நெருக்கடியை துவக்கி வைத்து, கடன் சுமையை தாக்குப்பிடிக்க முடியாத நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும்.

நவீன பணவியல் கோட்பாட்டின் (MMT) ஆதரவாளர்கள் நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, இக்கோட்பாட்டை ஒரு புதிய சுற்று சூழல் ஒப்பந்தத்தை’ குறித்த கேள்வியுடன் அவ்வப்போது இணைக்கின்றனர். சில நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு சார்பான பொருளாதாரத்தில் முதலீடு இருக்கும். ஆயினும், உலக அளவில் இதற்கு தேவைப்படும் முதலீட்டின் அளவை வைத்து பார்க்கையில், முதலாளி வர்க்கத்தால் இதைச் செய்ய முடியாது என்பது தெளிவு. சந்தையின்மை என்ற பிரச்சனையை அது தீர்க்காது. அதேவேளை, ஒவ்வொரு முதலாளி வர்க்கமும் தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாலும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக தனது பொருளாதாரத்தை மறுதிறப்பு செய்வதாலும், உலக அளவில் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான தேசியவாத வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்குத் திரும்புவது இத்திசையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தும். ஏற்கனவே, சீனாவில் காற்று மாசுபாடு அளவுகள், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு மீண்டும் துவங்கியிருப்பதன் விளைவாக, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு திரும்பியுள்ளன.

அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கும் சமூக வெடிப்பு:

மினியாபொலிஸ் நகரின் காவல்துறையினரால் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, கசப்புணர்ச்சி மற்றும் கோபத்தின் வெளிப்பாடாக அமெரிக்காவிலும் உலகெங்கிலும் நடைபெற்று வரும் சமூக வெடிப்பு நிகழ்வுகள் யாவும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தத்தினுள் நாம் நுழைந்திருப்பதை குறிக்கின்றன. 1960களின் சமூக உரிமை இயக்கத்திற்குப் பின் அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய இயக்கம் இதுவே. தற்போதைய போராட்டத்தின் ஒரு முக்கிய வேறுபாடு என்னவெனில், 1960களில் வெள்ளைத் தொழிலாளர் வர்க்கம் வாழ்க்கைத் தர உயர்வையும், செழிப்பையும் அனுபவித்து வந்தது. இன்றோ, வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சியடைந்து, வெகுஜன வேலையின்மை கோடிக்கணக்கான வெள்ளைத் தொழிலாளர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் இயக்கம் உலகெங்கிலும் அற்புதமான போராட்டங்களின் பிரம்மாண்டமான அலைகளை, குறிப்பாக இளைஞர்களிடம், துவக்கி வைத்துள்ளது. லண்டனிலும், வியன்னாவிலும் 50,000க்கும் மேற்பட்டோர் அணிவகுத்துச் சென்றனர். லண்டன் பேரணியில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை 1,00,000ஆக பெருகியது; வாஷிங்டனில் 200,000 பேர் வீதிகளில் இறங்கினர். தொற்றுநோய் துவங்குவதற்கு முன்பு நாம் பார்த்த, லத்தின் அமெரிக்க கண்டத்தை உலுக்கிய போராட்டங்களை போலவே, இந்த உலகளாவிய போராட்டங்களும் நிரந்தர புரட்சியின் ஒரு அம்சத்தை நமக்கு படம் வரைந்து விளக்குகின்றன. அடையாள அரசியல் கருத்துக்கள் இந்த இயக்கங்களின் சில இடங்களில் இருப்பதை தவிர்க்க முடியாது என்றாலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் பல்லின, பல பாலின மற்றும் வர்க்க அமைப்பு தன்மையானது அடையாள அரசியலாளர்களின் கருத்துக்களை அடித்து நொறுக்குகிறது.

அமெரிக்க நிகழ்வுகள் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஏகாதிபத்திய சக்தியின் திருப்புமுனையை குறிக்கின்றன. ஈகுவேடார் மற்றும் லெபனானில் போராட்ட இயக்கங்களின் மீட்சி, மற்றும் சிலியில் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டங்களின் முதல் அலை ஆகியவற்றின் பின்னணியில் அமெரிக்க நிகழ்வுகள் துவங்கியுள்ளன. பார்சிலோனாவில் நிசான் தொழிலாளர்கள், பிரான்சில் ரெனால்ட் தொழிலாளர்கள், அர்ஜென்டினா மற்றும் பிற இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஆர்ப்பாட்டங்கள் யாவும் குறுகிய காலத்தில் பல நாடுகளில் வெடிக்கப் போகும் போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகும். பகுதியளவு பொதுமுடக்கங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலும், வைரஸ் தொற்றுக்கான அச்சுறுத்தல்களின் மத்தியிலும் இந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதில் பிரதிபலிக்கும் அச்சமின்மையே, அங்கு நிலவிவரும் கோபம், கசப்புணர்வு மற்றும் வர்க்க பகைமையை விளக்குகிறது.

நம்பமுடியாத நிகழ்வுகளால் அமெரிக்காவின் நாற்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதிகளில் இறங்கியவர்களுக்கு எதிராக காவல்துறையினரின் மிருகத்தனமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட லத்தீன் அமெரிக்காவில் நடந்த சில நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில், இராணுவ ஹெலிகாப்டர்கள் வாஷிங்டனில் எதிர்ப்பாளர்களின் தலை மீது மிகவும் தாழ்வாக பறந்தது, அரசு உளவாளிகளை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டிவிட்டது உள்ளிட்ட பிற நாடுகளில் இராணுவ ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும் அனைத்து எதிர்-புரட்சி உத்திகளும் செம்மையாக பயன்படுத்தப்பட்டன. வெள்ளை மாளிகையை சுற்றி வாஷிங்டனின் தெருக்களிலும், மினியாபோலிஸிலும் இராணுவ கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அயோவாவில் காவல்துறை, நியூயார்க்கில் நடந்த ஸ்டோன்வால் கலவரத்தின் ஐம்பத்தொன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று, போராட்டக்காரர்களுக்கு மறைவிடமாக திகழ்ந்த ஓரின சேர்க்கையாளர்களுக்கான கூடத்தில் காவல்துறையினர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர்.

தற்போது வெடித்திருக்கும் இந்த இயக்கத்தை எவ்வாறாயினும் முயற்சித்து, தேவைப்பட்டால் அதிகாரத்துவ ஒடுக்குமுறை யுத்திகளை பயன்படுத்தியாவது ஒடுக்கிவிட வேண்டும் என்பதில் ட்ரம்ப் தெளிவாக உள்ளார். தன்னால் இயலும் பட்சத்தில் ஒரு சர்வாதிகார ஆட்சியை கூட அமுல்படுத்த விரும்புகிறார். வெகுஜன இயக்கமும், முதலாளித்துவ எதிர்கட்சிகளும் அவரை இதைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தும் என்பது வாஷிங்டனில் இருந்து தேசிய காவலர் படையை அவர் திரும்ப பெற்றதிலிருந்து தெரிகிறது. இது அவருக்கு உண்டாகியிருக்கும் அவமானத்தையும் தோல்வியையும் குறிக்கிறது. ஆயினும், நாம் பார்த்துள்ள படி, பலமான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைகள் மக்களை மேலும் கோபப்படுத்தி, இன்னும் பரவலான தரப்பினரை இயக்கத்தினுள் ஈர்த்தன. ட்ரம்ப் தனது வலிமையாக வெளியில் காட்டும் தோற்றம் உண்மையில் அவருக்கான ஆதரவின் வீழ்ச்சியையும், அவரது பலவீனத்தையுமே பிரதிபலிக்கிறது. அவரது நடத்தையும், அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் சீரற்ற தன்மையும் அவரது விரக்தியான நிலையை குறிக்கின்றன. ஆளும் வர்க்கத்தின் தொலைநோக்குப் பார்வைக் கொண்ட பிரிவுகளின் கட்டுப்பாட்டில் அவர் இல்லை. அனைத்து முக்கிய கருத்துக் கணிப்புகளிலும் ஜோ பைடனே தற்போது கணிசமாக முன்னிலையில் இருக்கிறார். ஜார்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் கொலின் பவல் ஆகியோரைப் போலவே ட்ரம்பிற்கும் வாக்களிக்க மாட்டேன் என்று குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னியே கூறியுள்ளார். அவர் தனது சர்வாதிகார, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தொடருவாராயின், ஆளும் வர்க்கத்தின் தொலைநோக்குப் பிரிவினர் தேர்தலுக்கு முன்னரே கூட அவரை அகற்ற வாய்ப்புள்ளது.

இயக்கத்தின் பிரம்மாண்டமான அளவும், அதன் பல்லின தன்மையும், ஆர்ப்பாட்டங்களில் பிரதிபலிக்கும் கசப்புணர்வும் ஆளும் வர்க்கத்திற்குள் வெளிப்படையான மற்றும் கசப்பான பிளவுகளைத் உருவாக்கியிருக்கின்றன.  “மிக முக்கியமானவர்களின் பைத்தியக்காரத்தனம் கவனிக்கப்படாமல் விடுபட்டுவிடக் கூடாது” என்று ஹேம்லெட்டில் ஷேக்ஸ்பியர் எச்சரித்தார். இராணுவம் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தின் பல பிரிவுகள் அவருடனும், அவரது உறவினர்களுடனும் மோதலில் உள்ளன. இது புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவின் ஜார் மன்னரின் ஆட்சி அல்லது புரட்சிக்கு முந்தைய பிரான்சின் 16ஆம் லூயி மன்னனின் ஆட்சியின் தன்மைகளை ஒத்ததாக உள்ளது. வரலாறு காணாத வகையில் ட்ரம்பின் சொந்த பாதுகாப்பு செயலாளரே, ஆரம்பத்தில் ட்ரம்பின் நிலைப்பாட்டை ஆதரித்த போதிலும், பின்பு அதை நிராகரித்தார். இராணுவத் தளபதிகளும் அவரை எதிர்த்து வருவதோடு, ஜனநாயகக் கட்சியினர் உள்ளிட்ட இதர நாடாளுமன்ற தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். ஜார்ஜ் புஷ் கூட அவருக்கு எதிராக பேசத் துவங்கிவிட்டார்.

சில நகரங்களில் காவல்துறையினரின் பிரிவுகளும், தேசிய காவல் படையினரும் கலகக் கவசங்களையும் தடியடிகளையும் கீழே போட்டுவிட்டனர். சில இடங்களில் அவர்கள் எதிர்ப்பாளர்களுடன் கூட இணைந்துள்ளனர். அரசு இயந்திரம் பிளவுபட்டு நிற்பதற்கான கூறுகள் இச்சூழலில் தெளிவாகத் தெரிகிறது. உள்நாட்டுப் போருக்கான கூறுகளும், ஒரு புரட்சிக்கான அம்சங்களும் உள்ளன என்ற எமது பகுப்பாய்வை இது உறுதிப்படுத்துகிறது. பொதுமுடக்கத்துக்கு எதிரான வலதுசாரிகளின் ஆயுதமேந்திய, காவல்துறையினரால் தீண்டப்படாத, ஆர்ப்பாட்டங்களும், இந்த ஆர்ப்பாட்டங்களின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடுகளும் இச்செயல்பாட்டை விளக்குகின்றன.

தற்போதைய சூழலில், தொழிலாளர் வர்க்கம் இன்னும் வர்க்க நடவடிக்கையில் இறங்கவில்லை. கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை, தங்கள் தொழிற்சங்கத்தின் ஆதரவோடு, சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்ல மறுக்கும் சில பேருந்து ஓட்டுநர்களின் நடவடிக்கைகளைத் தவிர, குறிப்பாக தொழிற்சங்கங்கள் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பதோடு, இயக்கத்திலும் பங்கேற்கவில்லை. இந்த தடங்கலை வரும் காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் தகர்த்தெறிய வேண்டியிருக்கிறது.

லெபனான், சிலி, ஈராக் போன்ற தொற்றுநோய்களுக்கு முன்னர் வெடித்த அனைத்து வெகுஜன இயக்கங்களிலும் இதே அம்சம் நிலவியது. இந்த பிரச்சனையும், அமைப்பின் பற்றாக்குறைமே இத்தகைய போராட்டங்கள் வெற்றி பெற கடக்க வேண்டிய தடைகளாகும். அனைத்து உள்ளூர் சமூக நிறுவனங்களிலும் ஜனநாயக நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதும், பின்னர் அனைத்து நகரங்களிலும் இத்தகைய குழுக்கள் ஒன்றிணைந்து, உள்ளூர் தொழிற்சங்க அமைப்புகளுடனும், பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுடனும் கைக்கோர்ப்பதும் சாத்தியப்படுத்துதல் என்பது அமெரிக்காவில் ஒரு முக்கியமான கேள்வியாகும். மிருகத்தனமான அடக்குமுறையை எதிர்கொண்டு வரும் சூழலில், உள்ளூர் அமைப்புகளிலும், போராட்டங்களிலும் பாதுகாப்புக் கமிட்டிக்களை உருவாக்குவது தற்போது இந்த இயக்கம் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத பணியாகும்.

ஜனநாயகக் கட்சியிலிருந்து வெளியேறி ஒரு புதிய கட்சியை உருவாக்க சாண்டர்ஸ் மறுத்து சரணடைந்ததன் மூலம் எவ்வளவு பெரிய வாய்ப்பு நழுவி போயிருக்கிறது என்பதை தற்போதைய நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன. ஒரு சில அறிக்கைகளைத் தவிர, சாண்டர்ஸும், கோர்டெஸும் இந்த இயக்கத்தில் எந்த பங்களிப்பையும் மேற்கொள்ளவில்லை, இயக்கத்தை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பது பற்றி எந்த குரலையும் எழுப்பவில்லை.

இந்த நிகழ்வுகள் அமெரிக்காவின் நிலைமையை வியக்கத்தக்க வகையில் மாற்றியுள்ளன. இயக்கம் ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டாலும், அது அமெரிக்க சமுதாயத்தில் உள்ள அடிப்படை முரண்பாடுகளையும் வர்க்க முரண்களையும் அம்பலப்படுத்திவிட்டது. இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படப் போவதில்லை. பொது முடக்கத்திலிருந்து ஓரளவு மீண்டு வந்தாலும், 4 கோடிக்கும் அதிகமானோர் வேலை இழக்கப் போவதுடன், 5 கோடியே 40 லட்சம் பேர் உணவு வங்கிகளை சார்ந்தோ அல்லது பசியுடனோ இருக்கப்போவதால், வரவிருக்கும் மாதங்களும் ஆண்டுகளும் அதிகரித்து வரும் வர்க்க முரண்களையும், கசப்பான போராட்டங்களையும் பார்க்க போகின்றன. அடுத்த தேர்தலில் பைடனும், ஜனநாயகக் கட்சியும் வெற்றி பெறுவார்களானால், புதிய கட்சிக்கான அவசியம் குறித்த கேள்விகள் இன்னும் தீவிரமாக முன்வைக்கப்படும். பைடன் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் மீது அவநம்பிக்கையும் வெறுப்புணர்ச்சியும் கொண்ட ஒரு பிரிவு இருக்கின்ற போதிலும், டிரம்பைத் தோற்கடிப்பதற்காக ஜனநாயக கட்சியின் பின்னால் அணிதிரளுவதற்கான அழுத்தம் நவம்பர் மாதம் தேர்தலுக்கு முன்பான ஒரு சக்திவாய்ந்த மனநிலையாக இருக்கும் என்பது உறுதி. டிரம்ப் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மனநிலை புரிந்துகொள்ளத்தக்கது தான் என்றாலும், பைடனும் ஜனநாயகக் கட்சியினரும் எவ்வாறு மாற்று வழியை வழங்கவில்லை என்பதையும், தேர்தலைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்திற்குத் தயாராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சோசலிஸ்டுகள் திறமையாகவும் பொறுமையாகவும் விளக்க வேண்டும்.

ஒரு புரட்சிகர சோசலிச மாற்று தீர்வுக்கான அவசியம்:

இந்த நெருக்கடியில் சாண்டர்ஸும் கோர்டெஸும் ஒரு மாற்றீட்டை வழங்கத் தவறுவது சர்வதேச அளவில் நெருக்கடிகளின் போது மீண்டும் மீண்டும் நடந்துள்ளது. 1914 ஆம் ஆண்டில் முதல் உலகப் போர் வெடித்தபோது வெகுஜன சமூக-ஜனநாயகக் கட்சிகள் தங்கள் சொந்த முதலாளித்துவ வர்க்கங்களுக்கு அடிபணிந்து போரை ஆதரித்ததை, இன்றைய நெருக்கடியின் போது ’இடதுசாரிகள்’ தேச ஒற்றுமையின் கொடிகளின் பின்னே ஒளிந்து கொண்டு, நமது அரசாங்கங்களுக்கு சவால் விடும் நேரம் இதுவல்ல என்று வாதிடுவது நினைவூட்டுகிறது. அவர்கள் முன்வைக்கும் எந்தவொரு விமர்சனமும் பலவீனமானதாகவும், காலாவதியானதாகவும் உள்ளது.

ஜெர்மனியில் DIE LINKE (இடது கட்சி) அரசாங்கத்தின் திட்டத்திற்கு வாக்களித்தது. போர்த்துக்கலில் இடதுசாரிகளும் அவ்வாறே செய்தார்கள்; ஸ்பெயினில் பொடிமோஸ் கட்சி (நம்மால் முடியும்) ஆட்சியில் உள்ளது. முதலாளித்துவ அமைப்பைக் கட்டுக்குள் வைக்கவோ, புரட்சிகர சோசலிச மாற்றீட்டிற்கான தேவையை முன்வைக்கவோ யாரும் தயாராக இல்லை. இப்போது, ​​ஜான்சனின் குழப்பமான நிர்வாகத்தின் பேரழிவை எதிர்கொள்ளும் போதும், ​​புதிய தொழிற்கட்சித் தலைவரான கியர் ஸ்டார்மர் ஒரு சில விமர்சனங்களை அச்சத்துடன் மெல்லிய குரலில் கிசுகிசுத்தாரே தவிர, அரசாங்கத்தை பதவி விலகச்செய்வதற்கான போராட்டத்தை முன்வைக்க மறுக்கின்றார்.

போல்சனாரோவின் கீழ் பிரேசிலில் ஏற்பட்ட பேரழிவால், அந்நாட்டின் சோஷலிச சுதந்திர கட்சி, “நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்” என்ற பெயர் கொண்ட ஒரு முன்னணியில் தொழிலாளர் கட்சியுடன் மட்டுமல்ல, முதலாளித்துவ கட்சிகளோடும், முன்னாள் அதிபர் பெர்னாடோ ஹென்ரிக் கார்டோசோ உள்ளிட்ட வலதுசாரிகளுடனும் கைக்கோர்க்கின்றது. இந்த ‘உன்னதமான’ மக்கள் முன்னணி “வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்காக” போராடுவதோடு, “இணக்கமான நலன்களை தேடும் பொருட்டு, பழைய மோதல்களை ஒதுக்கி வைக்கும். போல்சனாரோவைத் தோற்கடிக்க இடது, மையம் மற்றும் வலதுசாரிகள் கைக்கோர்த்துள்ளனர்”.

1914 இல் இருந்ததைப் போல, புரட்சிகர சோசலிசத்தின் உண்மையான கருத்துக்களைப் பாதுகாப்பவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆயினும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக நின்று உண்மையான புரட்சிகர சோசலிசக் கருத்துக்களைப் பாதுகாத்தவர்கள் மிகப்பெரிய ஆதரவைப் பெறத் துவங்கி, 1917 நவம்பரில் ரஷ்யப் புரட்சியைக் வழிநடத்தி செல்ல முடிந்தது. அப்போதைய நிலைமையும் தற்போதைய நெருக்கடியும் ஒரே தன்மையை கொண்டவையல்ல என்றாலும், வர்க்கப்போர்கள் உருவாகும் போது, புரட்சிகர சோசலிஸ்டுகள் மிகப்பெரிய ஆதரவைப் பெறுவதோடு மிகப்பெரும் எண்ணிக்கையில் வளர முடியும்; இதன் அடிப்படையில் வரும் ஆண்டுகளில் பெரிய புரட்சிகரக் கட்சிகளை கட்டியெழுப்ப முடியும். தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) ஆதரிக்கும் புதிய பரந்த வெகுஜன தொழிலாளர் கட்சிகளின் தோற்றமும் இந்த செயல்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்.

சமீபத்திய நாட்களில் வீதிகளில் இறங்கிய இளைஞர்கள், குறிப்பாக தொழிலாள வர்க்க இளைஞர்கள், முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக கோவிட் -19 நெருக்கடி காலம் வரை குவிந்து வந்த கோபத்தையும் கசப்புணர்வையும் தங்களோடு எடுத்து வந்துள்ளனர். COVID-19 நெருக்கடி இதை மேலும் கூர்மையாக்கியுள்ளது. அவர்கள் சோசலிச சிந்தனைக்கு செவிமடுக்கும் மனநிலையுடன் வீதிகளில் இறங்கியுள்ளனர். இந்த நெருக்கடி குறிப்பாக இளைஞர்களுக்கு வர்க்க உணர்வையும், புரட்சிகர உணர்வையும் அளித்து கொண்டிருக்கிறது. யுத்தம் மற்றும் புரட்சியைப் போலவே, நெருக்கடிகளின் போதும் அரசியல் விழிப்பில் முன்னோக்குப் பாய்ச்சலை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்காவின் இந்த திருப்புமுனை மற்ற நாடுகளில் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. பல எழுச்சிகளும் சமூக வெடிப்புகளும் தினசரி நிகழ்வுகளாகியிருக்கின்றன.

தொழிலாளர்களின் அகிலத்துக்கான கமிட்டியை (CWI) சேர்ந்தவர்களும், பிற புரட்சிகர சோஷலிஸ்டுகளும் நடந்து கொண்டிருக்கும் இயக்கங்களில் துணிச்சலுடன் தலையிடுவதுடன், இனிவரும் பெரும் சமூக மற்றும் அரசியல் பூகம்பங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். ட்ரொட்ஸ்கியின் ‘இடைநிலை வேலைத்திட்டத்தில்’ முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் தற்போது உருவாகி வரும் நெருக்கடிகளுக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும். பொருத்தமான இடங்களில் அவற்றை நாம் தைரியமாக கையிலெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், எங்கள் பகுப்பாய்வு மற்றும் திட்டத்தின் இதர அம்சங்களின் வழிகாட்டுதலோடு, சிறிய புரட்சிகர சக்திகள் கூட குறிப்பிடத்தக்க பெரிய வெற்றிகளை அடைய முடியும். மரண வேதனையில் அழுகிக் கிடக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு மாற்றீட்டை உருவாக்கும் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு உதவ முடியும்.

About புதிய சோசியலிச இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top