Home / பார்வை / கொரோனா பெருந்தொற்றும், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் நெருக்கடியும்

கொரோனா பெருந்தொற்றும், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் நெருக்கடியும்

தொழிலாளர் சர்வதேசியத்துக்கான கமிட்டியின் அகில உலக செயலகத்தின் அறிக்கை:

மொழிப்பெயர்ப்பு வசந்த்

 

”ஏகாதிபத்தியம் அதன் பலவீனமான இணைப்பில் முறிந்துவிட்டது” என்று 1917 புரட்சி நடந்த பின் லெனின் கூறினார். இன்று, கொரோனா பெருந்தொற்றும், அதனுடன் கூடிய உலகளாவிய வரலாறு காணாத பொருளாதார பேரழிவும் உலகம் முழுவதும் அபாயகரமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

 

எப்படிப் பார்த்தாலும், சஹாரா கீழமை ஆப்பிரிக்கா முழுவதுமே ஏகாதிபத்தியத்தின் மற்றும் உள்ளூர் முதலாளி வர்க்கங்களின் பலவீனமான இணைப்பின் திரட்சியே. நூறு கோடிக்கும் மேலான மக்கள் தங்களது உடல்நலத்துக்கும், உயிருக்கும், உருவாகியிருக்கும் மற்றும் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் அச்சுறுத்தல்களை சந்திக்க வேண்டிய ஒரு திருப்புமுனை தருணத்தில் உள்ளனர்.

 

’பட்டினி பெருந்தொற்று’ என்று ஐ.நா.வால் குறிப்பிடப்படும் பட்டினிச் சாவுகளை உலகின் பல நாடுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும், உலக பொருளாதாரத்தின் அகல பாதாள வீழ்ச்சி சஹாரா கீழமை ஆப்பிரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. இப்பகுதியின் பெரும்பாலான தொழிலாளர்கள், பணிப் பாதுகாப்பற்ற, அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்று அழைக்கப்படும் கைவினைஞர்களாகவும், சுயதொழில் புரிபவர்களாகவும் உள்ளனர். இவர்களின் சராசரி மாத வருமானம் 81% வீழ்ச்சியடைந்து, (வாங்கும் சக்தி கணக்கீட்டின் படி) $96 என்ற அளவுக்கு  சரியப் போவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, இவர்களில் வறுமைக்கு உள்ளாகவிருப்போரின் விழுக்காடும் 21%லிருந்து 83%ஐ எட்டப் போவதாக, அதாவது ஒரு பேரழிவை, அம்மதிப்பீடு முன்னறிவிக்கிறது. கொரோனா பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் நெருக்கடியால், உலக அளவில், உயிரையும், வாழ்வாதாரங்களையும் இழக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை, தற்போதைய 13 கோடியே 50 லட்சம் என்ற அளவிலிருந்து, 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கப் போவதாக ஏப்ரல் நடுவில் ஐ.நா.வின் ’உலக உணவு செயல்திட்ட அமைப்பு’ கணித்திருந்தது. ஆப்பிரிக்க நாடுகளும், மத்திய கிழக்கு நாடுகளுமே ஐ.நாவின் இந்த அமைப்பிற்கு பெரும் கவலை அளிப்பவையாக உள்ளன. சஹரா கீழமை ஆப்பிரிக்காவை கொரோனா தொற்று தாமதமாகவே வந்தடைந்தது என்பதோடு, அதன் வீரியம் குறித்தும் பல்வேறு விவாதங்களை அறிவியலாளர்களும், மருத்துவர்களும் எழுப்பி வருகின்றனர். சிலர், ஆப்பிரிக்க மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதாலும், அதன் தட்பவெப்ப சூழலாலும் இப்பெருந்தொற்றின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்கின்றனர். வேறு சிலர், பெரும்பாலான ஆப்பிரிக்க நகரங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் இருப்பதாலும், பாதுகாப்பான குடிநீர் விநியோகம் இல்லாததாலும் இந்நோய் தொற்று அதிவேகமாக பரவும் என்கின்றனர். ஆனால், இப்பெருந்தொற்று பெரும் எண்ணிக்கையிலான மக்களை தாக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது, அதிலும் குறிப்பாக, நெரிசல் மிகுந்த நகர்-புறங்களின் மக்களும், உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்ட 1கோடியே 90லட்சம் பேரும் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். கொரோனா பெருந்தொற்றின் தொடர்ச்சியான பரவலாலும், ஆப்பிரிக்க கண்டத்தின் பொது சுகாதார அமைப்பின் பலவீனமான நிலையாலும், பல தேவையற்ற மரணங்கள் நிகழ்வதோடு, இம்மரணங்கள் கொரோனா பலிகளாக பதிவு செய்யப்படாமல் விடுப்பட்டும் போகும்.

 

ஒருவேளை, சஹாரா கீழமை ஆப்பிரிக்காவை கொரோனா பெருந்தொற்று விட்டு வைத்தாலும், அம்மக்கள் நிமோனியா, மலேரியா, காசநோய், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட, தடுக்கக் கூடிய, குணப்படுத்தக் கூடிய நோய்களால் பீடிக்கப்படுவதும், மரணிப்பதும் தொடர்கதையாகவே இருக்கப் போகிறது.  ஆப்பிரிக்க கண்டம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் இத்தகைய நோய்களும், கொரோனா பெருந்தொற்றும் ஒருபுறமிருக்க, காங்கோ ஜனநாயக குடியரசின் ஈபோலா, அம்மைகள், மற்றும் காலரா, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் அம்மைகள், நைஜீரியாவின் லஸ்ஸா இரத்தப்போக்கு காய்ச்சல் போன்ற பிராந்திய நோய்த் தொற்றுக்களும் அங்கு மக்களை சூறையாடி வருகின்றன.

 

பெரும் இறப்பு எண்ணிக்கை

 

இப்பழைய நோய்கள் உண்டாக்கும் இறப்பு எண்ணிக்கையே மிக அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 4,00,000க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க குழந்தைகள் நிமோனியாவால் இறக்கின்றனர். நைஜீரியா நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக் குறையே அந்நாட்டின் பல குழந்தைகளை கொல்லும் பெரிய கொலைகார காரணியாகும். 2018இல் உலகில் ஏற்பட்ட 22 கோடியே 80 லட்சம் மலேரிய தொற்றுக்களில் 25% நைஜீரியாவை சேர்ந்தது என்று உலக சுகாதார மையத்தின் 2019ஆம் ஆண்டின் மலேரிய அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அந்நாட்டில் 185க்கும் மேற்பட்டோர் லஸ்ஸா இரத்தப்போக்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். எச்,ஐ,வி/ எயிட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்துகள் இல்லாவிட்டாலும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த இப்போது மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால், 20 விழுக்காட்டிற்கும் மேல் தொற்று வீதத்தை கொண்ட தென்னாப்பிரிக்காவில் மட்டும் 20 லட்சம் பேருக்கு இவ்வைரஸ் கட்டுப்பாட்டு சிகிச்சைகள் அளிக்கப்படாமல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இவை எல்லாவற்றுக்கும் மகுடமாக, கிழக்கு ஆப்பிரிக்கா, வெட்டுக்கிளி படையெடுப்பின் இரண்டாவது பெரிய அலையை ஜீன் மாதம் எதிர்நோக்கவிருக்கிறது. ஒரு வகையில் பருவநிலை மாற்றத்தின் பின் விளைவான இப்பயிர் சேதம், கென்யா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5 வயதுக்குட்பட்ட ஐம்பது லட்சம் குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதியுற்றுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், வெட்டுக்கிளி படையெடுப்பு, கொரோனா பெருந்தொற்று மற்றும் வெள்ளப்பெருக்கு என்ற வரலாறு காணாத மும்முனை அச்சுறுத்தலை இப்பிராந்தியம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக, “குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற அறக்கட்டளை சமீபத்தில் எச்சரித்திருந்தது.

 

ஆப்பிரிக்க பொது சுகாதார அமைப்புக்களின் தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடும் அதேவேளை, மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலையில் அவை உள்ளன. இதன் காரணமாகவே, ஆப்பிரிக்க மேட்டுக்குடியினர் தங்களது சிகிச்சைகளுக்காக ஐரோப்பாவுக்கோ, வளைகுடா நாடுகளுக்கோ அல்லது இந்தியாவுக்கோ பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது கொரோனா பெருந்தொற்றால் இப்பயணங்களுக்கும் தடை ஏற்பட்டுவிட்டது. ஐரோப்பாவில் 300 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையுடன் ஒப்பிடுகையில், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் 5000 பேருக்கு ஒரு மருத்துவரே உள்ளார். சுகாதார பணியாளர்கள் விஷயத்திலும் இதே வேறுபாடு தான். 2013இல் ஐரோப்பாவின் 1000 பேருக்கு 14 சுகாதார பணியாளர்கள் என்ற நிலையோடு ஒப்பிடுகையில், இங்கு 1000 பேருக்கு 2.2 பணியாளர்களே உள்ளனர். சில ஆப்பிரிக்க நாடுகளில், நாடு முழுவதும் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை விட, அதிக படுக்கைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான தனி மருத்துவமனைகளே கொண்டிருக்கின்றன. கென்யாவில் நாடு முழுவதற்குமே 130 தீவிர சிகிச்சை படுக்கைகளும், உகாண்டாவில் 55 மற்றும் மாலாவியில் கிட்டத்தட்ட 25 படுக்கைகளும் உள்ளன.

 

கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் கண்டம் தழுவிய தீவிரவாத நடவடிக்கைகளாலும், போர்களாலும் மருத்துவ உதவிகளை நாடுவோரின் எண்ணிக்கையையும், அகதிகளின் எண்ணிக்கையையுமே அதிகரித்து வருகின்றன. வளர்ச்சியின்மையாலும், பருவநிலை மாற்றத்தாலும், பொருளாதார நெருக்கடிகளாலும் அருகிவரும் – உணவு, தண்ணீர், நிலம், வேலை வாய்ப்பு போன்ற – மூலாதாரங்களை மையமாக வைத்தே இப்போர்கள் நடைபெறுகின்றன. மத்திய ஆப்பிரிக்காவிலும், மொசாம்பிக்கிலும் ஆயுதம் தாங்கிய மோதல்கள் அதிகரித்து வரும் அதேவேளை, சாஹேல், சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் தீவிரமான போர்கள் நடைபெற்று வருகின்றன. நைஜீரியாவுக்கும், சாட், நைஜர் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் நடைபெற்று வரும் பொகோ ஹாராம் இயக்கத்தின் தீவிரவாத நடவடிக்கைகளும், வடக்கு நைஜீரியாவில் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்போருக்கும் இடையே நடந்துவரும் ஆயுதமேந்திய மோதல்களும் மிகப்பரவலான அளவில் மக்கள் புலம்பெயர்வதற்கும், உணவு பாதுகப்புக்கான அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுத்துள்ளன. அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையம் என்ற அகதிகளுக்கான முகமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி, உலகின் ஒட்டு மொத்த அகதிகளில் 26 விழுக்காடு பேர் சஹாரா கீழமை ஆப்பிரிக்கர்களாவர். இப்பிராந்தியத்தில் 1கோடியே 80 லட்சம் பேர் ஐ.நா. அகதிகளுக்கான உயர்மட்ட ஆணையத்தின் கண்காணிப்புக்குள் வருகின்றனர். இந்த எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிகரித்தும் வருகிறது.

 

இந்த பின்னணியில் தான், கொரோனா பெருந்தொற்று என்ற பிசாசையும், அதி தீவிர உலக பொருளாதார நெருக்கடியையும் அம்மக்கள் எதிர்கொள்கின்றனர்.

 

பொருளாதார நெருக்கடியின் தன்மை

 

கொரோனா பெருந்தொற்று பொருளாதார நெருக்கடியை துவக்கி வைத்து, அதற்கு ஒரு குறிப்பிட்ட தன்மையை வழங்கியிருக்கும் போதிலும், இந்நெருக்கடியின் மூல காரணம் கொரோனா அல்ல. 2019ஆம் ஆண்டு தனது நிறைவை நோக்கி சென்று கொண்டிருந்த போதே நெருக்கடிக்கான அறிகுறிகள், உதாரணத்திற்கு உலக வர்த்தகத்தின் வீழ்ச்சி, தென்பட்டன. இப்பெருந்தொற்று எழுவதற்கு முன்னரே, உலக பொருளாதாரத்தில் உருவாக துவங்கிவிட்ட நெருக்கடிக்கான அறிகுறிகளை சஹாரா கீழமை ஆப்பிரிக்கா, குறிப்பாக, மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியின் வாயிலாக, காட்டத் துவங்கிவிட்டது. கொரோனா தொற்று துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே, ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியான தென்னாப்பிரிக்கா, 5 ஆண்டுகளில் இரண்டாவது பொருளாதார சரிவில் விழுந்தது.

 

உலகில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் 5 நாடுகள் சஹாரா கீழமை ஆப்பிரிக்காவில் இருப்பதாக பன்னாட்டு பணநிதியகம் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்தது. ஆயினும், இது பெரும்பாலும் நிலையான அடிப்படையை கொண்டதல்ல. சமீபத்திய நெருக்கடி உருவாகத் துவங்கும் முன், ஏற்கனவே ஆப்பிரிக்க கடன் சுமை உயர்ந்து வந்திருந்தது. 2010 – 2018க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் சஹாரா கீழமை ஆப்பிரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரி பொதுக்கடன் 40%லிருந்து 59% ஆக உயர்ந்திருந்தது. இது, வேறெந்த வளரும் பிராந்தியங்களை விட அதிவேக உயர்வாகும். பாதிக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பொதுக் கடன் அளவு, பன்னாட்டு பணநிதியகம் பரிந்துரைத்துள்ள அதிகபட்ச வரம்பையும் கடந்துவிட்டது. 47 ஆப்பிரிக்க நாடுகளில் 29 நாடுகள் தங்களது கடன் அதிகரிப்பு விகிதத்தை நிலைப்படுத்த வேண்டுமென்றால் கூட, தங்களது செலவுக்கும் மிகுதியாக வரிவிதிக்க வேண்டியிருக்கும் என்று உலகவங்கி கூறுகிறது.

 

ஆனால் சமீப காலத்தின் வளர்ச்சி எதுவும் ஏழைகளை பெரிதாக சென்றடையவில்லை. 2014 – 2018க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், முந்தைய பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ”அனுபவித்த வறுமை” (உணவும், தூய்மையான குடிநீரும் இல்லாத நிலையை மக்கள் எத்தனை முறை சந்தித்துள்ளனர் என்பதை குறிக்கும் குறியீடூ) சற்று அதிகரித்திருந்ததாக “ஆப்பிரிக்க பாரோமீட்டர்” என்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்தது. தென்னாப்பிரிக்கா, நைஜர் மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இது இன்னும் கணிசமான அளவுக்கு உயர்ந்தது. இந்த ஆண்டுகளில் ஆப்பிரிக்க பொருளாதாரங்கள் பொதுவான வளர்ச்சியை அடைந்தது உண்மையே. ஆனால், வறுமையும் கூடவே வளர்ந்தது. மோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், உள்நாட்டு மற்றும் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களின் கொள்ளையுமே இதற்கு காரணம். இதுமட்டுமின்றி, சில நாடுகளின் மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் அதிவேகமாக வளர்ந்தது.

 

மனித வளமும், இயற்கை வளங்களும் கொட்டிக்கிடக்கின்ற போதிலும், ஆப்பிரிக்கா இன்னும் மிகப் பின் தங்கிய நிலையில் இருப்பதையும், ஆசியா அல்லது லத்தின் அமெரிக்காவை காட்டிலும் மிக நேரடியான ஏகாதிபத்திய சுரண்டலுக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதையும் இக்கொள்ளையே பறைசாற்றுகிறது. இச்சுரண்டலும், மூலப்பொருட்களின் மிதமிஞ்சிய ஏற்றுமதியுமே, ஆளும் வர்க்கங்களின் ஊழல்களுக்கும், “பணத்துடன் ஓட்டம்” (அல்லது வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கல்) என்ற சித்தாந்தத்தின் பின்னால் இருக்கும் முக்கிய காரணிகளாகும். ஆப்பிரிக்காவில் ஒரு பரவலான முன்னேற்றத்தை உருவாக்க முடியாத முதலாளித்துவத்தின் கையாலாகாத்தனம், உள்நாட்டு முதலாளிகள் சர்வதேச முற்றுரிமைகளை நேரடியாக போட்டிக்கு இழுக்கக்கூடிய நீண்டகால முதலீடுகள் மேற்கொள்வதை தவிர்த்து, உணவு பண்டங்கள், கட்டுமான பொருட்கள் போன்ற உள்ளூரில் உடனடியாக விலைபோகக் கூடிய பொருட்களின் மீது முதலீடு செய்யும் போக்கின் மூலம் தென்படுகிறது. இதன் விளைவாக, உள்நாட்டு முதலாளிகள் தங்கள் சொந்த நாட்டின் வளர்ச்சி குறித்து கவலைப்படாமல், ஏகாதிபத்தியத்தின் நண்பர்களாகவும், முகவர்களாகவும், வாடகைக்கு வேலை பார்த்துக் கொண்டோ அல்லது அதன் வாடிக்கையாளர்களாகவோ இருக்கின்றனர்.

 

இத்தகைய வளர்ச்சியின்மையின் விளைவு, பின் தங்கிய வாழ்க்கை தரம், பலவீனமான கட்டமைப்பு வசதிகள், மோசமான பொதுசுகாதார சேவைகள் போன்றவை மட்டுமல்ல. வளர்ந்து வரும் நெருக்கடிகளுக்கு எளிதாக இரையாகிவிடக் கூடிய பலவீனமும் ஆகும்.

 

பொருளாதார வீழ்ச்சி அல்லது சரிவைக் குறித்த அனைத்து முன்னறிவிப்புக்களும் ஏறக்குறைய எந்த ஒரு ஆப்பிரிக்க நாட்டையும் விட்டுவைக்கவில்லை. பொதுமுடக்கம் தொடர்பான வேலையிழப்புகளால் சராசரி வருவாய் வியக்கத்தக்க அளவு வீழ்ச்சியடையப் போவதை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன. சஹாரா கீழமை ஆப்பிரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019ஆம் ஆண்டில் 3.1% வளர்ந்ததற்கு மாறாக, இந்த ஆண்டு 1.6% சுருங்கப் போவதாக பன்னாட்டு பணநிதியகத்தின் கணிப்பு கூறுகிறது.

 

உலக வங்கியின் அவநம்பிக்கை

 

உலக வங்கி மிகுந்த அவநம்பிக்கையோடு இருக்கிறது. ஆப்பிரிக்காவுக்கான அதன் தலைமை பொருளாதார வல்லுநர் பின்வருமாறு விவரிக்கின்றார்: ”நமது கணிப்பு, 25 ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான நிலையை காட்டுகிறது… குடும்ப வருமானமும் நுகர்வும், இந்த நெருக்கடி எவ்வளவு நாள் நீடிக்கப் போகிறது என்பதை பொருத்து, 7% முதல் 14% வரை வீழ்ச்சியடையும்… ஆப்பிரிக்காவில் உணவு பஞ்சத்துக்கான அச்சுறுத்தல் கூட ஏற்படும். அந்த அளவுக்கு இந்நெருக்கடி மிக மோசமானதாக இருக்கப்போகிறது.”

 

”கொரோனா பெருந்தொற்று ஆப்பிரிக்காவை வந்தடையும் முன்னரே கூட, நமது மிகப்பெரிய மூன்று பொருளாதார அமைப்புகள் சரிவர செயல்படவில்லை.  நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, அங்கோலா ஆகிய மூன்று நாடுகளும் சஹாரா கீழமை ஆப்பிரிக்காவின் மொத்த உட்பிராந்திய உற்பத்தியில் 60%ஐ உருவாக்குகின்றன. கொரொனா பெருந்தொற்று துவங்குவதற்கு முன் தென்னாப்பிரிக்காவிலும், அதற்கு முந்தைய காலாண்டுகளில் அங்கோலாவிலும் பொருளாதார சரிவு உருவாகியிருந்தது. 2016ஆம் ஆண்டின் எண்ணெய் விலை வீழ்ச்சியிலிருந்து பலவீனமான மீட்சிக்கு திரும்பி கொண்டிருந்த நைஜீரியாவின் வளர்ச்சி மிக மந்தமான வேகத்தில் இருந்தது… ஒட்டு மொத்தத்தில் எந்த ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கும் இந்த நெருக்கடியை தனியாக நின்று எதிர்கொள்ள போதிய தெம்பில்லை என்பது தெளிவு.”

 

நடைமுறை வாழ்வில் இப்புள்ளிவிவரங்கள் பேரழிவை குறிக்கின்றன. ஆப்பிரிக்க ஒன்றியம் 2 கோடி வேலையிழப்புகள் ஏற்படும் என்கின்றது. ஆனால் தினக்கூலி தொழிலாளர்களும், கைவினைஞர்களும் இக்கணக்கில் சேரமாட்டார்கள். ஆயினும், வெகுஜன வேலைவாய்ப்பின்மையும், மறைமுக வேலையின்மையும் ஏற்கனவே நிலவிவரும் ஆப்பிரிக்காவில், இவ்வேலையிழப்புகளால் புதிதாக எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்நெருக்கடிக்கு முன், அதிகாரபூர்வ வேலைவாய்ப்பின்மையின் அளவு தென்னாப்பிரிக்காவில் 29% ஆகவும், நைஜீரியாவில் 23% ஆகவும் இருந்தது. இதற்கும் மேலாக, வெளிநாட்டு வாழ் ஆப்பிரிக்கர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பி வரும் பணமும், இந்த சர்வதேச பொருளாதார நெருக்கடியால் விழ்ச்சியடையக் கூடும் என்பதால், பல குடும்பகளுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

 

கடந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சியானது (உலக வங்கியின் தகவல் படி 2.4%), மக்கள் தொகையின் 2.7% வளர்ச்சியை விட குறைவாக இருந்தது, மக்களுக்கான தலா உற்பத்தி குறைந்திருப்பதை உணர்த்துகிறது. அனைத்து பொருளாதார முன்னறிவிப்புகளும் வீழ்ச்சியையே எடுத்துரைக்கும் நிலையில், டிசம்பருக்குள் சஹாரா கீழமை ஆப்பிரிக்காவின் பொருளாதாரம் 5% சுருங்கப்போகும் அதே நேரம், இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 2.6% அதிகரித்து 109 கோடியே 40 லட்சமாக உயரப் போகிறது. நடைமுறையில், ஆளும் வர்க்கங்களும், அவர்களை சார்ந்தவர்களும் இந்நெருக்கடியால் எவ்வித பாதிப்பையும் எதிர்கொள்ளப் போவதில்லை என்றாலும், சராசரியாக, அனைத்து ஆப்பிரிக்கர்களின் ஏழ்மை நிலையும் மேலும் அதிகரிக்கப் போகின்றது.

 

இது நிலைமையை மேலும் கூர்மையாக்கப் போகின்றது. ஏற்கனவே, ஐரோப்பாவிற்கும், வளைகுடாவிற்கும், ஆசியாவிற்கும் சுற்றுலா சென்று திரும்பிய ஆப்பிரிக்க மேட்டுக்குடிகள் தான் கொரோனா பெருந்தொற்றை ஆப்பிரிக்காவிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளனர் என்ற வெறுப்புணர்ச்சி நிலவி வருகிறது. ஆப்பிரிக்காவின் முதல் உறுதி செய்யப்பட்ட கொரோனா மரணம், புர்கினா ஃபாசோ நாட்டின் சட்ட சபை துணை தலைவருடையது என்பதே இதற்கு காரணம்.

 

ஆப்பிரிக்காவின் இதர உயிர்கொல்லி நோய்கள்

 

தொற்றுக்களும் மரணங்களும் அதிகரித்து வருவதால், கொரோனா பரவல் தொடர்பான பயமும் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. மலேரியா, காசநோய், எயிட்ஸ் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களை சமாளிப்பதில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதாலும், குறிப்பாக, ஆரம்பகட்ட தொற்றுக்களும், மரணங்களும் ஆளும் வர்க்கத்தினரையும், நடுத்தர வர்க்கத்தினரையும் தாக்கியிருப்பதால், கொரோனா தொற்றைச் சமாளிக்க முடியாது என்ற அவநம்பிக்கை நிலவிவருகிறது. நைஜீரியாவில் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை நிலவுவதால், சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் மேட்டுக்குடியினர், அயல்நாடுகளுக்கு போக முடியாமல், சிலர் உள்நாட்டு மருத்துவமனைகளில் மரணமடைவதால், சமானிய மக்கள் மத்தியில் இந்த அவநம்பிக்கைஇன்னும் குறைந்த பாடில்லை.

 

மக்களை பாதுகாக்கவும், சிகிச்சையளிக்கவும் அரசாங்கங்களுக்கு திறன் உள்ளதா என்று ஒவ்வொரு நாடாக, மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஒருவேளை, ஈபோலாவைப் போன்று, கொரோனாவையும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளைத் தாண்டி பரவிடாத வண்ணம் கட்டுப்படுத்திவிட்டாலும், பொருளாதார சுணக்கத்தின் தாக்கம் இரக்கமற்றதாக இருக்கப் போகிறது.

 

முரட்டுத்தனமாக அமல்படுத்தப்படும் பொதுமுடக்கம் மக்களின் கோபத்தை அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான உழைக்கும் மக்கள் தினக்கூலிகளாகவும், கைவினைஞர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் இருக்கும் சூழ்நிலையில், பொது முடக்கத்தால் வேலையும் உணவும் பறிபோகிறது. அரசு நிவாரணம் குறித்த அறிவிப்புகளும், வெற்று வாக்குறுதிகளாகவே பயனற்று போகிறது. வேலைக்காகவோ, உணவு வாங்கவோ வெளியில் செல்லும் போது, உழைக்கும் மக்களின் மீது ஏவப்படும் அரசு வன்முறைகள், மக்களின் வெறுப்புணர்ச்சியை தீவிரப்படுத்துகிறது.

 

இதர கண்டங்களில் நடப்பதை போன்றே, ஆப்பிரிக்காவிலும், அவசரநிலை சட்டங்களின் மூலம், பாராளுமன்றங்களை தவிர்க்கவும், அதிகாரங்களை குவித்துக் கொள்ளவும் அரசுகள் இந்நோய் தொற்றை பயன்படுத்திக் கொள்கின்றன. அரசு தன்னிச்சையாக செயல்படும் அல்லது செயல்பட முயலும் இந்த அதிகாரத்துவ போக்கு ஆப்பிரிக்காவில் சற்று பரவலாகவே காணப்படுகிறது. தங்களது ஆட்சியின் பகற்கொள்ளையால் ஆளுவதற்கான அருகதை மக்கள் மத்தியில் தங்களுக்கு இல்லாமல் போய்விடக் கூடும் என்று ஆப்பிரிக்க ஆளும் வர்க்கங்கள் மிகச்சரியாக அஞ்சுவதால், அவர்கள் தங்களது ஆட்சிக்கு  ஊழலையும் (நைஜீரிய மக்கள் இதனை விழுங்குவதற்கான கட்டமைப்பு வசதி என்கின்றனர்), ஒடுக்குமுறையையும் சார்ந்திருக்கின்றனர். கொரோனா நெருக்கடி முடிந்த பின்னர், இந்த அவசர நிலை அதிகாரங்களை ஆட்சியாளர்கள் அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க முன்வரப் போவதில்லை. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகமயமாதல் மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் வழங்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள் கூட திரும்ப பறிக்கப்படப் போகின்றன.

 

ஒடுக்குமுறை நிலவும் போதிலும் கூட, சில நாடுகளில் மக்கள் விரக்தியிலும், கோபத்திலும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர். தொழிற்சங்கங்களின் தலைமையோ அல்லது தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) போன்ற இடதுசாரி சக்திகளின் தலைமையோ அவர்களுக்கு இல்லாததால், கலவரங்களும், குழப்பங்களும் மிக எளிதாகவும், அதிவேகமாகவும் பரவக்கூடும். நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உழைக்கும் மக்களும், ஏழைகளும் வசிக்கும் பகுதிகளில் நுழைந்த இளைஞர் கூட்டம், பணத்தையும், பொருட்களையும் சூறையாடி செல்லும் நிலைக்கு பொதுமுடக்கம் வழிவகுத்தது. இரும்பு அரண்களையும், காவலர்களையும் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆளும் வர்க்கத்தினரையோ, நடுத்தர வர்க்கத்தையோ அவர்கள் தாக்கவில்லை. காவல்துறையின் பாதுகாப்பு கிடைக்கப் பெறாததால், CWI உறுப்பினர்களின் வழிகாட்டுதலின் பேரில், உள்ளூர் மக்கள் தங்களுக்கான தற்காப்பு நடவடிக்கைகளை தாங்களாகவே ஒருங்கிணைத்து வருகின்றனர். ஆயினும், பணக்கார வர்க்கங்களின் பாதுகாப்பிற்கும் முழு உத்திரவாதம் கிடையாது. உண்மையில், பொதுமுடக்கம் அமலில் இருக்கும் போதே லாகோஸ் நகரின் பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் தென்பட்ட பசியால் வாடிய மக்கள் கூட்டம், லெக்கி, விக்டோரியா தீவு, இகோயி போன்ற இடங்களில் பண்ணை வீடுகளின் வாயிற்கதவுகளை தட்டிக் கொண்டும், உணவுக்காக பிச்சை எடுத்துக் கொண்டும் இருந்தது. இப்போதைக்கு மென்மையாக பிச்சையெடுத்து கொண்டிருக்கும் இம்மக்கள் கூட்டம், எப்போது வேண்டுமானாலும் கொள்ளைக் கூட்டமாக மாறக்கூடும் என்று அப்பகுதி வாழ் செல்வந்தர் ஒருவர் கூறினார். இது போன்ற ஆபத்துக்களை தடுக்க, விக்டோரியா தீவில் இருக்கும் பண்ணை வீடுகளின் குடியிருப்போர், தினசரி உணவுகளை சேகரித்து, அப்பகுதி வாழ் இளைஞர்களுக்கு அளித்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்கின்றனர்.

 

தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் சுயஒருங்கிணைப்பை உருவாக்கிப், பலப்படுத்த வேண்டியது, உயிர்பிழைப்பதற்கு மட்டுமின்றி, மாற்றத்துக்கான போராட்டத்துக்கும் இன்றியமையா பணியாகும். உழைக்கும் வர்க்கமும், அவர்களின் ஸ்தாபனங்களும் இதை செய்யாமல், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டிருந்தால், வகுப்புவாத, இனவாத, மதவாத மற்றும் தேசியவாத மோதல்கள் உருவாவதற்கான ஆபத்து உள்ளது. இத்தகைய மோதல்கள் பல நாடுகளையும், சமூகங்களையும் சிதைத்து, துயரங்களுக்கும், அழிவுகளுக்கும் வித்திட்டிருப்பதை ஆப்பிரிக்கா இதற்கு முன்னரே பார்த்திருக்கிறது. உழைக்கும் மக்களை காக்கவும், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடவும் நமது அமைப்பு வகுத்துள்ள அவசர செயல்திட்டத்தில் (http://akhilam.org/?p=398), இந்நெருக்கடி தருணத்தில் இத்தகைய சுய ஒருங்கிணைப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பதை முன்மொழிந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ”தேவைப்படும் இடங்களில், அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பது, நியாயமான விலைகளில் அவற்றை விநியோகிப்பது, கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும், பதுக்குபவர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது போன்ற பணிகள் ஜனநாயகப்பூர்வமான சுய-ஒருங்கிணைப்பு செய்யப்படுவதை தொழிற்சங்கங்கள் முன்நின்று ஊக்குவிக்க வேண்டும்.

 

”தேவைப்படும் இடங்களில், உணவு மற்றும் மருந்து பொருட்களையும், அத்தியாவசிய பண்டங்களையும் விநியோகிப்பதற்கான சமூக நிவாரண மையங்களை அமைக்கவும், பொது சமையல்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இலவச குடிநீரையும் பாதுகாப்பான கழிவறைகளையும் போதிய அளவுக்கு ஏற்படுத்தி கொடுக்க உடனடி நடவடிக்கை தேவை. இத்தகைய சமூக விநியோகங்களில் ஊழலையும், விலையேற்றத்தையும், இதர ஏமாற்று வேலைகளையும் தடுக்கும் பொருட்டு, குடியிருப்போர் சங்கங்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூகக் குழுக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் இவற்றை இயக்க வேண்டும்.”

 

இலவசமான, தரமான மருத்துவ வசதி, அனைவருக்குமான நியாயமான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இணைக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் யாவும் உடனடி முன்னேற்றத்தோடு சேர்த்து, அடிப்படை மாற்றத்தையும் வென்றெடுக்க தேவையான ஒருமித்த இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக அமையும். இவையின்றி, குற்ற செயல்கள் அதிகரிப்பது மட்டுமில்லாமல், உள்நாட்டிலும், நாடுகளுக்கிடையேயும் இனவாத, மதவாத மற்றும் தேசியவாத பதற்றங்களும் உருவாவதற்கான ஆபத்தையும் தடுக்க முடியாது.

 

அதிகரித்து வரும் பதற்றத்தால், 2019இல் மட்டும், கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, கிட்டத்தட்ட $4120 கோடியை ஆப்பிரிக்கா செலவிட்டது. பல்வேறு நாடுகளில் அதிகரித்து வந்த தீவிரவாத நடவடிக்கைகளும், சில பகுதிகளில் நாடுகளுக்கிடையே நிலவிவந்த பதட்டங்களுமே இதற்கான காரணங்களாகும்.

 

ஆப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்துவதில் ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையே நிலவும் சச்சரவுகள்

 

முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையே போட்டிகளும் முரண்பாடுகளும் அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க, ஆப்பிரிக்காவில் தங்களது ஆதிக்க நிலைகள் குறித்த சச்சரவுகளும் அவைகளுக்கிடையே வளர்ந்து வருகின்றன. சமீபத்திய உதாரணத்தை கொரோனா பெருந்தொற்று எடுத்துரைத்திருக்கிறது. இந்நோய் தொற்றை சமாளிக்க ஆப்பிரிக்காவுக்கு மருத்துவ உபகரணங்களை பெரிய அளவில் நன்கொடையாக அளிக்க சீனா முன்வந்த போது, இந்த நடவடிக்கையை அதன் போட்டியாளர்கள் ”முகக்கவச அரசியல் தந்திரம்” என்று விமர்சித்தனர். அமெரிக்க நிர்வாகத்துக்கு அத்தகைய தாராள குணம் ஏதும் இல்லை: நைஜீரிய அதிபர் புகாரியை தொலைபேசியில் அழைத்த ட்ரம்ப், ”எண்ணிக்கை குறிப்பிடாத” அளவு சுவாச கருவிகளை அனுப்பி வைக்க முன்வந்திருப்பதாக தெரிவித்தார்.

 

ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றை ஒன்று கண்டு அஞ்சுவது மட்டுமல்ல, இந்நெருக்கடிக்கு சொந்த நாட்டு மக்களிடமிருந்தே எழக்கூடிய எதிர்வினைகளை குறித்தும் அஞ்சுகின்றன. இதனால் தான், பன்னாட்டு பணநிதியகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய முகமைகள், 40 ஆப்பிரிக்க நாடுகளுக்கு மொத்தமாக $1800 கோடி நிதியுதவி உள்ளிட்ட சில சலுகைகளை அளிக்க தற்போது தயாராகி வருகின்றன. ஆண்டுக்கு 1% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளில் திருப்பியளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், நைஜீரியாவுக்கு $340 கோடி கடனுதவி கிடைத்துள்ளது. ஆனால், இதில் எந்த ஒரு பெருந்தன்மையான உதவியும் கிடையாது. இந்நெருக்கடியை சமாளிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மட்டும் கிடைத்த $3900 கோடி நிதியுதவி, ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவுக்கும் பன்னாட்டு நிதியகம் அளித்த தொகையில் ஏறக்குறைய இருமடங்காகும். அதே சமயம், நைஜீரியாவின் 20 கோடி மக்கள் தொகையோடும், சஹாரா கீழமை ஆப்பிரிக்காவின் 100 கோடிக்கும் மேலான மக்கள் தொகையோடும் ஒப்பிடுகையில், பிரிட்டனின் மக்கள் தொகை வெறும் 6 கோடியே 60 லட்சம் மட்டுமே. பொதுவாக, பன்னாட்டு பணநிதியகம் வழங்கும் நிதியுதவிகள், கடைகோடி மக்களுக்கு சென்று சேருவதில்லை என்றாலும், அக்கடன்களை திருப்பியளிக்கும் சுமை, பாட்டாளி மக்களின் முதுகில் ஏற்றப்படும் என்பதால், இந்நிதியகத்தால் எந்த பயனும் இல்லை. பன்னாட்டு பணநிதியகத்தின் 1% வட்டி விகிதம், அமெரிக்க மைய வங்கியின் தற்போதைய 0.25% வட்டி விகிதத்தை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக இருப்பதாலும், குறிப்பாக, மோசமான வருவாய் வீழ்ச்சியாலும், ஆப்பிரிக்காவிலும், உலகின் இதர நாடுகளிலும் வெளிநாட்டுக் கடன்களை ரத்து செய்வதற்கான கோரிக்கைகள் ஒரு முக்கிய பிரச்சனையாக எழப்போகிறது.

 

பொதுவாக, இந்த நெருக்கடியை பயன்படுத்தி, ஆளும் வர்க்கங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மீது தாக்குதல்களை தொடுக்கக் கூடும். தென்னாப்பிரிகாவின் முதலாளித்துவ சார்பு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அரசு, வானூர்தி துறையில் நிலவும் உலகளாவிய நெருக்கடியை பயன்படுத்தி, தென்னாப்பிரிக்க அரசு விமான சேவைகளை, அரசின் நிதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனத்துக்கு தாரைவார்க்கவும், அதற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பு குரலை நசுக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தென்னாப்பிரிக்கா பிரிவை சேர்ந்த நமது CWI தோழர்கள் தெரிவிக்கிறார்கள். (SAA: A Warning to the Working Class).

 

நைஜீரிய அரசு இந்நெருக்கடியைப் பயன்படுத்தி, குறிப்பாக எண்ணெய் விலை சரிவை காரணம் காட்டி, எண்ணெய் மானியத்தை உயர்த்தியிருக்கிறது. இதனால், இந்நெருக்கடி முடிந்த பின், மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, பெட்ரோல், டீசல் மற்றும் அவை சார்ந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது. நைஜீரியாவின் எண்ணெய் வருவாய் குறைந்திருப்பதால், அந்நாட்டின் மாகாண அரசுகள் தொழிலாளர்களின் ஊதியங்களை விரைவிலேயே குறைக்க ஆரம்பிக்க போகின்றன. ஏற்கனவே, கதுனா மாகாணம், தொழிலாளர்களின் ஊதியங்களை 20% வரை குறைக்கத் துவங்கிவிட்டது. ஊதிய வெட்டுக்களையும், பணி நீக்கங்களையும் வெறும் அரசுகள் மட்டுமின்றி, தனியார் துறையும் அறிவித்து வருகின்றன.

 

உலகின் ஏனைய பகுதிகளைப் போன்றே, ஆப்பிரிக்காவிலும் CWI தோழர்கள் முதலாளித்துவ அமைப்பை எதிர்க்கக் கூடிய இயக்கங்களை கட்டியெழுப்பும் அதேவேளை, கொரோனா தொற்றுக்கு எதிரான அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வென்றெடுக்கவும், உழைக்கும் மக்களின் பாதுகாப்பையும், வாழ்க்கை தரங்களையும் காக்கவும் வெகுஜன இயக்கங்களை கட்டியெழுப்பும் பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு முன்னரே, ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் சுகாதார சேவைகள், போதாமலும், பரிதாபகரமான நிலையிலும் தான் இருந்தன.

 

ஆப்பிரிக்காவில் CWIஇன் பிரச்சாரங்கள்

 

வார்த்தைகள் மட்டும் போதாது என்பதே எங்களது வாதம். கொரோனா நெருக்கடியால் தீவிரமாகி வரும் முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடியையும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அரசின் ஊதிய வெட்டுகள், பணிநீக்கங்கள், செலவு குறைப்பு மற்றும் தனியார்மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களையும் எதிர்கொள்ள ஒரு துணிச்சலான சோஷலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கோரி, இடதுசாரி – உலோக தொழிலாளர்களின் சங்கம், தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான நும்சா, மற்றும் அதன் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் தென்னாப்பிரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களில், மார்க்ஸிய தொழிலாளர் கட்சியை சேர்ந்த நமது தென்னாப்பிரிக்க தோழர்கள் பிரச்சார இயக்கம் நடத்தி வருகின்றனர்.

 

”சுகாதார நெருக்கடி நிலையையும், பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள ஒரு தெளிவான சுயாதீனமான தொழிலாளர் வர்க்க செயல் திட்டத்தை இனியும் வகுக்காமல், இதர முதலாளித்துவ நாடுகளில் அரசு முன்னெடுக்கு பெரிய அளவிலான தலையீடுகளில் ஒரு சதவீதம் கூட, மேற்கொள்ள முன்வராத ஆளும் வர்க்கங்களின் முரட்டுத்தனமான அணுகு முறையின் பின்னால் தொழிற்சங்க தலைவர்கள் அணிவகுத்து நிற்பதை” குறித்து, நைஜீரிய CWI தோழர்கள் தலைமை தாங்கும், நைஜீரிய சோஷலிச கட்சி விமர்சித்தது.  (ALTERNATIVE ACTION PLAN FOR LOCKDOWN).

 

சந்தை பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவத்தின் வரம்புகளை இந்நெருக்கடி ஏற்கனவே காண்பித்து கொண்டிருக்கிறது. முதலாளி வர்க்கங்கள் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக அரசையே சார்ந்திருக்கும் நிலை, தனியார் உடமையின் வரம்புகளை எடுத்துரைக்கின்றது. ஆயினும், முதலாளிகள் தங்களது அரசை, அதன் நிதியாதாரங்களை கொண்டு இலாப அமைப்பை காப்பாற்றிக் கொள்ளவும், தேவைப்பட்டால், போராட்டங்களை ஒடுக்கவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். இது ஒரு இன்றியமையாத கேள்வியை எழுப்புகிறது. தனியார் நிறுவனங்கள் அரசை சார்ந்தே பிழைக்க வேண்டியுள்ளது எனில், முதலாளிகளுக்கான இலாபத்தை உருவாக்கித் தருவதை தவிர்த்து, தனியார் உடமைக்கு வேறென்ன பங்கு இருக்கிறது? பொருளாதாரத்தில் அரசின் பங்களிப்பு அதிகரித்திருப்பதன் மூலம், சமூகவுடமை குறித்து, குறிப்பாக, பொருளாதாரத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் அளவுக்கும், தனி நபர் ஆதாயத்துக்காக இல்லாமல், பெருவாரியான மக்களின் நலன்களுக்கான பொருளாதார திட்டமிடல் குறித்த கேள்வி எழப் போகிறது.

 

அமளி காலம் துவங்கியிருக்கிறது. உலகின் இதர பகுதிகளை போலவே, ஆப்பிரிக்காவிலும் உழைக்கும் மக்கள் இந்நிலையை நிரந்தரமாக சகித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. குறிப்பாக, 19 வயதை சராசரி வயதாகவும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 77% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கும் ஆப்பிரிக்காவில் இதற்கு வாய்ப்பே இல்லை. ஆற்றலையும், கோபத்தையும் தாங்கியிருக்கும் இளைய சமூகமே மாற்றத்துக்கான உந்து சக்தியாக இருக்கப் போகிறது. ஆப்பிரிக்காவில் சுதந்திரத்துக்காகவும், அடிப்படை மாற்றத்திற்காகவும் சக்தி வாய்ந்த இயக்கங்கள் மீண்டும் மீண்டும் உருவாகியிருக்கின்றன. சர்வாதிகார ஆட்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளன என்றாலும், அதன் பிறகு என்ன நடக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.

 

என்றாவது ஒரு நாள் புரட்சி வெடிக்க போகிறது என்பதில் ஐயமிருக்க முடியாது என்பதால், எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் இக்கேள்வி மிக முக்கியமானதாகும். கடந்த காலத்திலிருந்து கிடைத்த்துள்ள படிப்பினைகள் என்ன? சூடான் சில விடைகளை தருகிறது. கொலைகார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல மாதங்களாக நடைபெற்று வந்த வெகுஜன போராட்டத்தின் விளைவாக, 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கொடுங்கோல் ஆட்சி, ஒருவழியாக கடந்த ஆண்டு தூக்கியெறியப்பட்டது. ஒருவகையில், உழைக்கும் மக்களின் கைகளில் அதிகாரம் வந்துவிட்ட போதிலும், அதனை நடைமுறையில் செயல்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒருமித்த கருத்து இல்லை. கடந்த ஆட்சியின் முக்கிய அங்கமான இராணுவ தளபதிகள், இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, எதிர்தரப்பு தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்துவிட்டனர். இதன் விளைவாக அதிகாரத்தின் பெரும் பகுதி இராணுவத்தின் கைகளுக்கு சென்றுவிட்டது.  சூடானில் இன்னும் இரட்டையாட்சியும், நிலையற்ற தன்மையுமே நிலவுகிறது. புரட்சி தோற்கடிக்கப்படவில்லை; போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது; ஆயினும், முதலாளித்துவத்தையும், நிலவுடமை முறையையும் இராணுவம் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இன்றோ, நாளையோ, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சுயாதீனமான இயக்கம் அதிகாரத்தை முழுவதுமாக கைப்பற்றாவிட்டால், முதலாளிகளும், அவர்களது முகவர்களும் தங்களது முழு ஆதிக்கத்தை மீண்டும் நிறுவி விடுவார்கள்.

 

பிரம்மாண்டமான மனித ஆற்றல்

 

ஆப்பிரிக்கா, இயற்கை வளங்களுடன் சேர்த்து பிரம்மாண்டமான மனித ஆற்றலை கொண்டுள்ளது. நைஜீரிய CWI தோழர்கள் கூறுவது போல, ”கொரோனா தொற்றால் குற்றவாளி கூண்டில் நிற்கும் முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து போராடக்கூடிய ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதே சோஷலிஸ்டுகளின் முன்னால் இருக்கும் சவாலாகும். மனித தேவைக்காக அல்லாமல், இலாபத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பு, மனிதனுக்கு மிகவும் தேவைப்படும் சூழலில் அவனை கைவிட்டுவிடும் என்பதை இந்நெருக்கடி காட்டியிருக்கிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூக அமைப்பை – பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் சமூகவுடமையாக்கப்பட்ட ஒரு சோஷலிச அமைப்பையும், சிலரது ஆதாயத்துக்காகவும், பேராசைக்காகவும் இல்லாமல், பெரும்பான்மை மக்களின் தேவைகளையும் அடித்தளமாக கொண்ட அரசும், பொருளாதார அமைப்பும் நமக்கு தேவைபடுகிறது.”

 

இத்தகைய ஒரு செயல் திட்டத்தின் மூலமாக மட்டுமே ஆப்பிரிக்காவை மாற்ற இயலும். அக்டோபர் 1917இல் ரஷ்ய புரட்சியில் நடந்ததை போன்றே, இனிவரும் ஆண்டுகளிலும், ஏகாதிபத்தியம் அதன் பலவீனமான இணைப்புகளில் முறிவதற்கான சாத்தியக்கூறுகள் முழுமையாக உள்ளன. ஒரே ஒரு ஆப்பிரிக்க நாட்டில் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் அரசு அமைந்து, சோஷலிச மறுகட்டமைப்பை துவங்கி, மற்ற நாடுகளின் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் அது விடுக்கும் அழைப்பை அம்மக்கள் ஏற்று, தங்களது நாட்டின் கொடுங்கோல் ஆட்சியாளர்களை வீழ்த்தி, தன்னார்வ ஆப்பிரிக்க சோஷலிச கூட்டமைப்பை உருவாக்க துவங்கிவிட்டால், ஆப்பிரிக்க கண்டம் முழுவதையும் அது மாற்றியமைக்கும் என்பதோடு, உலகம் முழுமைக்கும் அது ஒரு அரைக்கூவலாக அமையும்.

 

உலகில் நிரந்தரமாக நிலவிவரும் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றாலும், முதலாளித்துவ மேட்டுக்குடியினருக்கானதாக அல்லாமல், அனைவரின் நலன்களுக்கானதாக சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமென்றாலும், நாம் இந்த சவாலை எதிர்கொண்டாக வேண்டும்.

About புதிய சோசியலிச இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top