Home / பார்வை / மார்க்சியத்தின் தலை மீது வீசப்பட்ட பனிக்கோடாரி

மார்க்சியத்தின் தலை மீது வீசப்பட்ட பனிக்கோடாரி

-டிராட்ஸ்கி கொலை செய்யப்பட்டு 80 ஆவது ஆண்டு நினைவாக எழுதப்பட்ட கட்டுரை.

வசந்த், புதிய சோசலிச இயக்கம், சென்னை.

 

உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சர்வதேச புரட்சிக்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த மார்க்சியத்தின் குரலை நசுக்கும் பொருட்டு, 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று, அதாவது 80 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வீசப்பட்டது அந்த பனிக்கோடாரி.

சோவியத் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (NKVD) கீழ் இயங்கி வந்த “அரசியல் இயக்குநரகம்” (GPU) என்ற உளவுத்துறை அமைப்பால் ஏவப்பட்ட “ரமோன் மெர்கடெர்” என்ற உளவாளி, தான் எழுதி கொடுத்த கட்டுரையை தோழர் ட்ராட்ஸ்கி உண்ணிப்பாக வாசித்துக் கொண்டிருந்த போது தனது மழைக்கோட்டில் ஒளித்து வைத்திருந்த பனிக்கோடாரியை அவரது தலை மீது வீசினான். கோடாரியின் கூர்முனை 2.8 அங்குலம் ஆழத்திற்கு அவரது மண்டை ஓட்டை பிளந்து மூளைக்குள் இறங்கியது. அடுத்த நாள் அவர் உயிர் நீத்தார். ஒரு உத்தமமான போல்ஷ்விக் லெனினியவாதியை படுகொலை செய்த மெர்கடெருக்கு மெக்ஸிகோ அரசு 20 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கியது. ஸ்டாலின் ”லெனின் கவுரவ விருதை” வழங்கினார்.

ட்ராட்ஸ்கியின் தலை மீது வீசப்பட்ட கோடாரி, உண்மையில் மார்க்சியத்தின் மீது வீசப்பட்ட எதிர்புரட்சி கோடாரியாகும். இந்த சித்தாந்த படுகொலை நடக்கப்போவதை இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஜூன் 8, 1940ஆம் நாள் தான் எழுதிய “என் மரணத்தை நாடும் ஸ்டாலின்” என்ற கட்டுரையில் அவர் முன்னறிவித்திருந்தார். மார்ச் 1939லும், மே 24, 1940லும் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகளிலிருந்து அவர் தப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. ”கம்யூனிச அகிலமும், உளவுத்துறையும்” என்ற கட்டுரையிலும், “என் மரணத்தை நாடும் ஸ்டாலின்” என்ற எழுத்தாக்கத்திலும் சோவியத் அதிகார மையம் தன்னை கொல்லத்துடிப்பது ஏன்? ஆரம்பத்திலேயே தன்னை கொல்லாமல் நாடு கடத்தியது ஏன்? தன்னை கண்டு பயப்படுவது ஏன்? முந்தைய இரு கொலை முயற்சிகளின் போது நடந்த நிகழ்வுகள் என்ன? உள்ளிட்ட பல விவரங்களை விரிவாக அளித்திருக்கிறார். இவற்றில் சிலவற்றை மேலோட்டமாக பார்ப்போம்.

”கிரெம்ளின் அதிகாரவர்க்கமானது நாட்டின் சமூக, அரசியல் மற்றும் சித்தாந்த தேவைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு தன்னுடைய நலன்களை முதன்மைபடுத்துவது, சுயாதீன கருத்துக்களையும், விமர்சனங்களையும் நசுக்குவது உள்ளிட்ட ஏதேச்சதிகார தன்மையை கொண்டதாகும். இத்தன்மையானது, ஸ்டாலினின் தனிப்பட்ட குணாதிசயத்திலிருந்து வருவதல்ல. மாறாக, மக்களுக்கு எதிரான புதிய ஆளும் வர்க்கத்திடமிருந்து வருகிறது.

அக்டோபர் புரட்சியானது ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த இருபெரும் பணிகளை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தது: முதலாவது, உற்பத்தி மூலங்களை சமூகவுடமையாக்கி, திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலம் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்துவது; இரண்டாவது, இப்பொருளாதார நிலையை அடித்தளமாக கொண்டு வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தையும், அதைத் தொடர்ந்து, அதிகாரவர்க்கம் என்ற ஒன்று இல்லாத, மக்களே சமூகத்தை நிர்வகித்துக் கொள்ளக்கூடிய ஒரு சோஷலிச பொன்னுலகை கட்டியமைப்பது. முதலாவது பணி ஓரளவு நிறைவடைந்துவிட்டது; அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் நிலவும் போதிலும், திட்டமிட்டமிட்ட பொருளாதாரம் தனது நிகரற்ற பலத்தை நிரூபித்துள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகும்.

சோஷலிசத்தை நாம் நெருங்க நெருங்க இன்னும் தூரமாக விலகி செல்கின்றது அதிகாரம். இந்த இடைவெளியில் தான் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனது கரங்களில் குவித்துக் கொண்டு, நாட்டு வருமானத்தில் மிகப்பெரும் பங்கை விழுங்கி ஏப்பம் விடும் ஒரு புதிய ஆதிக்க சமூக பிரிவு அக்டோபர் புரட்சியின் அடித்தளத்திலிருந்தே உருவாகிவிட்டது.” இவ்வாறாக, சோஷலிசம் எவ்வளவு தொலைவில் உள்ளதோ, அதிகாரத்துவத்தின் ஆதிக்கம் அவ்வளவு பலமாக நிலவுகிறது. வார்த்தைகளில் கம்யூனிசத்தை வைத்துக்கொண்டு, செயல்களில் அளவற்ற அதிகாரத்தையும், பொருளாதார சலுகைகளையும் குவித்து வருவதால் அதிகாரவர்க்கம் ஆழ்ந்த முரண்பாட்டால் பீடிக்கப்பட்டுள்ளது. அவநம்பிக்கையும், வெறுப்புணர்ச்சியையும் கொண்ட வெகுஜனத்தால் சூழப்பட்டுள்ளதால் அதிகாரத்துவ அமைப்புக்கு ஒரு சிறு பாதகம் ஏற்பட்டால் கூட அதனால் தாங்க முடிவதில்லை. ஆகவே, ஏதேச்சதிகாரமும், கபடங்களும், தலைவனுக்கு துதி பாடுவதும், GPU போன்ற ஒடுக்குமுறை கருவிகளும் அதற்குத் தேவைப்படுகின்றன.

ஸ்டாலின் தலைமையிலான ஏதேச்சதிகாரமானது வழக்கம் போல் கடவுளின் பெயரால் புனிதப்படுத்தப்படுவதையோ, தனிச்சொத்துடமையையோ சார்த்திருக்கவில்லை. மாறாக, கம்யூனிச சமத்துவம் என்ற கருத்தை சார்ந்துள்ளது. தன்னை ஒரு சோஷலிச அரசு என்று சொல்லிக்கொள்வதால், பெருகிவரும் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த இயலாத நிலையில் உள்ளது. ஆகவே, போலியான புகழ்ச்சிகளின் மூலம் தன் மீது சாயம் பூசிக் கொள்வதும், தன்னை விமர்சிப்பவர்களை எதிரிகளாக காட்ட வேண்டியதும் ஆளும் வர்க்கத்தின் தேவையாக உள்ளது. உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும், உடனடியாக முதலாளித்துவ மீட்பாளர்கள் என்று கிரெம்ளின் ஆளும் கூட்டத்தால் முத்திரை குத்தப்படுகிறது.” என்று சோவியத் ஒன்றியத்தின் அதிகாரவர்க்கத்தின் அரசியலை தோழர் ட்ராட்ஸ்கி விளக்குகின்றார். அதிகாரவர்க்கத்தின் இத்தகைய செயல்பாடுகளை புரிந்துக்கொள்ள வேண்டுமெனில், சோவியத் ஒன்றியத்தின் உள்நாட்டு அரசியலை புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஸ்டாலினது முரட்டுதனத்தையும், விசுவாசமற்ற தன்மையையும், அதிகார துஷ்பிரயோக போக்கையும் சுட்டிக்காட்டி அவரை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று லெனின் தனது சாசனத்தில் (ஜனவரி 1923) முன்மொழிந்திருந்தார். சோவியத் அதிகாரவர்க்கமே அவரை தலைமையில் அமர்த்த தயங்கி வந்தது. 1924 வரை ஸ்டாலின் யார் என்று கட்சி வட்டாரத்தில் கூட பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அதிகாரவர்க்கத்தில் கூட அவர் பிரபலமாகவில்லை.

ட்ராட்ஸ்கியின் மீதான மாஸ்கோவின் அதிகாரமையத்துக்கு இருந்த வெறுப்பிற்கு காரணம், அவர் அதற்கு செய்த துரோகம் ஆகும். இந்தத் துரோகம் என்ற சொல்லுக்கு அதற்கே உரிய வரலாற்று பொருள் உண்டு. அதிகார வர்க்கம் தனது சலுகைகளை ட்ராஸ்கி காப்பாற்றுவார் என்று எண்ணியிருந்தது. ஆனால், அவர் உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படுவதற்கு மாறாக, உழைக்கும் மக்களின் நலனுக்காக அதிகாரவர்க்கத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை உணர்ந்தவுடனே அதிகாரவர்க்கம் முற்றிலுமாக ஸ்டாலின் பக்கம் திரும்பியது. ட்ராட்ஸ்கியை துரோகி என்று அறிவித்தது. போல்ஷ்விக் கட்சியை கட்டி எழுப்பி, அக்டோபர் புரட்சியை நடத்தி, சோவியத் அரசையும், செம்படையையும் உருவாக்கியவர்களில் 90 விழுக்காடு புரட்சியாளர்கள் ”துரோகிகள்” என்று முத்திரை குத்தப்பட்டு வெறும் பன்னிரெண்டு ஆண்டுகளில் மொத்தமாக அழித்தொழிக்கப்பட்டனர் என்ற உண்மை தற்செயலானதல்ல. இன்னொரு புறம், இதே காலகட்டத்தில் புரட்சிக் காலங்களில் எதிரணியில் இருந்த அறுதிப்பெரும்பாலானோர் ள்டாலினிய அதிகார அமைப்பில் பதவிகள் வழங்கப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இதே காலகட்டத்தில் கம்யூனிச அகிலமும் சீரழிவுக்கு உள்ளானது. சோவியத் ஆட்சியின் ஆரம்பக்காலங்களில் உள்நாட்டு போரும், அதனுடன் சேர்ந்து பஞ்சம், பெருந்தொற்று என்று ஆபத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து அனைவரையும் சோர்வடைய செய்த போது, பல நாடுகளிலிருந்தும் தன்னலமற்ற, துணிச்சலான புரட்சியாளர்கள் அக்டோபர் புரட்சியிலும், கம்யூனிச அகிலத்திலும் இணைந்தனர். அப்புரட்சியாளர்களில் ஒருவர் கூட ஸ்டாலின் ஆட்சியின் போது கம்யூனிச அகிலத்தில் இல்லை. எண்ணற்ற பதவி நீக்கங்கள், பொருளாதார நெருக்கடிகள், நேரடி கையூட்டுக்கள் மற்றும் கொலைகளின் மூலமாக கிரெம்ளின் கூட்டம் கம்யூனிச அகிலத்தை தங்களது நலன்களுக்காக மட்டும் செயல்படும் ஒரு உபகரணமாக ஆக்கிவிட்டது. தற்போது கம்யூனிச அகிலத்திலும், அதன் உட்பிரிவுகளிலும் உயர் பதவிகளில் இருக்கும் யாரும் அக்டோபர் புரட்சியில் பங்கேற்றவர்கள் அல்ல.

போருக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான யுத்தமானது சர்வதேச அளவில் நடந்தால் மட்டுமே முழுமையான வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதாலும், சோவியத் அதிகாரம் உலகளாவிய உழைக்கும் மக்களின் சகோதரத்துவத்தையும், சர்வதேச ஒற்றுமையையும் சார்ந்திருப்பதாலும், அந்த நாடுகள் ரஷ்யாவின் போர் கூட்டணி நாடா அல்லது பகை நாடா என்பதை கருத்தில் கொள்ளாமல், அனைத்து நாடுகளின் இடதுசாரி தொழிலாளர் இயக்கங்களுக்கும் பணம் உட்பட அனைத்து வகை உதவிகளையும் செய்யவும், சர்வதேச புரட்சிகர இயக்கங்களுக்கு 20 லட்சம் ரூபிள்களை ஒதுக்கவும் முன்மொழிந்து லெனினும் டிராட்ஸ்கியும் கையெழுத்திட்ட தீர்மானத்தை அமைச்சரவை குழு சோவியத் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ஏற்றிருந்தது. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான அதிகாரத்துவத்தின் தரக்குறைவான செயல்கள் வெளிநாட்டு புரட்சிகர அமைப்புகளுக்கு நிதியுதவி என்ற வார்த்தையையே முற்றிலும் கொச்சைப்படுத்துவது போல் இருந்தன. நிதியுதவிகளை வெளிநாட்டு தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கு தனக்கு வேண்டியதை செய்து கொடுக்க வழங்கப்படும் லஞ்சமாக கிரெம்ளின் அதிகார வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்டது. வெளிநாட்டு புரட்சிகர இயக்கங்கள் முற்றிலும் கைவிடப்பட்டன. மாறாக, சில தனிப்பட்ட கம்யூனிச கட்சி தலைவர்களுக்கும் அவர்களது மனைவிமார்களுக்கும் பணமும், நகைகளும் வேறு சில சிறப்பு கவனிப்புக்களும் வழங்கப்பட்டன. தங்களை கேள்வி கேட்கும் தலைவர்கள் ஒதுக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் வழக்கமாக இருந்தது.

உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காகவும், ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ளவும் கம்யூனிச அகிலம் ஒரு பிரச்சார அமைப்பாகவும், உளவுத்துறையின் ஒரு பிரிவாகவும் மாற்றப்பட்டது. அதன் மூலம் தனது எதிரிகளின் மீது அவதூறுகளைப் பரப்பவும், கொலை செய்யவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான நிதி செலவிடப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து ட்ராட்ஸ்கியின் இடதுசாரி தளம் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. தனக்கு ஆபத்து நேரப்போவதை உணர்ந்த அதிகாரவர்க்கம் இடதுசாரி தளத்தின் செயல்பாட்டாளர்களை பொய் வழக்குகளின் மூலம் தொடர்ச்சியாக கைது செய்தும், பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏவியும் வந்தது.

ட்ராட்ஸ்கியை நேரடியாக கைது செய்யவோ, கொலை செய்யவோ முடியாத அளவுக்கு தொழிலாளர்களிடம் அவருக்கு செல்வாக்கு இருந்ததால், அவரை அதிகார வர்க்கம் நாடு கடத்தியது. துருக்கியில் இருந்தபடி, நண்பர்களின் மூலமாக இடதுசாரி தளத்தின் செயல்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், நான்காம் அகிலத்தை உருவாக்கவும் ட்ராட்ஸ்கியால் முடிந்தது. நான்காம் அகிலம் வேகமாக வளர்ச்சியடைய சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவத்தின் கொள்கைகள் ஏதுவாக இருந்தன.

ஆயுதக்குறைப்பு, அமைதி உள்ளிட்ட முழக்கங்களின் மூலம் தொழிலாளர்களின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு, அவர்களை நிராயுதபாணிகளாக்கிவிட்டு சுரண்டல்காரர்களின் வேலையை சுலபமாக்க முனையும் பன்னாட்டு சங்கத்தை புறக்கணிக்க 1919 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் ஒருமனதாக தீர்மானம் ஏற்றிருந்த போதும், ஸ்டாலின் தலைமையிலான அதிகாரத்துவம் பன்னாட்டு சங்கத்தில் உறுப்பு நாடாகியது. உலக தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கங்களை சார்ந்திருப்பதற்கு பதிலாக, முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அந்தந்த நாட்டு தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கங்களை பலவீனப்படுத்தியது. இத்தகைய தொடர்ச்சியான செயல்பாடுகளால் மூன்றாம் அகிலம் பலவீனமடைந்து வந்தது. தனது நிலைப்பாடு பலவீனமடைவதை உணர்ந்த சோவியத் அதிகாரத்துவம், ட்ராட்ஸ்கியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவரை கொல்லத் துடித்தது. முதலில் அவரது ஆதரவாளர்களையும் அவரது பிள்ளைகளையும் கொன்றது. பின்னர் தொடர்ச்சியான சில முயற்சிகளுக்கு பிறகு ட்ராட்ஸ்கியை கொன்றது.

கொலைகளாலும், அவதூறுகளாலும் மார்க்ஸிய சர்வதேசியத்தை தடுத்து நிறுத்த இயலவில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. இன்று உலகம் முழுவதும் ஸ்டாலினிய அதிகாரத்துவ கட்சிகள் முற்றிலும் பலமிழந்து முதலாளித்துவ கட்சிகளாக திரிந்துவருகின்றன. இவர்களுக்கு மாற்றான ஒரு பலமான புரட்சிகர சர்வதேசியத்தை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் அவசிய தேவையாகும்.

About T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top