இரஸ்ய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் (Russian Social Democratic Labour Party) இரண்டாவது காங்கிரஸ் 1903ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெல்ஜியத்திலும் இங்கிலாந்திலுமாக நிகழ்ந்தது. ஒரு புரட்சிகரக் கட்சியை வடிவமைப்பது எவ்வாறு என்ற பல்வேறு விவாதங்கள் இம்மாநாட்டில் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் பங்குபற்றிய 51 பிரதிநிதிகள் மத்தியில் பல்வேற முரன்பாடுகள் ஏற்பட்டது. குறிப்பாக லெனினின் தலைமையின் கீழும் மார்டோவ் தலைமையின் கீழும் இரண்டாக பிரிந்தனர் பிரதிநிதிகள். எம்முறையில் கட்சியைக் கட்டுவது என்று லெனின் வைத்த கருத்துகளுக்கு எதிராக 28 பிரதிநிதிகளும் ஆதரவாக 23 பிரதிநிதிகளும் வாக்களித்திருந்தனர். வேறும் பல முரன்பாடுகள் காரணமாக 7 பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தததைத் தொடர்ந்து 2 வாக்குகள் வித்தியாசத்தில் லெனினின் வாதம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து லெனின் ஆதரவு பிரதிநிதிகள் தம்மை பெரும்பான்மையர் எனவும் (இரஸ்ய மொழியில் பொல்சுவிக்குகள்), மற்றயவர்கள் தம்மை சிறுபான்மையர் எனவும் (இரஸ்ய மொழியில் மென்சுவிக்குகள்) அழைத்துக்கொண்டணர்.
இத்தகைய பிளவு ஏற்பட்டபோதும் இத்தருனத்தில் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் மத்தியில் ஒன்றுபட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்து பலமாக இருந்தது. லெனினை எதிர்த்த மார்டோவ் கட்சிப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிற்கு லெனினுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. காலம் செல்லச் செல்ல மேலதிக அரசியல் வேறுபாடுகள் இவர்கள் மத்தியில் வளர ஆரம்பித்தது. ஒரு ஆண்டுக்குள்ளேயே பொல்சுவிக்குகளுக்கும் மென்சுவிக்குகளுக்கும் இடையில் பல்வேறு அரசியில் வெளிப்பாடுகள் பலப்படத் தொடங்கிவிட்டது. இரஸ்யாவில் எவ்வகையிற் புரட்சி நடக்கும் என்பது பற்றிய முரன்பாடு இதில் ஒன்று.
முதலாளித்துவ நாடுகளில் சோசலிச புரட்சி நடக்கும் என்பதை ஏற்றுக்கொண்டாலும் மிகவும் பின்தங்கிய நாடான இரஸ்யாவில் முதலாளித்துவ சனநாயக புரட்சிதான் நடக்க முடியும் என மென்சுவிக்குகள் வாதிட்டனர். அதாவது முதலாளித்துவ சனநாயகமுறை உருவாகி முதலில் முதலாளிகள் கையில் அதிகாரம் கைமாறும். இந்தக் ‘கட்டத்தை’ தாண்டிய பின்புதான் தொழிலாளர் புரட்சி முன்னெடுக்கப்படும் என மென்சுவிக்குகள் வாதிட்டனர்.
இரஸ்யாவில் புரட்சியின் போது முதலாளித்துவப் பண்பு மேலோங்கும் என்பதை ஏற்றுக்கொண்ட பொல்சுவிக்குகள்- பாட்டாளி மக்கள் மற்றும் விவசாயிகளின் தலைமையில் சனநாயக குடியரசை உருவாக்குவது புரட்சியின் கடமையாக இருக்கவேண்டும் என வாதிட்டனர்.
மென்சுவிக்குகளின் சமூகம் பற்றிய ஆய்வு மிகவும் மேலோட்டமான ஆய்வாக இருந்தது. அவர்கள் “உண்மையான” சனநாயகத்தைத் தேடியலைந்தார்கள். சின்னச் சின்ன சனநாயக மாற்றங்களைக் கண்டுபிடித்து அதைப் பெரிதுபடுத்தி தமது வாதங்களுக்கு ஆதரவு தேடினர் மென்சுவிக்குகள். மாறாக பொல்சுவிக்குகள் புரட்சிகர சனநாயகத்தின் ‘சக்தியின்’ மேல் தமது முழு நம்பிக்கையையும் குவித்து வைக்கவில்லை. புரட்சியில் தொழிலாளர்கள் வகிக்கும் பங்கு பற்றி அவர்கள் அழுத்திப் பேசினர். இருப்பினும் மில்லியன் கணக்கில் பரந்திருக்கும் இரஸ்ய விவசாயிகளின் உதவியின்றி புரட்சியை முன்னெடுத்துச் செல்வது கடினம் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். இவ்வகையில் புரட்சிக்கிருந்த முதலாளித்து சனநாயக பண்பை அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இக்கால கட்டத்தில் இந்த இரண்டுவகை விவாதங்களையும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார் லியான் ட்ரொட்ஸ்கி. சில முரன்பாடுகளின் போது மென்சுவிக்குகளுக்கு ஆதரவாகவும் வேறு பல விசயங்களில் பொல்சுவிக்குகளுக்கு ஆதரவாகவும் ட்ரொட்ஸ்கி பேசியிருக்கிறார். இவர்களுக்கிடையிலான முரன் சிறு சிறு விசயங்கள் சார்ந்தது என் எண்ணிய ட்ரொட்ஸ்கி சழுகம் பற்றிய மார்க்சிய ஆய்வும் – புரட்சி எவ்வாறு நிகழும் என்ற வர்க்க- வரலாற்று ஆய்வும் முக்கியம் என கருதியிருந்தார். அந்த அடிப்படையில் மென்சுவிக்குகளும் பொல்சுவிக்குகளும் முதலாளித்துவ சனநாயக புரட்சி என்ற தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தமையால் அவர்கள் தமக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கிக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்ததது என அவர் நம்பியிருந்தார். இவர்களுக்கிடையிலான பிளவு எவ்வளவு தூரம் ஆழமாகப் போகும் என்பதை அவதானிக்கத் தவறியிருந்தார் ட்ரொட்ஸ்கி. தொழிலாளர்கள் தமது புரட்சியை சனநாயக வரம்புக்குள் நிறுத்திவிட முடியாது என்ற புறநிலை யதார்த்தம் உருவாகத் தொடங்கும் பொழுது இவர்களுக்கிடையிலான பிளவு சிதைந்துபோகும் என தான் கருதியிருந்தது தவறு என்பதை ட்ரொட்ஸ்கி பின்பு ஒப்புக்கொண்டுள்ளார்.
பொல்சுவிக்குகள் தமது கட்சியைப் பலமாக கட்டிக்கொள்வதற்காக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த வேளை மென்சுவிக்குகள் மேலும் மேலும் சந்தர்ப்பவாதிகளாக மாறிக்கொண்டிருந்தனர். 1917ல் புரட்சி வெடித்தபோது அதை முன்னெடுத்துச் செல்லத் தக்க சக்திவாய்ந்த சனநாயக மத்தியத்துவ அமைப்பாக பொல்சிவிக்குகள் மாறியிருந்தனர். தொழிலாளர் புரட்சியை வெற்றி நோக்கி முன்னெடுத்துச் செல்லத்தக்க வல்லமை பெற்ற சக்தியாக பொல்சுவிக்குகள் மாறியிருந்த அதே வேளை சனநாயக கடமைகளை மட்டும் நிறைவேற்றும் நோக்குள்ள பலவீனமான அமைப்பாக மாறியிருந்தனர் மென்சுவிக்குகள். இதுபற்றிய சரியான அவதானத்தை தனது நிரந்தரப் புரட்சி புத்தகத்தின் முன்னுரையில் வைத்திருப்பார் ட்ரொட்கி. இப்புத்தகம் 1904 -1906 காலப்பகுதியில் எழுதப்பட்டது. 1905ம் ஆண்டு நடந்த புரட்சியின் போது சோவியத்துகளின் தலைவராக ட்ரொட்ஸகி இருந்தார். அந்த அனுபவத்தின் படிப்பினைகளையும் இப்புத்தகத்தில் காணமுடியும். புரட்சி பற்றி 1903ம் ஆண்டு காங்கிரஸ் கால கட்டத்தில் ட்ரொட்கி கொண்டிருந்த கருத்துக்களை பின்வருமாறு அவர் சுருக்கிக் கூறியிருப்பார்.
முதலாளித்துவப் புரட்சிப் பண்புகளோடு ஆரம்பிக்கும் புரட்சி விiவில் சக்திவாய்ந்த வர்க்க முரன்களை முன்தள்ளும். ஒடுக்கப்படும் மக்களினை அடிப்படையாக கொண்ட வர்க்கத்திடம் அதிகாரம் கைமாறுவதன் மூலம் மட்டுமே புரட்சியின் இறுதி வெற்றி சாத்தியமாகும். பாட்டாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் அவர்கள் தமது செயற்திட்டத்தை முதலாளித்துவ சனநாயக எல்லைக்குள் மட்டும் குறுக்கிவிட முடியாது. இரஸ்யப் புரட்சியை ஒட்டுமொத்த ஜரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியாக முன்னெடுத்துச் செல்வதன் மூலமே புரட்சியின் இறுதி வெற்றி நோக்கி நகர முடியும். அந்த அடிப்படையில் முதலாளித்துவ சனநாயக செயற் திட்டத்தை தாண்டிய – மற்றும் இரஸ்ய தேசிய எல்லைகள் தாண்டிய சோசலிச புரட்சியாக விரிவடைய வேண்டியிருக்கும். இரஸ்யாவிற் புரட்சி நிகழ்ந்து பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றும் தற்காலிக நிலையைத் தாண்டி அதிகாரம் ஒட்டுமொத்த ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களுக்கு மாற்றப்படவேண்டும். ஜரோப்பிய தொழிலாளர்கள் மந்த கதியில் இயங்குவார்களேயானால் ஜரோப்பிய எதிர் புரட்சிகரச் சக்திகள் இரஸ்ய புரட்சியை நடக்கவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசை அவர்கள் அனுமதிக்கப்போவதில்லை. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சனநாயக அரசு என்ற பண்பில் இருந்து இரஸ்ய அரசை பின்னோக்கித் தள்ளும் வேலையை அவர்கள் செய்வர். அதனாற்தான் இரஸ்ய நாட்டுக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றும் தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ சனநாயக எல்லைக்குள் மட்டும் நின்றுவிட முடியாது. அவர்கள் நிரந்தரப் புரட்சி செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். சமூக சனநாயகவாதிகள் முன்வைக்கும் குறைந்த பட்ச கூடிய பட்ச கோரிக்கைகளுக்கிடையிலான இடைவெளியைப் புரட்சி தகர்க்க வேண்டும். அதையும் தாண்டி தீவிர புரட்சிகர சமூகச் சீர்திருத்தங்களை செய்யும் அதே வேளை மேற்கத்தேய தொழிலாளர்களின் ஆதரவையும் அவர்கள் திரட்டவேண்டும்.
மேற்சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே அவரது நிரந்தரப்புரட்சி என்ற புத்தகம் எழுதப்பட்டது. தத்துவத்தின் பரீட்சை வரலாற்றனுபவம் என்பார் ட்ரொட்ஸ்கி. நிரந்தரப்புரட்சி புத்தகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை 1917ம் ஆண்டு நிகழ்ந்த அக்டோபர் புரட்சி வரலாறு நிரூபித்தது. தொடர்ந்தும் அக்கருத்துக்களின் சரித்தன்மைகள் பலதை தொடர்ந்து வரலாறு நிரூபித்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம்.