Home / இரஸ்ய புரட்சியின் வரலாறு / இரஸ்ய புரட்சியின் வரலாறு -அறிமுகம்

இரஸ்ய புரட்சியின் வரலாறு -அறிமுகம்

குறிப்பு:
 
1905ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புரட்சியின் போது சோவியத்துகளின் தலைவராகப் புரட்சிக்காரர்களுக்கு அறிமுகமானவர் லியோன் ட்ரொட்ஸ்கி. பின்பு 1917ல் நடந்த ரஷ்யப்புரட்சியின் போது அதன் முன்னணித் தலைவராகவும் – புரட்சிக்குப் பின் செம்படையைக் கட்டிப் புரட்சியைப் பாதுகாத்தவராகவும் – இருந்த ட்ரொட்ஸ்கி புரட்சிக்குப்பின் எழுந்த நிர்வாக அதிகாரம் புரட்சியை விழுங்குவதற்கு எதிராகக் கடும் யுத்தத்தைச் செய்ய வேண்டியிருந்தது. இடதுசாரிய எதிரணியில் நின்று ஸ்டாலினிஸ்டுகளின் அதிகாரமயமாக்கலைக் கடுமையாக எதிர்த்த ட்ரொட்ஸ்கி ரஷ்யப் புரட்சியின் லாபங்களையும் அதன் நற்பெயரையும் காப்பதற்காகக் கடுமையாகப் போராடவேண்டியிருந்தது.
 
ஸ்டாலிஸ்டுகளுக்கு எதிரான கடும் போராட்டத்தின் பலனாக ட்ரொட்ஸ்கி போல்சுவிக் மத்திய குழுவில் இருந்து 1927ம் ஆண்டு விலத்தப்பட்டு 1928ம் ஆண்டு கசக்கிஸ்தானில் இருக்கும் அல்மா அட்டாவுக்கு நாடு கடத்தப்பட்டார். 1929ல் சோவியத் யூனியனில் இருந்தே துரத்தப்பட்டார். இவ்வாறு துரத்தப்பட்ட ட்ரொட்ஸ்கி துருக்கியில் வாழ்ந்த ஒரு வருட காலப்பகுதியில் இப்புத்தகம் எழுதப்பட்டது. ஸ்டாலினிஸ்டுகளின் துரோகப்பட்டம் மற்றும் தூற்றுதல் திரிபுகளுக்கு எதிராக உண்மை விபரத்தை எழுத வேண்டும் – ரஷ்யப் புரட்சியின் உண்மை வரலாறு ஸ்டாலினிஸ்டுகளால் கறைபடிந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும்-என்ற உந்துதலில் இப்புத்தகம் எழுதப்பட்டது.
 
பின்வருவன இப்புத்தகத்தின் மேலோட்டமான தழுவல் மட்டுமே.
 
அறிமுகம்
 
நடுநிலையில் இருந்து வரலாறை எழுதுகிறோம் எனப் பாவனை காட்டுபவர்களின் அடிப்படை கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியது. குறிப்பாகக் கொந்தளிப்பான புரட்சிகர வரலாற்றுக் கால கட்டத்தை மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு பார்க்க முடியாது. சமூகம் கூர்மையாகப் பிளவுபடும் இத்தருணத்தில் மதில்மேல் நிற்பது மிகவும் ஆபத்தானது. தங்களை நாலு சுவத்துக்குள் அடைத்துக்கொண்டு -எந்தப் பக்கம் வெல்லும் பார்க்கலாம்- என்ற நோக்கில் பதுங்கியிருந்தவர்கள் தான் கூரிய வரலாற்றுத் திருப்புமுனைக் கட்டத்தில் நின்றுகொண்டு -நடுநிலை- என்று பேசுபவர்களாயிருக்கிறார்கள். வரலாறை நுணுக்கமாகப் படித்துணர விரும்புபவர்கள் இந்த ஏமாற்று நடுநிலைவாதிகளின் கருத்துகளைப் பொருட்படுத்த முடியாது. வரலாற்றாசிரியர் தகவல்களை விஞ்ஞான பூர்வமாக அணுகவேண்டும்.சம்பவங்களுக்கிடையிலான தொடர்புகளை அறிய முற்பட்டு அவற்றுக்குப் பின்னியங்கும் இயக்கத்தையும் விதிகளையும் வெளிக்கொண்டுவரக்கூடிய திறமை சிறந்த வரலாற்றாசிரியருக்கு உண்டு.
 
1917ம் ஆண்டு நிகழ்ந்த ரஷ்யப் புரட்சியில் முக்கிய பங்களித்த ட்ரொட்ஸ்கி அந்த வரலாறை எழுதியிருக்கிறார். ஒரு வரலாற்றுச் சம்பவத்தில் முக்கிய பங்களித்த ஒருவர் அச்சம்பவத்தைப் பற்றி எழுதும் பொழுது சார்பின்றி எழுதுவது சிரமமான விசயமே. இருப்பினும் வரலாறு பற்றிய விஞ்ஞான பூர்வ உணர்தலுடன் புறநிலைச் செயற்பாடுகளைச் சரியாக அவதானிக்கக்கூடிய ஒருவரால் தனது பங்களிப்பையும் கூட தூர நின்று பார்த்து எழுதமுடியும். தனது அனுபவத்தில் இருந்து ஆழமான புரிதல்களை ஏற்படுத்திக் கொண்ட ட்ரொட்ஸ்கி தனது சார்பற்ற விஞ்ஞான ரீதியான அணுகுமுறை மூலம் இவ்வரலாற்றுக் காலகட்டம் பற்றிய ஆழமான மற்றும் நுணுக்கமான அவதானங்களை இப்புத்தகத்தில் முன்வைத்துள்ளார்.
 
1917க்கு முற்பட்ட சார் மன்னர் கால ரஷ்யா வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்தது. அக்காலத்தில் 150 மில்லியன் மக்கள் வாழ்ந்த இந்தப் பின்தங்கிய நாட்டில் எவ்வாறு பாட்டாளி மக்கள் புரட்சி நடந்தேறியது? மற்றைய வளர்ச்சியடைந்த நாடுகளில் நிகழ்வதற்கு முன்பாக ரஷ்யாவில் இப்புரட்சி நிகழ்ந்தமைக்கான தனிப்பட்ட காரணங்கள் என்ன? 1917ல் எட்டு மாதத்திற்குள் எவ்வாறு நாடு தலை கீழாக மாறியது? உலக வரலாறு காணாத இந்தக் கூர்மையான வரலாற்றுத் திருப்புமுனைக்குப் பின்னால் இருந்த குறிப்பிடத்தக்க காரணங்கள் வரலாற்றியக்கங்கள் எவை? இப்புரட்சி எவ்வாறு நிகழ்ந்தது?
 
வரலாறுக்குள் மக்கள் தம் நுழைவை ஏற்படுத்தும் செயற்பாடு புரட்சி என்பார் ட்ரொட்ஸ்கி. அரசுகள் தம்மை மக்களுக்கு மேலாக உயர்த்திப் பிடித்துக் கொள்கின்றன. மந்திரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுசார் ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் தமது வரலாறாக அவ்வரலாறை எழுதிச் செல்கிறார்கள். இதை மறுத்து – அதைத் தூக்கி எறிந்து மக்கள் தம் வரலாறைப் பேசும்படி பணிக்கும் எழுச்சியாக இருக்கிறது புரட்சி. வரலாற்றில் மக்களின் நுழைவு பழைய விதிகளை தூக்கி எறிந்து புதிய நடைமுறைக்கான அடித்தளத்தை ஏற்படுத்துகிறது. மாற்றத்துக்கான தேவையின் உணர்வினால் மட்டும் இது நிகழ்வதில்லை. அரசதிகாரத்திற்கெதிரான எதிர்ப்பின் மூலம் மக்கள் மாற்றத்துக்கான தேவையை எல்லாக் காலங்களிலும் பதிந்து வருகிறார்கள். மக்கள் தம் அதிருப்தியை எதிர்ப்பரசியல் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தித்தான் வருகிறார்கள். ஆனால் இதிலிருந்து மாறுபட்ட அசாதாரணமான நிலமை தான் அவர்களை எழுச்சி நோக்கித் தள்ளுகிறது. ஆக மக்களின் முன்னோக்கிய மனநிலையில் இருந்து மட்டும் புரட்சி நிகழ்வதில்லை. மாறாக அவர்தம் ஆழமான பின்தங்கிய மனநிலையின் வெடிப்பாகவும் நிகழ்கிறது புரட்சி.
 
முன்தீர்மானிக்கப்பட்ட திட்டமிடல்களுடனோ அல்லது ஒரு தனிப்பட்டவரின் அல்லது ஒரு கட்சியின் தனிப்பட்ட அபிலாசைகளுக்கு ஏற்பவோ மக்கள் புரட்சி செய்ய முன்வருவதில்லை. மாறாகப் பழைய விதிகளை இனிமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் மக்கள் திடீர் எழுச்சிக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு எழுச்சிக்குள்ளாகும் மக்களியக்கம் பல்வேறு கட்டங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. புரட்சியின் வௌ;வேறு கட்டங்கள் அக்கால கட்டங்களின் ஆதிக்கத்துக்கு வரும் கட்சிகளினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. இந்த மக்கள் இயக்கம் புறநிலைத் தடைகளை எதிர்கொள்ளும் பொழுது புரட்சிக்கு எதிர் நிலை தோன்றுகிறது. இந்தத் தடைகளால் ஏற்படும் ஏமாற்றம-; மனச் சோர்வு- அதனால் ஏற்படும் அலட்சியம் என்பன எதிர்ப் புரட்சியைப் பலப்படுத்துகிறது. இத்தகைய அசைவுகளைச் சரியாக அவதானிப்பதன் மூலம்தான் நாம் பல வரலாற்று விதிகளை அறிந்து கொள்ள முடியும். கட்சி மற்றும் கட்சித் தலைமை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். நீராவியால் உந்தப்பட்டு இயங்கும் இயந்திரம் போல் வரலாற்றில் புரட்சியை இயக்குவதற்கு கட்சி முக்கியமானது. ஆனால் நீராவி இன்றி இயந்திரம் இயங்க முடியாததுபோல் மக்களின் எழுச்சியே அடிப்படை உந்து சக்தியாக இயங்குகிறது. ட்ரொட்ஸ்கி இந்த இயக்கங்களை மிக அவதானமாக இப்புத்தகத்தில் பதிந்துள்ளார்.
 

About T

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top